குறள்:
"மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு" - 60
பொருள்:
இல்வாழ்க்கையால் பெறும் பெருமை என்பது இன்பப்பொலிவாகும். அதனால் பெறுகின்ற பெரும்பயன் நல்ல அறிவுள்ள பிள்ளைகளைப் பெறுதல்.
விளக்கம்:
இத்திருக்குறள் 'வாழ்க்கைத் துணைநலம்' எனும் அதிகாரத்தில் கடைசிக் குறளாக இருக்கிறது. முதல் ஏழு குறளும் ஒருவனது இல்லற வாழ்வில் துணையாக வரும் மனைவியின் சிறப்பைக் கூறுகிறது. கணவனும் மனைவியும் இணைந்து வாழும் இல்வாழ்க்கையில் கிடைக்கக் கூடிய பெருமையையும் பயனையும் இக்குறள் எடுத்துச் சொல்கிறது.
இல்வாழ்க்கையில் இணைந்தோர் தமக்கென மட்டும் வாழாது பிறர்க்கெனவும் வாழவேண்டும். அதுவே நம் முன்னோர் கண்டு கடைப்பிடித்த இல்லறவாழ்வாகும். அதனை வாழ்வாங்கு வாழ்தல் என்றும் சொல்வர். நல்வாழ்வு வாழக் கல்விச் செல்வமும் பொருட்செல்வமும் வேண்டும். இவையிரண்டும் வாழ்வாங்கு வாழப் போதுமானதல்ல. அதற்கு அன்பும் அறனும் வேண்டும். நிறைந்த கல்வியும் மிகுந்த பொருளும் இருப்பினும் அன்பும் அறமும் இல்லா இடத்தில் இன்பம் நிலைக்காது. அங்கே இல்வாழ்க்கை சுவைக்காது.
சான்றோர் எனப் போற்றப்படும் பெரியோரும் அன்பான சுற்றமும் உரிமையுள்ள நட்பும் அறிவான குழந்தைகளும் சூழ வாழும் வாழ்க்கை இன்பம் நிறைந்ததாக இருக்கும். அந்த வீட்டில் கோபம் குரோதம் இருக்காது. வாக்கினில் இனிமை இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே பிசிறுகள் இருக்காது. ஒருவருக்கு ஒருவர் கைகொடுத்து வாழ்க்கையைச் சிறப்பித்துச் செல்வர். விருந்தோம்பல் பண்பு மிளிரும். அறவழி செல்ல பாதை திறக்கும். அதனால் அன்பு இனிமையை ஊட்ட, உவகையும் சிரிப்பும் இன்பமும் சேர்ந்து கொட்டமடிக்கும். பலவகைப்பட்ட இன்பங்கள் சேர்ந்த வீடே இன்பப்பொலிவு நிறைந்து மங்கலமாய் காட்சிதரும்.
இன்பப் பொலிவை மங்கலம் என்பர். மங்கலமாக வாழ்வோரது இல்வாழ்க்கை பெருமை மிக்கதாக இருக்கும். இல்வாழ்க்கையில் கிடைக்கும் அந்தப் பெருமையே மனைமாட்சியாகும். இல்வாழ்க்கை வாழ்வதால் பெருமை மட்டும் இருந்தால் போதுமா? நாம் பயன் அடைய வேண்டாமா? நல்லொழுக்கமும் அறிவும் உள்ள நல்ல மக்களைப் பெறுதலே இல்வாழ்க்கையில் கிடைக்கும் பெரும் பயனாகும்.
No comments:
Post a Comment