Thursday 27 April 2017

கிள்ளி எறியாதீர்கள்!

வேப்பஞ்செடி[இதுவே வேப்பமரக வளரும்]
இயற்கையாகவே நம் வீடுகளுக்குப் பக்கதில், படலையடியில், கிணற்றடியில் தோட்டத்தில் மெல்ல முளைத்து பச்சை தழைகாட்டும் செடிகளை சின்னஞ் சிறுசெடியென எண்ணி கிள்ளி எறியாதீர்கள். வெட்டி எரிக்காதீர்கள். ஏனெனில் அவையே வளர்ந்து நாம் சுவாசிக்கும் காற்றையும், வெய்யிலுக்கு இதமான நிழலையும் குடிக்கும் தண்ணீருக்குத் தேவையான மழையையும் தரும் மரங்களாய் வளர்கின்றன. மரங்கள் இல்லையேல் சுவாசிக்கும் காற்றையும் உண்ணும் உணவையும் குடிக்கும் நீரையும் கோடி கோடியாகத் தொகுத்து வைத்திருப்போரும் வாங்கிவிட முடியாது. அவர்களாலும் உயிரோடு வாழ இயலாது. மற்றோரின் நிலை என்னாவது? புவியின் தன்னிறைவைப் பாதுகாப்பதும் மனித நேயமேயாகும்.

திருவள்ளுவரும்
“இளைதாக முள்மரம் கொல்க”
என்று எமக்குத் துன்பம் தரும் முட்செடிகளை சிறுசெடியாக இருக்கும் போது அழிக்கச் சொன்னாரே தவிர நன்மை தரும் மரங்களை அழிக்கச் சொல்லவில்லை.

அண்ணன்மார் பயன் தரும் மரஞ் செடி கொடிகளை வெட்டி எறிந்து அவ்விடத்தில் வேறுபயிர் செய்தால் கூட அவர்களது தங்கையைக் காதலிப்பது தப்பு என்னும் கருத்து பண்டைத் தமிழரிடையே இருந்திருக்கிறது. அதற்குக் காரணம் ‘பயனுள்ள மரஞ் செடி கொடிகளை வெட்டுவோரின் தங்கைக்கு எப்படி பிறரது துன்பத்தை உணர்ந்து இரக்கங்காட்டும் குணமிருக்கும்?' எனும் எண்ணமேயாகும். அதனை
“நறுந்தண் தகரம் வகுள மிவற்றை
வெறும்புதல் போல் வேண்டாது வேண்டி - எறிந்துழுது
செந்தினை வித்துவார் தங்கை பிறர் நோய்க்கு
நொந்தினைய வல்லளோ நோக்கு” 
                                    - (திணைமாலை நூற்றைம்பது: 24)
என்று ‘திணைமாலை நூற்றைம்பது’ சொல்கிறது. ஆனால் இன்றைய தமிழராகிய நாமோ மரங்களுக்கும்   உயிருண்டு என்று எண்ணுவதே இல்லை. 
தகரை
நறுமணம் கமழும் குளிமையான தகரை [தகரம்] மகிழ் [வகுளம்] போன்றவற்றை பயனற்ற புதர்களைப் போல விரும்பாது [வேண்டாது] வெட்டியெறிந்து பயிர் செய்யவிரும்பி [வேண்டி] உழுது, சிவந்த தினையை விதைப்போரது தங்கை பிறர் படுந்துன்பத்திற்காக [நோய்க்கு] மனம் நொந்து வருந்த [இனைய] வல்லவளோ என்பதைப் பார்ப்பாயாக [நோக்கு]!’ எனக்கூறுகிறது. 

அன்றைய தமிழினம் மரத்தை வெட்டி எறிபவர்களது வீட்டுப் பெண்ணை திருமணம் செய்வது துன்பந்தரும் என்ற நிலைப்பாட்டில் வாழ்ந்திருக்கிறது. இன்றோ மண்ணும் மரமும் வெறும் தூசுக்குச் சமம் கட்டும் கட்டிடங்களே என்றும் நிரந்தரம் என நினைக்கிறது.

மரஞ்செடி கொடிகளால் சூழப்பட்டு சுரங்கப்பாதை [அதரிடை] போலச் காட்சிதரும் வழியில் மிக மென்மையான தளிரோடு கூடிய துவளும் கொப்புடன் நின்ற சிறுசெடி வளர வளர உள்ளே வயிரமாகி வளர்ந்து முதிர்ந்த மரமாகும் போது ஆண் யானைகளைக் கட்டும் கட்டுத்தறியாகப் பயன்படும். அது போல ஒருவன் அறிவிலும் பொருளிலும் வலியவனாக உயர்ந்தநிலைக்குத் [தாழ்வின்றி] தன்னை ஆக்கிக் கொள்ளலே மனிதவாழ்வாகும் என்பதை
“ஆடு கோடாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும்
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான்
தாழ்வின்றித் தன்னைச் செயின்” - (நாலடியார்: 192)
என நாலடியார் பகருகிறது.

எனவே பயனுள்ள இளஞ்செடிகொடிகளைக் கிள்ளி எறியாதீர்கள். அவை வளர்ந்து சுற்றுச் சூழலின் மாசைத் தூய்மையாக்க மாதம் மும்மாரி பொழியும். நீர்வளம் பெருகும். வயல்கள் செழிக்கும். பயிர்கள் விளையும். உலக உயிர்கள் யாவும் இன்புற்று வாழும். வறுமையை வறுமையடையச் செய்யும்.  
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment