Wednesday, 19 April 2017

சங்ககால உணவு உண்போமா! - 2

அவரைப்பருப்பு

சங்க இலக்கியத்தில் இருக்கும் பாடல்களில் அதிக பாடல்களை இயற்றிய பெருமைக்கு உரியவர்களில் கபிலரும் ஒருவர். அவர் சங்ககால மக்களின் வாழ்வியலை மிகத்தெளிவாகத் தமது பாடல்களில் எடுத்துச் சொல்லியிருக்கிறார். அவரது சங்க இலக்கியப்பாடல்கள் அவரை சங்கப்புலவனாக மட்டும் காட்டவில்லை. அதற்கும் மேலாக இலக்கியவாதியாய், இசை நுணுக்கம் அறிந்தவராய், அரசியல் சாணக்கியம் தெரிந்தவராய், சான்றோனாகக் காட்டுகிறது. இவற்றோடு கபிலர் ஒரு சாப்பாட்டுப் பிரியர் என்பதையும் சங்க இலக்கியத்தில் காணலாம்.

சங்ககாலத்தில் வாழ்ந்த சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் அரசன் கபிலரின் பாடல்களைக் கேட்டு அவருக்கு நூறாயிரம் காணம் பொன்னும் ‘நன்றா’ என்ற குன்றின் மேல் ஏறி நின்று தன் கண்ணின் பார்வைக்கு எட்டிய தூரத்தில் தெரிந்த நாடெல்லாம் பரிசாகாக் கொடுத்தான். அவற்றையெல்லாம் கபிலரும் பிறருக்குக் கொடுத்து மகிழ்ந்தார். 

ஒருநாள் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனனின் அரண்மணைக்கு வந்த கபிலரை அவன் கைகொடுத்து வரவேற்றான். கபிலரின் கையைப்பற்றிப் பிடித்தவன் வியப்படைந்தான். அவன் ஓர் அரசன். செல்வச்செழிப்பில் கூப்பிட்ட குரலுக்கு ஏவல் செய்ய எத்தனையோ பேர் இருக்க வாழ்ந்து பட்டுமெத்தையில் தூங்கி எழுபவன். அப்படிப்பட்ட அவனின் கை வன்மையாக இருக்க கபிலரின் கை மிகவும் மென்மையாக இருந்தது. அதுவே அவனை வியப்படைய வைத்தது. அதனால் கபிலரை பார்த்து, ‘அவரின் கை மென்மையாக இருப்பதற்கான காரணம் என்ன?' எனக் கேட்டான்.

கபிலர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? நம் எல்லோரையும் அதிர்ச்சியில் வீழ்த்தும் பதில் அது. கபிலரைப் பெரும்பாலானோர் அந்தணர் என்று எழுதுகின்றனர். எனெனில் மாறேக்கத்து நப்பசலையார் எனும் சங்ககாலப் பெண்புலவர் கபிலரை ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ [புறம்: 126] எனப் புகழ்ந்து இருப்பதால் அப்படி எழுதுகிறார்கள். அவ்விதம் எழுதுவோருக்கு கபிலரின் அந்தப்பதில் மிகவும் அதிர்ச்சியையே கொடுக்கும்.

"போரில் மிகவும் ஆற்றலுடையவனே! யானைப்போரில் யானையை ஏவி இழுத்துப் பிடிக்கின்றாய். குதிரைகளை அவற்றின் வாரைப்பிடித்து அடக்குகின்றாய். தேர்மிசை நின்று வலிமையான வில்லில் ஏற்றிய அம்பினை எய்கின்றாய். பரிசிலர்க்கு கிடைத்தற்கு அரிய அணிகளை வாரி வழங்குகின்றாய். நின் கை அதனால் உரம் பெற்றிருக்கிறது," எனக் கூறியவர் தொடர்ந்து
“புலவு நாற்றத்த பைந்தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன்துவை
கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது
பிறிதுதொழில் அறியா ஆகலின் நன்றும்
மெல்லிய பெரும”                                     
                                                           - (புறம்: 14: 12 - 16)
‘புலால் மணம் வீசும் பச்சை இறைச்சியை [பைந்தடி - steak] பூமணக்கும் புகையில் வாட்டி எடுத்த துண்டும், இறைச்சித் துவையலும், கறிசோறும் உண்டு வருந்துவதல்லாமல் வேறு தொழில் செய்தறியமாட்டாததால் எம்கை மிக மென்மையாக இருக்கிறது’ என்றார். கபிலர் அந்தணர் என்றால் ஊன் உண்டதாகச் சொல்லி இருப்பாரா! புலவர்கள், அறிஞர்கள் கைவருந்தி உழைப்பதில்லை. அவர்களின் அறிவே பெரும்பாலான வேலைகளைச் செய்கிறது. அதனால் கபிலரின் கை மிக மென்மையாக இருந்துள்ளது.

கபிலர் கூறிய ஊன்துவை எத்தகைய சுவையுடையது என்பதை ஔவையார் தனக்கும் தன்சுற்றத்தார்க்கும் அதியமான் நெடுமான் அஞ்சி கொடுத்தனவற்றிச் சொல்லும் இடத்தில்
“அமிழ்தன மரபின் ஊன்துவை அடிசில்
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி”
                                                          - (புறம்: 390: 17 - 18)
எனக் கூறுகிறார். ‘அமிழ்தம் போன்ற இறைச்சித் துவையலும்[ஊன்துவை], உணவையும்[அடிசில்] வெள்ளியாலான வெண் கலத்தில் தந்து உண்பித்தான்’ என்கின்றார். எனவே ஊன்துவை அமிழ்தம்போன்ற நல்ல சுவையுள்ளது என்பதை நாம் அறியலாம். அதிகமான் நெடுமான் அஞ்சி கி மு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்பர். ஆகவே தமிழர் ஊன்துவையலை இரண்டாயிர வருடங்களுக்கு மேலாக உண்டு வருகின்றனர்.

ஊன்துவை அடிசிலை அரசரும் உண்டனர் என்பதை பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தில் பரணர் காட்டுகிறார்.
“சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில்
ஓடா பீடர் உள் வழி இறுத்து”
                                                     - (பதிற்றுப்பத்து: 45: 13 - 14)
‘பகைவர்க்குப் புறமுதுகு காட்டாத பெருமையுள்ள வீரர் உள்ளம் மகிழ தனக்கு வேறு சோறு எனப்பிரிக்காது இறைச்சித் துவையலுடன் ஆன உணவை அரசனும் உண்டான்’ என்கிறார். 

சான்றோரும் அரசரும் விரும்பி உண்ட ஊன்துவை என்ன நிறத்தில் இருந்தது என்பதை பதிற்றுப்பத்தின் ஆறாம் பத்தில் காக்கைபாடினியார் நச்செள்ளையார் குறிப்பிட்டுள்ளார்.
“செவ்வூன் தோன்றா வெண்துவை முதிரை
வால்ஊன் வல்சி”                                
                                                       - (பதிற்றுப்பத்து: 55: 7 - 8)     
இறைச்சியின் செந்நிறம் [செவ்வூன்] தெரியாதபடி அவரைப்பருப்புடன் [முதிரை] சேர்த்து அரைத்த வெண்ணிறத் துவையலும் வெண்ணிற இறைச்சி [வால்ஊன்] கலந்த சோறும் [வல்சி]’ என்கிறார்.  எனவே அவரைப்பருப்பு சேர்ந்த இறைச்சித் துவையலோடு கோழி இறைச்சி [வெண்ணிற இறைச்சி] புரியாணி சாப்பிட்டிருகிறார்கள். 

நெல், அரிசி, சோறு, உணவு போன்றவற்றை வல்சி எனும் சொல் குறிக்கும். சங்ககால கோழி இறைச்சித் துவையலை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

சங்ககாலத்து கோழி இறைச்சி வெண்துவையல்

தேவையான பொருட்கள்:
கோழி இறைச்சி [எலும்பு நீக்கிய] - 100 கிராம்
அவரைப்பருப்பு  -  50 கிராம்
தேங்காய்ப்பூ  -  1 மே. கரண்டி
வெண்மிளகு  -  2  தே. கரண்டி
தோல் நீக்கிய இஞ்சி  -  1” துண்டு
தோல் நீக்கிய உள்ளி  -  1 பல்
தேசிக்காய் புளி  -  தேவையான அளவு
உப்பு  - தேவையான அளவு

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர்விட்டு கோழி இறைச்சியை வேகவைத்து எடுக்கவும்.
2. இன்னொரு பாத்திரத்தில் அவரைப் பருப்பை முக்கால் பதத்தில் வேகவைத்து எடுக்கவும்.[குழையவிட வேண்டாம்].
3. இவை ஆறியதும் மீதிப்பொருட்களையும் சேர்த்து அவித்த நீரில் சிறிதுவிட்டு துவையல் போல் நன்கு அரைத்து எடுக்கவும்.

குறிப்பு:
இந்த ஊன் வெண்துவையலை புரியாணியுடன் மட்டுமல்ல நாண், பாண் போன்றவற்றில் பூசியும், இடியப்பம், இட்டலி, தோசை போன்றவற்றுடனும் உண்ணலாம்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment