Wednesday, 5 July 2017

கற்பகத்தின் பூங்கொம்போ!



சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கையை அவரது தேவாரத்தின் துணை கொண்டு நோக்குவோர் இறை என்ற பயம் அற்று நினைத்ததையெல்லாம் இறைவனிடம் கேட்டுப் பெறலாம். எந்த நிலையில் நின்று கேட்டால் கேட்டது கேட்டபடி கிடைக்கும் எனும் மாபெரும் இரகசியத்தை  
“புலன்களோடு கரணமும் ஆவியும் 
            போந்து நின்ற விருப்புடன் மானுடன்
நலன்களேது விரும்புவன் அங்கவை
            நண்ணுறப் பெறல் திண்ணம் தாமென
இலங்குநூலுணர் ஞானியர் கூறுவர்”
எனப் போட்டுடைத்தார் பாரதியார். 

பாரதிகூறிய நிலையில் நின்று தாம் விரும்பியவற்றை விரும்பியவாறு பெற்றவர்கள் தாம் பெற்றவற்றை சுந்தரமூர்த்திநாயனார் போல் சொன்னதில்லை. பார்ப்பவர் மனம் மகிழும் அழகனாகப் பிறந்து, அரசபோகத்தில் வளர்ந்து, பகட்டான வாழ்வையே விரும்பி, ஒன்ருக்கு இரண்டு பெண்களை மணந்து, தனக்குத் தேவையான பொருட்களை இறைவனிடம் கேட்டுப் பெற்று வாழ்க்கையின் இன்பத்தை நன்கு சுவைத்தவர் சுந்தரர்.

ஆசைகளை அறுக்க முடியவில்லை. அதனால் உண்டாகும் கோபத்தால் எல்லோரையும் பகைத்துக் கொள்கிறேன். பொய்யே பேசுகிறேன் என்றாலும் புகழையும் பொருளையுமே பெரிதும் விரும்புகிறேன். பிறரை வருத்துவதும் பிரித்து வைப்பதுவும் என்வேலை. துன்பப்படுபவர்க்கு  உதவி அறியேன். உறவினர்க்கும் துணை செய்யமாட்டேன். எந்த ஒரு நற்குணமும் என்னிடம் இல்லை எனத் தன்னைப்பற்றிக் கூறி ‘திருவாரூர் இறைவன் தன்னை ஆள்வரோ கேளீர்!’ என ஏழாம் திருமுறையின் 73ம் பதிகத்தில் கேட்பவர் 100ம் பதிகத்தில்
“வாழ்வை உகந்து நெஞ்சே
            மடவார் தங்கள் வல்வினைப்பட்டு
ஆழ முகந்த என்னை
           அது மாற்றி அமரரெலாம்
சூழ அருள் புரிந்து
                                                    - (ப.திருமுறை: 7: 100: 4)
என்று பாடி இறைவன் தன்னை ஆட்கொண்டு அருள் செய்த திறத்தை வியக்கிறார்.

சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனிடம் என்ன கேட்கவேண்டும் என்ற ஒரு வரையறை இல்லாது எந்த இடத்திலும் எந்நேரத்திலும் கேட்டுப் பெற்றவர். அதனாற்றான் என்னவோ திருக்குற்றாலக் குறவஞ்சி பாடிய திரிகூடராசப்ப கவிராயர்
“ஆதிநாட் சுந்தரருக்குத் தூது போனவர் முன்னே
தூது நீ சொல்லி வாராய்”
எனப் பாடினார். இறைவனையே தன் மனைவியிடம் தூது அனுப்பிய சுந்தரரின் செயலை என்ன என்று சொல்வது? இறைவன் சுந்தரருக்காக தூது சென்றது உண்மை என்பதை திருவாரூர் கோயிலிலுள்ள கல்வெட்டில் இரண்டாம் குலோத்துங்கன் “தூது நடந்த தெரு” என ஒரு தெருவைக் குறித்துள்ளமை காட்டுகிறது.

தனக்குத் தோழனாகி, தான் செய்த குற்றங்களைப் பொறுத்து, எளியவனாய் இறைவன் தனக்கு தூது போனார் என்று சுந்தரர் தமது தேவாரத்தில் பாடியுள்ளார்.
“……. விமலனை அடியேற்கு எளி வந்த 
தூதனைத் தன்னைத் தோழமை அருளித்
           தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும்
நாதனை நள்ளாறானை அமுதை
           நாயினேன் மறந்தென் நினைக்கேனே”
                                                    - (ப.திருமுறை: 7: 68: 8)
யாரிடம் எதற்காக இறைவனை சுந்தரர் தூது அனுப்பினார்? சுந்தரர் செய்த குற்றம் என்ன? சுந்தரர் திவாரூர் கோயிலுக்குச் சென்றார். அங்கே தோழியரிடையே நின்ற பரவையாரைக் கண்டார். பரவையாரின் அழகு சுந்தரரின் மனதைக் கொள்ளை கொண்டது. அதனால் பரவையாரைப் பார்த்து “கற்பகத்தின் பூங்கொம்போ” என வியக்கின்றார். திருவாரூர் இறைவன் திருவருளால் இருவருக்கும் திருமணம் முடிந்தது. இல்வாழ்வும் தொடர்ந்தது.

சுந்தரர் முற்பிறவியில் செய்த வினை - விதியாகச் சதி செய்ய திருவொற்றியூர் சென்ற சுந்தரர் சங்கிலியாரைக் கண்டு மோகித்தார். அங்கும் இறைவனின் துணையால் சங்கிலியாருடன் கூடி வாழ்கிறார். சங்கிலியாரின் மோகத்தில் பரவையாரையும் பரவையாரை திருமணம் செது வைத்த ஆரூர் இறைவனையும் மறந்தார். மோகம் தணிந்ததும் அவர்களது ஞாபகம் வர
“ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய 
தோழனுமாய்  யான்செய்யும் துரிசுகளுக்கு இடனாகி
மாழை ஒண்கண் பரவையைத்தந்து ஆண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே”
                                                        - (ப.திருமுறை: 7: 51: 10)
எனப்பாடி வருந்தினார்.

பின்னர் சங்கிலியாரை திருவொற்றியூரில் விட்டுவிட்டு பரவையாரை நாடி வந்தார். ஆனால் சங்கிலியாருடன் கூடி வாழ்ந்ததை அறிந்த பரவையார் சுந்தரரை ஏற்க மறுத்துவிட்டார். சுந்தரர், பரவையாரிடம் இறைவனைத் தூதாக அனுப்பினார். சிவனும் தன் தூது வேலையை மிகச் சிறப்பாகச் செய்து அவர்கள் இருவரையும் மறுபடியும் இணைத்து வைத்தார். 

அதனை “தூதனை என்றனையாள் தோழனை” எனும் தேவார அடி எமக்கு எழுத்துக் காட்டுகிறது. இறைவனே தூதுவனாகப் போக பரவை என்ன புண்ணியம் செய்தாளோ! பரவையாருக்காக சுந்தரர் எத்தனை தேவாரங்களைப் பாடி இறைவனிடம் பரிசுகள் கேட்டுப் பெற்றிருக்கிறார் தெரியுமா?

குண்டையூரில் பெற்ற நெல்லு மூட்டைகளைத் தூக்கிவர ஆட்கள் கேட்டுப் பாடிய கோளிலிப் பதிகத்தில்
“நீள நினைந்தடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டையூர் சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை எம்மெருமான் அவை அட்டித்தர பணியே” 
                                                     - (ப.திருமுறை: 7: 20: 1)
வாள் போன்ற கண்களையுடைய பரவையார் பசியாள் வாடி வருந்தாதிருக்க குண்டையூரில் கிடைத்த நெல்லைக் கொணர்ந்து சேர்க்க ஆளில்லையே என்றவர்
“பாதியோர் பெண்ணை வைத்தாய்
              படருஞ்சடைக் கங்கை வைத்தாய்
மாதர் நல்லார் வருத்தம் அது
             நீயும் அறிதி அன்றே”
                                                      - (ப.திருமுறை: 7: 20: 3)
உமையம்மையை உனது உடலில் பாதியில் வைத்து, கங்கையை சடையில் வைத்திருக்கிறாய். ஆதலால் நற்பெண்களின் மனவருத்தம் நீயும் அறிவாய் என்கிறார்.

குரவமருங் குழலாள் உமை
              நங்கை ஓர் பங்குடையாய்
பரவை பசிவருத்தம் அது
             நீயும் அறிதியன்றே”
                                                        - (ப.திருமுறை: 7: 20: 6)
என்றும்
“பரவை அவள் வாடுகிறாள்”            - (ப.திருமுறை: 7: 20: 8)
எனவும் பாடி பரவையாருக்காக நெல்லை வீட்டிற்கு எடுத்துவர இறைவனிடம் ஆள் கேட்டுப் பெற்றிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் திருமுதுகுன்றத்து இறைவனிடம் வாங்கிய பசும்பொன் முழுவதையும் மணிமுத்தாற்றில் போட்டுவிட்டு வீடுவந்து சேர்ந்தார். வேறொரு நாள் அப்பொன்னின் ஞாபகம் வர, பரவையாரிடம் ‘நான் முதுகுன்றத்து இறைவனிடம் பெற்ற பொன்னை மணிமுத்தாற்றில் போட்டு வந்தேன். அதனை இங்குள்ள[திருவாரூர்] கமலாலயக் குளத்தில் எடுப்போம் வா” எனக்கூறி அழைத்துச் சென்றார். சுந்தரர் குளத்தில் இறங்கித் தேடினார், தேடினார், தேடிக் கொண்டே இருந்தார்.

சுந்தரரை பரவையார் நம்புவதாக இல்லை. ஆற்றில் போட்ட பொன்னை யாராவது குளத்தில் தேடுவானா? அதுவும் மணிமுத்தாற்றில் போட்டதை திருவாரூர் குளத்தில் தேடுவது என்ன வேடிக்கையான செயல். பரவையார் வேதனையுடன் சிரித்தார். பரைவையின் நமட்டுச் சிரிப்பு சுந்தரருக்குப் பிடிக்கவில்லை.
மின்செய்த நுண்ணிடை பரவையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள்…..”
                                                       - (ப.திருமுறை: 7: 25: 1)
அடிகளே! மின்னல் போன்ற இடையுள்ள பரவைக்கு முன் என்ன செய்கிறாய் எனக் கேட்டவர்
“உம்பரும் வானவரும் உடனே நிற்கவே எனக்குச்
செம்பொன்னைத் தந்தருளித் திகழும் முதுகுன்றமர்ந்தீர்
வம்பம ருங்குழலாள் பரவை இவள் வாடுகின்றாள்
எம்பெருமான் அருளீர் அடியேன் இட்டளங்கெடவே”
                                                         - (ப.திருமுறை: 7: 25: 2)
என இறைவனுக்கும் பரவையாருக்கும் சேர்த்தே சொல்கிறார். ‘எனக்குச் சாட்சியாக உம்பரும் வானவரும் நிற்கவே செம்பொன்னை எனக்குத் தந்து திருமுதுகுன்றில் அமர்ந்தாய். மணங்கமழும் கூந்தலையுடைய பரவை இவள் கவலைப்படுகிறாள். ஆதலால் எனக்கு அருள் செய்!' என்கிறார். இப்பதிகத்தில் பரவையாரின் மனவாட்டத்தை மூன்று தேவாரத்தில் கூறி பொன்னைத் தரும்படி கேட்கிறார். ஆறு தேவாரத்தில் பரவையின் முன்னிலையில் தந்தருளுமாறு வேண்டுகிறார்.
“கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டிருந்தாள் முகப்பே
அங்கனனே அருளாய்”
                                                    - (ப.திருமுறை: 7: 25: 4)
“படியாரும் இயலாள் பரவை இவள் தன்முகப்பே
அடிகேள் தந்தருளீர்”
                                                     - (ப.திருமுறை: 7: 25: 6)
“பந்தணவும் விரலாள் பரவை இவள் தன்முகப்பே
அந்தணனே அருளாய்”
                                                      - (ப.திருமுறை: 7: 25: 7)
விரை சேருங் குழலாள் பரவை இவள் தன்முகப்பே
அரசே தந்தருளாய்”
                                                       - (ப.திருமுறை: 7: 25: 8)
என எட்டுத் தேவாரம் பாடியும் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குப் பொன் கிடைக்கவில்லை. ஒன்பதாவதில்
பூந்தாருங் குழலாள் பரவை இவள் தன்முகப்பே
கூத்தா தந்தருளாய் கொடியேன் இட்டளங்கெடவே”
                                                        - (ப.திருமுறை: 7: 25: 9)
என்று தன்னைக் ‘கொடியேன்’ எனப்பாடி இறைஞ்சி பரவையாருக்குப் பொன் பெற்றுக் கொடுத்திருக்கிறார். கற்பகத்துப் பூங்கொம்பும் பொன்னை விரும்பி இருக்கிறதே!
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
1. இதனை கலசம் இதழுக்கு 1999ல் எழுதினேன்.

2. சுந்தர மூர்த்தி நாயனாரது தேவாரப் பதிகங்களில் பல அவர் இறைவனிடம் எதையாவது கேட்டுப் பெற்றவையாகவும் உதவிகேட்பவையாகவும் இருக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு மேலே குறிப்பிட்டவற்றைப் பாருங்கள். அவற்றில் நம்மவர்களால் எல்லா நிகழ்வுகளிலும் பூசைகளிலும் பெரும்பாலும் பாடப்படும் தேவாரம் ‘நீளநினைந்தடியேன்’. அதில் ஒருவன் [சுந்தரர்], தனது நண்பன் ஒருவனிடம் [சிவனிடம்] “டேய் மச்சான்! என்மனைவி வருத்தப்படாதிருக்க குண்டையூரில் கொஞ்சம் நெல்லை வாங்கி வைத்திருக்கிறேன். எடுத்து வர ஆளில்லையெடா. யாரையாவது அனுப்பி எடுத்துத் தாடா. உன்னைத்தாண்டா நம்பி இருக்கிறேன்” என்று சொல்வது போலவே சுந்தரரும் இறைவனிடம் கூறியிருக்கிறார். அத்தேவாரத்தை நாம் ஏன் இலண்டன், ஜேர்மன், கனடா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, இலங்கை என உலகநாடுகளில் இருந்து பாடுகிறோம். அதிலும் பெண்கள் பாடுவது வேடிக்கையாகத் தோன்றவில்லையா? எல்லோரும் மனைவிமாருக்காக குண்டையூரில் நெல்லுப் பெற்றோமா? அதுவும் கோயில்களில் ஐயர்மாரும் சேர்ந்து பாடுகிறார்கள். ஏன் பாடுகிறார்கள்? அவர்களாவது சொல்ல வேண்டாமா! வருங்காலத்தில் நம் இளஞ்சந்ததி இத்தேவாரக் கருத்தைப் தெரிந்து கொண்டு நம்மைப் பார்த்து நகைக்காதா? கொஞ்சம் சிந்தித்தால் என்ன?

No comments:

Post a Comment