Monday, 28 January 2019

கைமலரோ எழுதிடும் நற்றமிழே!


பன்னிருகை வேலவனே பைந்தமிழின் காவலனே
உன்னிருவிழி யருளோ உலகினைக் காப்பதுவோ
நின்னிருதாள் பணிந்தே நினைவினி லெனையிழந்தே
என்னிருகை மலரோ எழுதிடும் நற்றமிழே!
இனிதே,
தமிழரசி.

Sunday, 20 January 2019

மனதினில் இருத்தி வைப்போம்!

புங்கைப்பதி வாழ் மக்களாய் நம் 
          புன்னமை யெலாம் போட் டெரிப்போம்
மங்கலங்கள் நிறைந்து வாழ்வதற்கு நல்
          மானுடப் பிறவி எடுத்து வந்தோம்
பங்கங்கள் அள்ளிச் சொரிந்திடி னவை
          பாங்குடன் வந்தே யெமைச் சேரும்
எங்களுயிர் மூச்சே மரஞ்செடி கொடி
          என்பதை மனதினி லிருத்தி வைப்போம்.

நன்றே செய்யினும் இன்றே செய்க
          நானிலம் எங்கனும் எம் ஊரே
அன்றே சொன்ன மெய்யுரை எனினும்
          அகமது நாடும் நம் ஊரை
கன்றே பசுவை அழைத்திடல் போல்
          கனிந்தே காணும் நற்கனவில் மன
மன்றினி லாடும் புங்குடுதீவி னுயர்
          மாண்பே எம்முயிர்க் காற்றதுவாய்!
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
நேற்றைய முகநூல் செய்தி தந்த தாக்கத்தால் பிறந்த கவிதை. நான் கடந்த 40 வருடங்களாக வெளிநாட்டில் வாழ்ந்த போதும் எந்நாளும் என் மனமேடையில் அலைமோதுவது நம் நாடே. என் முன்னோரே புங்குடுதீவில் பிறந்தார்கள். நான் பிறக்கவும் இல்லை வளரவும் இல்லை. ஆனால் என் கால்கள் புங்குடுதீவைச் சுற்றி பலமுறை 'அடி' அளந்திருக்கின்றன. ஒவ்வொரு இடமாகக் கீறிக்காட்டி புங்குடுதீவின் வரலாற்றை என்னால் சொல்ல முடியும். உலக உயிர் நேயத்தையும் புங்குடுதீவு என்னும் எம்முயிர்க்காற்றையும் என்னுள் சுவாசிக்க வைத்த என் முன்னோர்க்கு இக்கவிதையை புங்குடுதீவாளாகப் படைக்கிறேன். புங்குடுதீவிலேயே பிறந்து வாழ்வோர் நம்மூரின் வளர்ச்சிக்குத் தடை செய்வது நன்றல்ல.

Friday, 18 January 2019

தெய்வவேல் தொடுத்தே!



மாயவலைப் பட்டழுந்தி யென்
          மனமுருகக் கற்றிலேன்
தூயதிருவடி தோய்வார் தம்
          தகைமை நினைத்திலேன்
ஆயககலை யறுபத்துநான்கும் நன்
          காய்ந்து அறிந்திலேன்
தீயகுணங்கள் தீய்த்தருள் உன்
          தெய்வவேல் தொடுத்தே!
இனிதே,
தமிழரசி.

Monday, 14 January 2019

வாழிய! தமிழென உரைப்பீரே!!



திங்கள் மும்மாரி பொழிந்திட
           தண்டலை மயில்கள் ஆடிட
பூங்குயிற் சோலையில் கூவிட
          குருகுகள் கொட்டம் அடித்திட

மாங்கன்று துள்ளிக் களித்திட
          மலையினில் அருவி பாய்ந்திட
பொங்கும் பூம்புனல் பெருகிட
          பச்சை செந்நெல் விளைந்திட

எங்கள் தேயமெழில் பூத்திட
          எங்கெங்கும் கல்வி வளர்ந்திட
உங்கள் செல்வங்கள் செழித்திட
          உள்ளமும் இன்பத்தில் திளைத்திட

தையிற் பொங்கும் தையலரே!
          தமிழின் சுவையை ஊட்டி
வையம் முழுதும் படைப்பீரே!
          வாழிய! தமிழென உரைப்பீரே!!
இனிதே,
தமிழரசி

Saturday, 12 January 2019

பண்பான எழுத்தாளர்கட்கு!



எழுத்தாளர்கட்கு அதுவும் இணையத்தள எழுதாளர்கட்காக இதனைப் பதிவு செய்கிறேன். இன்றைய உலகில் ஊழல் எங்கும் நிறைந்தே இருக்கிறது. பெரும் பணத்தை, பொருளை பிறர் அறியாதவாறு சுரண்டுதல், கையூட்டுக் கொடுத்தல், இலஞ்சம் பெறுதல் மட்டுமல்ல ஓர் எழுத்தாளரின் எழுத்தைவரிக்கு வரிதிருடுதலும் ஊழலே. முறையற்ற செயலை ஊழல் என அழைக்கிறோம். ஊழ் + அல் = ஊழல். ஊழ் என்பது முறை, அல்லது விதி எனப் பொருள்படும். அதனால் முறையற்ற, விதியல்லாத செயற்பாடு ஊழலாகிறது. எழுத்து ஊழலைக் களை எடுக்க வேண்டிய கடப்பாடு எழுத்தாளர்களாகிய எமக்கு இருக்கிறது. நன்றே செய்வதானால் இன்றே செய்வது நல்லதல்லவா!

என்னை எனது எழுத்தை அறிந்தவர்கள் இருப்பினும் அறியாதவர்களுக்காக

சாலினிஎன்ற பெயரில் சிறுவயதிலிருந்து எழுதுகிறேன். நச்செள்ளை, சிட்டு, நீரா எனப் பல புனை பெயர்களில் பல பத்திரிகைகளிலும் இதழ்களிலும் எழுதியிருக்கிறேன். அப்படி எழுதிய என்னை எனது சொந்தப் பெயரில் எழுத வைத்தவர் Padmasri Dr Jhon Maar அவர்கள். என்னைத் தெரிந்த அவருக்கு நான் சாலினி என்ற பெயரில் எழுதுவது தெரியாது. (அவருக்கு மட்டுமல்ல பலருக்குத் தெரியாது). அவர் தமிழிசையைப் பற்றி [யாழ், இராகம்] சாலினி என்ற பெயரில் நான் எழுதிய ஆய்வுக்கட்டுரையைப் படித்திருக்கிறார். இலண்டன் பாரதிய வித்தியபவன் திருமதி சிவசக்தி சிவனேசன் மூலம் சாலினி யார் என்பதை அறிந்து, “ஆய்வுக்கட்டுரைகளை புனை பெயரில் எழுதவேண்டாம்என என்னிடம் சொன்னார். அவர் சொன்ன காரணம் எனக்கு ஏற்புடையதாக இருந்ததால் அதன் பின்னர் புனைபெயரில் எழுதுவதைத் தவிர்த்து வருகிறேன். 

2007ல்திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்விஎனும் நூலையும் 2014ல்ஆசைக்கவிதைகள்என்ற நூலையும் வெளியிட்டேன். இந்நூலுக்கு சிறந்த கவிதைக்கான பரிசும் கிடைத்திருக்கிறது. நான் எழுதியவற்றை இணையத் தளத்தில் ‘இதழ்எனும் எனது வலைப்பூவில் October 2011ல் இருந்து பகிர்ந்து கொள்கிறேன். உலகெங்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். 

புன்னை மரத்தைப் பற்றி நான் முன்பு எழுதிய கட்டுரையில் 
மன்றத்துப் புன்னை போல மரம்படு துயரம் எய்தி
என்ற திருநாவுக்கரசர் தேவாரத்தை எழுதியிருந்தேன். அக்கட்டுரையில் அத்தேவாரம் எந்தத் திருமுறை என்று போட்டிருக்கிறேன் என்பதைப் பார்ப்பதற்காக [வெளிநாடு சென்றிருந்த நேரத்தில்] மரம்படு துயரம் என Googleல் அடித்தேன்.

அடித்தவுடன் முதலாவதாக ஆங்கிலத்தில் “Seppadu viddhai: Seer Mevum Nunmozi” என இருந்தது. ‘செப்படு வித்தைசீர்மேவும் நுண்மொழிக்கும் மரம்படு துயரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கும் என்பதை அறியும் விருப்பத்தில் அதனை அழுத்தினேன். விற்பனைக்காகப் போட்டிருந்த புத்தகம் ஆதலால் நேரடியாக மரம்படு துயரம் இருந்த பக்கத்திற்குச் சென்றது. எழுத்துக்கு எழுத்து எந்த ஒரு மாற்றமும் இன்றி நான் எழுதியவை அப்படியே இருந்தன. 

அக்கட்டுரையை 2009ல் ஈழத்தில் நடந்த போரின் பின் நம் நாட்டு விதைவைகள் வாழ்வுக்கு புன்னை மரம் உதவும் என்ற கருத்தில் எழுதினேன். புன்னை காலம் போகப்போகக் கூடுதலாகக் காய்ப்பதால் விதைவைகளுக்கு வயதாக ஆகக் கூடுதல் வருமானம் பெறலாம் என்பதை 2010ல் இலண்டன் புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தாரிடமும் எடுத்துச் சொன்னேன். புங்குடுதீவில் புன்னை மரங்களை நடும்படி கூறி கட்டுரையின் ஒரு பகுதியையும் கொடுத்தேன். அவர்களில் எவருக்காவது அது ஞாபகம் இருக்கும். எனது வலைப்பூவில் October 2011ல்சங்கத்தமிழரின் மரநேயமும் புன்னைமரமும்எனும் தலைப்பில் அதனைப் பதிவிட்டேன்.

செப்படுவித்தைக்காரர்[மானெக்ஷா] என் பதிவுகளிலிருந்து எத்தனை பதிவுகளை எடுத்தார் என்பதை முழுவதும் அறிய முடியவில்லை. அவரின் எழுத்துநடையைப் பார்க்கும் போது பலரிடமிருந்து வெட்டி ஒட்டி [cut and paste] புத்தகம் ஆக்கியிருக்கிறார் என்பதை அறியலாம்.


இதில் முதற்பந்தியில் இருந்து அதிலும் "மரங்கள் இல்லையேல்... மற்றோரின் நிலை என்னாவது?" வரை  நான்  இதழில் எழுதியதில் இருந்து வெட்டி ஒட்டியது.  இரண்டாவது பந்தியிலிருந்து செப்படு வித்தைக் காரருடையது. இப்பந்திகளின் எழுத்துநடையில் ஏற்படும் மாற்றமும் தமிழும் இருவரது எழுத்தாற்றாலின் வேறுபாட்டைக் காட்டும். எனது 'இதழ்' வலைபூவில் கீழேயுள்ள links களில் இருந்து வெட்டி ஒட்டியுள்ளார்.

1. ‘சங்கத்தமிழரின் மரநேயமும் புன்னைமரமும்’ - 2009ல் எழுதியது. ILC Tamil Radioவிலும் சொன்னேன்.



2. ’சிறுசெடி என்று கிள்ளி எறியாதீர்’ - 2017ல் பதிவிட்டது

3.’ஒண்தமிழரின் ஓணத்திருவிழா’ - 2008ல் எழுதியது.

4. ‘குறள் அமுது 16’ - 2012 ILCTamil Radioவிலும் சொன்னேன்.

5. ‘குறள் அமுது 51’ - 2013 தைப்பொகலுக்கு ILC Tamil Radioவிலும் சொன்னேன்.

6. ‘கற்பகத்தின் பூங்கொம்போ’ - 1999ல்கலசம்இதழில் எழுதியது.

7. ‘உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை’ - 2013 தைப்பொங்கலுக்குப் பகிர்ந்தது.

8. ‘சங்ககால உணவு உண்போமா! 2’ - 2017ல் இதழில் இட்டது.

9. ‘பார்த்தெடுக்க வேணுமெடி’ - 2014ல் பகிர்ந்தது. 
எனது ஆசைக்கவிதைகள் புத்தகத்தின் 33ம் பக்கத்திலும் இருக்கிறது.

10. ‘நன்னகர் துலங்க வளர் கந்தவேளே!’ - 2013ல் இட்டது.

மேலே பத்தாவதிலுள்ள[10]  என் தந்தை பண்டிதர் மு ஆறுமுகன் எழுதிய பாடலை அவரின் பெயருடனேயே பகிர்ந்தேன். மானெக்ஷாவுக்கு அது பழந்தமிழ்ப் பாடலாகிவிட்டது. ‘பழந்தமிழ்ப் பாடல்என்று எக்காலப் பாடல்களைக் கூறுவர் என்பதும் தெரியவில்லைப் போலும். இல்லையேல் என் தந்தை 1950களின் கடைசில் அல்லது 1960களின் தொடக்கத்தில் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முருகனுக்கு எழுதிய பாடலைப் பழந்தமிழ்ப் பாடல் என்று போடுவாரா!! கிளிநொச்சி எங்கே இருக்கிறது என்பதையும் அறிந்திருக்கமாட்டார் என்றே கருதுகிறேன்.

யார் யார் ஆய்வு செய்து எழுதியவற்றைத் திருடினாரோ தெரியவில்லை. அப்படித் திருடி வெட்டி ஒட்டிய புத்தகத்திற்கு copyrighted material என்று போட்டு விற்பனை செய்கிறார். 
Google play £7.60
Amazon £11.27

அந்தப் புத்தகத்தில்
காக்கைக்கும் தன்குஞ்சு எல்லோருமே ஓரினம்எனும் தலைப்பின் கீழ் எனது
சங்கத்தமிழரின் மரநேயமும் புன்னைமரமும் 
சிறுசெடி என்று கிள்ளி எறியாதீர்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை
போன்றவற்றிலிருந்தும்
கயவாளித் தனத்தைப் பத்தி தெரிஞ்சிக்கிறது தப்பில்லே கயவாளியா மாறிடறதேங் தப்புஎன்ற தலைப்பின் கீழ், நான் எழுதிய
குறள் அமுது 16 
ஒண்தமிழரின் ஓணத்திருவிழா
போன்றவற்றில் இருந்தும்  வெட்டி ஒட்டியும்  செருகியும் உள்ளார்

நான் எழுதிய கட்டுரைகளின் எந்தத் தலைப்பையும் google ல் தமிழில் அடித்தால் செப்படு வித்தையை வாசிக்கமுடியும். தான் செய்த செப்படு வித்தையைப் பார்க்கும்படி செப்படு வித்தை எனப்பெயர் வைத்தாரரோ?

உலகின் பல பாகங்களிலும் இருந்து எழுதும் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் பல மணிநேரம் பல நாட்கள் கண்விழித்து பல நூல்களைப் படித்து ஆய்வு செய்து எழுதுவதை எல்லாம் இருந்த இடத்திலிருந்து வெட்டி ஒட்டிக் காசாக்குவதைத் தடுப்பதற்கு ஏதாவது வழிவகை எழுத்தாளர்களாகிய நாம் செய்தாக வேண்டும். இது எனக்கு மட்டும் ஏற்பட்டதொன்றல்ல. இவரைப் போல் எத்தனை பேர் செய்கிறார்கள் என்பதை யார் அறிவார். இந்த ஊழலைத் தடுப்பது எழுத்தாளர்களின் உரிமை என்பதை மறவாமல் செயல்படுவோமா!
இனிதே,
தமிழரசி.

Saturday, 5 January 2019

நயினைப் பதிவாழ் நாகேஸ்வரியே!


                                                                                                          photo source:fb                                            
                                                                                          

கயிலைப் பதிவாழ் கயிலாய நாதன்
          கமலமலர்ப் பதம் பிடித்தவளே
மயிலைப் பதிவாழ் நங்கை என்பை
          மங்கையாக் கியமா தரசே
அயிலைப் பதிவாழ் அவுணர் உடலம்
          அழிக்கவேல் லெடுத்த நாயகியே
நயினைப் பதிவாழ் நாகேஸ் வரியே
          நல்லருள் தாரும் அம்மா!
இனிதே,
தமிழரசி.

Tuesday, 1 January 2019

குறள் அமுது - (141)



குறள்:
"மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு"                               - 60

பொருள்: 
இல்வாழ்க்கையால் பெறும் பெருமை என்பது இன்பப்பொலிவாகும். அதனால் பெறுகின்ற பெரும்பயன் நல்ல அறிவுள்ள பிள்ளைகளைப் பெறுதல்.

விளக்கம்:
இத்திருக்குறள் 'வாழ்க்கைத் துணைநலம்' எனும் அதிகாரத்தில் கடைசிக் குறளாக இருக்கிறது. முதல் ஏழு குறளும் ஒருவனது இல்லற வாழ்வில் துணையாக வரும் மனைவியின் சிறப்பைக் கூறுகிறது. கணவனும் மனைவியும் இணைந்து வாழும் இல்வாழ்க்கையில் கிடைக்கக் கூடிய பெருமையையும் பயனையும் இக்குறள் எடுத்துச் சொல்கிறது.

இல்வாழ்க்கையில் இணைந்தோர் தமக்கென மட்டும் வாழாது பிறர்க்கெனவும் வாழவேண்டும். அதுவே நம் முன்னோர் கண்டு கடைப்பிடித்த இல்லறவாழ்வாகும். அதனை வாழ்வாங்கு வாழ்தல் என்றும் சொல்வர். நல்வாழ்வு வாழக் கல்விச் செல்வமும் பொருட்செல்வமும் வேண்டும். இவையிரண்டும் வாழ்வாங்கு வாழப் போதுமானதல்ல. அதற்கு அன்பும் அறனும் வேண்டும். நிறைந்த கல்வியும் மிகுந்த பொருளும் இருப்பினும் அன்பும் அறமும் இல்லா இடத்தில் இன்பம் நிலைக்காது. அங்கே இல்வாழ்க்கை சுவைக்காது.

சான்றோர் எனப் போற்றப்படும் பெரியோரும் அன்பான சுற்றமும் உரிமையுள்ள நட்பும் அறிவான குழந்தைகளும் சூழ வாழும் வாழ்க்கை இன்பம் நிறைந்ததாக இருக்கும். அந்த வீட்டில் கோபம் குரோதம் இருக்காது. வாக்கினில் இனிமை இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே பிசிறுகள் இருக்காது. ஒருவருக்கு ஒருவர் கைகொடுத்து வாழ்க்கையைச் சிறப்பித்துச் செல்வர். விருந்தோம்பல் பண்பு மிளிரும். அறவழி செல்ல பாதை திறக்கும். அதனால் அன்பு இனிமையை ஊட்ட, உவகையும் சிரிப்பும் இன்பமும் சேர்ந்து கொட்டமடிக்கும். பலவகைப்பட்ட இன்பங்கள் சேர்ந்த வீடே இன்பப்பொலிவு நிறைந்து மங்கலமாய் காட்சிதரும்.

இன்பப் பொலிவை மங்கலம் என்பர். மங்கலமாக வாழ்வோரது இல்வாழ்க்கை பெருமை மிக்கதாக இருக்கும். இல்வாழ்க்கையில் கிடைக்கும் அந்தப் பெருமையே மனைமாட்சியாகும். இல்வாழ்க்கை வாழ்வதால் பெருமை மட்டும் இருந்தால் போதுமா? நாம் பயன் அடைய வேண்டாமா? நல்லொழுக்கமும் அறிவும் உள்ள நல்ல மக்களைப் பெறுதலே இல்வாழ்க்கையில் கிடைக்கும் பெரும் பயனாகும்.