Thursday 1 June 2017

குளம் தொட்டு வளம் பெருக்குவோம்.

பண்டைய நெற்கந்துக் குளம் - உங்கள் பார்வைக்கு
[நண்பகல் வெய்யிலைப் பொருட்படுத்தாது  vedio எடுத்தனுப்பிய உள்ளத்துக்கு என் வாழ்த்து]

இன்றைய சூழ்நிலையில் புங்குடுதீவு வளம் பெறத் தேவையானது குளங்களே. நம் முன்னோர்கள் குளங்களின் தேவையை நன்கு உணர்ந்திருந்தனர். அதனாலேயே கிட்டத்தட்ட பதினெட்டு சதுரமைல் பரப்புள்ள தீவுக்குள் வெட்டுக்குளம், பெரியகிராய், திகழிக்குளம் என பத்துப் பனிரெண்டு குளங்களையும், மக்கிக்குண்டு, தர்மக்குண்டு என சில குண்டுகளையும் எம் முன்னோர் எமக்காக விட்டுச் சென்றுள்ளனர்.

அவர்கள் எமக்காக விட்டுச்சென்ற பண்டைய ஆறு, குளங்களில் ஒரு சிலவற்றின் பெயர்களை எப்படித் திரித்துவிட்டோம் தெரியுமா? திரித்து, மாற்றிப் பேசியும் எழுதியும் வருவது பெரிய வரலாற்றுச் சிதைவை உண்டாக்கும். அதனால் நம் இளஞ்சந்ததியினர் புங்குடுதீவின் பண்டைய வரலாற்றை ஆராய்ந்து அறியமுடியாது செய்கிறோம். அதனை புலம் பெயர்ந்து வாழும் நம் உறவுகள் உளங்கொளல் நன்று. கள்ளியாற்றைக் களியாறு என்கிறார்கள். களியாறு என்று போடாதீர்கள் என்று சொன்னால் ‘கள்ளியாக இருந்தால் என்ன? களியாக இருந்தால் என்ன?’ என்று கேட்கிறார்கள். அவர்கள் போய்ப் பார்த்த போது கள்ளியாறு களியாக இருந்ததாம். என் செய்வது? யாரை நோவது!

புங்குடுதீவில் என் தந்தையின் அப்புவுக்கு நெற்காணிகள் இருந்தன. அந்தக் காணிகளில் சில ஆம்பற்குளத்தருகேயும் இருந்தன. அந்த வயற்காணியில் ஒன்று எனது தந்தையின் தங்கைக்கு [இரத்தினமாமி] சீர்தனமாகக் கொடுக்கப்பட்டது. அதனை மாமி ஆம்பற்குள வயல் என்றே கூறுவார். ஆனால் இன்றோ அதனை ‘ஆமைக்குளம்’ என்று சொல்கிறார்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள புங்குடுதீவுப் பகுதியிலும் அக்குளத்தை ஆமைக்குளம் என எழுதியிருப்பது வேதனை அளிக்கிறது. 

இயற்கையாகவே எங்கள் புங்குடுதீவில் நெய்தல் நிலமும் மருத நிலமும் கலந்தே இருக்கிறது. அதனாலேயே  அங்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். வயல்களுக்கு இடையே ஆம்பற்குளம் இருக்கிறது என்பது வரலாற்றுச் சிறப்பாகும். அதன் பெயரைச் சிதைக்கலாமா! நமக்கிருந்த வளத்தை நாமே குழிதோண்டிப் புதைப்பதா! 

குறுந்தொகை
“அயிரை பரந்த அம்தண் பழனத்து
ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள் கால்
ஆம்பல்” 
                                     - (குறுந்தொகை: 178: 1- 3)
என மருத நிலத்தில்[பழனம்] மலர்ந்த ஆம்பலைச் சொல்கிறது. 
அரக்காம்பல்

சேர அரசனது [கோக்கோதை] நாட்டு மருதநில வயல்களில் ஆம்பல் பூக்க பறவைகள் ஆரவாரம் செய்ததை
“அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாய்நெகிழ
வெள்ளந் தீப்பட்டதென வெரீஇப் - புள்ளினந்தம்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கௌவை உடைத்தரோ
நச்சிலைவேற் கோக்கோதை நாடு”
                                            - (முத்தொள்ளாயிரம்)
முத்தொள்ளாயிரம் கூறுகிறது. அரக்காம்பலின் இலை, தண்டு யாவும் செம்மை கலந்ததாய் தெரியும். ஆம்பற்குளத்தில் ஆமைகள் இருப்பினும் நன்னீர் வளத்தோடு பல்லுயிரும் வாழ எழிழோடு இருக்கும். ஆனால் ஆமைக்குளமோ சேற்று மணத்துடன் இருக்கும். ஆமைக்குளத்திலிருந்து வயல்களுக்கு நீர்ப் பாய்ச்சமுடியாது. பண்டைய பெயர்களை சிதையாது பாதுகாப்பதும் புங்குடுதீவுக்கு வளம் சேர்ப்பதேயாகும்.

இன்னொரு குளத்தின் பெயரை ‘நக்கந்தைக் குளம்’ என்கிறோம். அது வல்லனில் இருக்கிறது. ‘நக்கந்தை’ என்னும் அதன் பெயரே நெற்செய்கையில் அக்குளத்திற்கு இருந்த முதன்மையைக் காட்டுகிறது. நெல் + கந்து = நெற்கந்து. நெற்கந்து என்பது பேச்சு வழக்கில் நற்கந்தையாகி நக்கந்தையாக மருவியுள்ளது. நெற்கதிர்களை  அடிக்கும் பொழுது நெல்லைத் தவிர்த்து வரும் சாவி நெல், வைக்கோல், தூசு முதலானவற்றைக் கந்து என்பர். வல்லன் வயல்களில் விளைந்த நெற்கதிர்களை சூடுமிதிக்கும் போது அதன் கந்துக்கள் காற்றில் பறந்து சென்று இக்குளத்தில் வீழ்ந்து பாசிபோல் படர்ந்திருந்ததால் நெற்கந்துக் குளம் என்றனர். அதனாலேயே முத்துக்குமாருப் புலவராலும்
“கன்னலொடு செந்நெல்விளை பொங்கைநகர்
தன்னிலுறை கண்ணகைப் பெண்ணரசியே”
எனப் பாடமுடிந்தது. நன்னீர் வளம் இல்லாத இடத்தில் கரும்பும் நெல்லும் விளையுமா? என்பதை எண்ணிப்பார்த்தல் நன்றல்லவா!

முதலில் கேணி, குளம், பொய்கை, தடாகம், குட்டம், குண்டு, ஓடை போன்ற சொற்களின் வேறுபாட்டை புரிந்து கொள்ளவேண்டும். கோயிலில் உள்ள கேணிகள் எல்லாம் குளங்கள் ஆகாது. குளங்களுக்கும் கேணிகளுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு. பயிர்ச்செய்கைக்குத் தேவையான நீரை வயல்களுக்குப் பாய்ச்சுவதற்கான தூம்பு, கலிங்கு[மதகு], வாய்க்கால் போன்றவை உள்ளதாக பெரும்பாலான குளங்கள் இருக்கும். அவை இல்லாத சிறுகுளங்களில் தேவையானபோது வாய்க்கால் வெட்டி மண்மூட்டைகளைப் போட்டு மறித்து நீரைப் பெற்றுக் கொள்வர்.

நீர்ப்பாசன வசதியுள்ள குளங்களை அமைப்போர் சுவர்க்கத்திற்கு செல்வர் என்று சிறுபஞ்சமூலம் எனும் நூலில் காரியாசான் எனும் புலவர் கூறுகிறார்.
"குளந்தொட்டு கோடு பதித்து வழி சித்து
உளந்தொட்டு உழவயலாக்கி - வளந்தொட்டு
பாடு படுங்கிணற் றோடென்றிவ் வைம்பாற்
கடுத்தான் ஏகுசுவர்க்கத் தினிது”
1. குளத்தை வெட்டி, 2. கலிங்கு[கோடு] பதித்து, 3. நீர் ஓடும் வழிகளை - ஆறு/ வாய்க்கால் [குளத்துக்கு நீர் வரும் வரத்துக்காலையும் வயல்களுக்கு நீர் போகும் போக்குக் கால்களையும்] உண்டாக்கி, 4. வரம்பு இட்டு எருப்போட்டு, உழுது வயல்களாக்கி, 5. பொதுக் கிணறுகளையும் உருவாக்குவோர் சுவர்க்கத்துக்குப் போவார்களாம்.

புங்குடுதீவில் கோயில் கோயிலாகக் கட்டி சுவர்க்கம் செல்ல வழிதேடுவோர் காரியாசான் சொல்வதைச் செய்யலாமே. பெரும்பாலான கோயில்கள் பூசை செய்வாரின்றி மூடிக்கிடக்கின்றன. அக்கோயில்களால் ஒருசில குடும்பங்களே வாழும். புங்குடுதீவில் குளங்களை உருவாக்கி பயிர் செய்ய வழி செய்தாலோ நன்னீரும், மரஞ்செடி, கொடி, புல், பூண்டு, புழு, பூச்சி, பறவைகள், விலங்குகள், மனிதர்கள் என உயிர்கள் அனைத்தும் பயனடையும். இவற்றுக்கும் மேலாக மழைபொழிய  நல்ல காற்றும் நிழலுமாக வளங்கொழிக்குமே. வேண்டுமானால் அறுவடைகாலத்தில் சென்று கோயில் திருவிழா போல் பெருவிழா எடுங்களேன். விழா எடுப்பதற்கு என்றே அம்பலவாணர் அரங்கையும் கட்டியிருக்கிறார்கள். பயன் பெறலாமே. 

புங்குடுதீவு சைவப்பெருமக்களுக்கு இன்னொன்றையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். திருவிளையாடற்புராணம் படித்தவர்களுக்கு அல்லது திருவிளையாடற் படம் பார்த்தவர்களுக்கு நான் சொல்லப்போவது நன்கு தெரிந்திருக்கும். நாம் வணங்கும் சிவனாரும் வைகை அணையைக் கட்டுவதற்கு கூலியாளாக பிட்டுக்கு மண்சுமந்து வரகுணபாண்டியனிடம் பிரம்படிபட்டு உயிர்களை வாழவைக்கும் நீரின் முதன்மையைக் காட்டினாரே. சிவனார் மதுரைக் கோயிலையும் கோயிற்பூசைகளையும் பூசாரிகளையும் புறந்தள்ளி வைத்துவிட்டு ஏன் அணைகட்டச் சென்றார். அவர் எமக்கு வழிகாட்டித் தந்தும் நாம் கோயில்களைமட்டும் கட்டிக்காப்பது சரியா? என புலம் பெயர்ந்து வாழும் படித்த அறிவுள்ள என் உறவுகளைக் கேட்கிறேன். புங்குடுதீவில் வட்டாரத்துக்கு ஒன்றாக பன்னிரெண்டு குளங்களைக் கட்டினால் என்ன? 

புங்குடுதீவில் வாழ்ந்த நம் மூதாதையர் 
“இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப
மழை பிணித்து”
                                           - (சிலம்பு:11 : 26 - 28)
என இளங்கோவடிகள் சொன்னது போல மழைநீரைக் குளங்களிலும் குண்டுகளிலும் பிடித்து[பிணித்து] வைத்திருந்தனர்.

குளங்களை எப்படி? எந்த வடிவத்தில் அமைக்கவேண்டும் என்பதையும் அவர்கள் அறிந்து வைத்திருந்தனர். ஈழத்தில் உள்ள குளங்கள் பெரும்பாலும் தாமரை மொட்டின் வடிவில் இருக்கும், அதாவது தாமரைத் தண்டு போல ஆறு ஓடிவந்து தாமரை மொட்டுப்போன்ற குளத்தினுள் விழும். நான்மணிக்கடிகையும் ஆற்றுவெள்ளம் உள்ளடங்கக் கூடிய குளங்கள் இருந்ததை
“யாறு உள் அடங்குங் குளமுள”
                                         - (நான்.கடிகை: 54: 1)
எனச் சொல்வதும் தாமரை மொட்டுப் போன்ற குள அமைப்பை உறுதி செய்கிறது. குளத்தின் வடிவம் வட்டமாக இல்லாது தாமரை மொட்டு வடிவில் இருப்பதால் என்ன நன்மை அடைந்தனர். வேறு எந்த வடிவில் குளத்தை அமைத்துப் பொருட்செலவைக் குறைத்தனர். எப்படி குளம் அமைப்பதற்கான நிலத்தைத் தேர்ந்து எடுத்தனர். குளத்தின் அணையிலிருந்து நீர்கசிந்து வெளியே போகாமலும் உடைப்பு எடுக்காதும் மண்ணால் எப்படிக் கட்டினர் என்பதையும் நான் வெளியிட இருக்கும் நூலில் பார்க்கவும். 
குட்டை

புங்குதீவில் வாழ் இளைஞர்கட்கு ஒரு சிறு வேண்டுகோள். நீங்கள் வசிக்கும் வட்டாரங்களில் குளம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மழைபொழியும் போது மழைநீர் எத்திசையில் இருந்து எத்திசைக்கு ஓடுகிறது?  ஓடையாக ஓடும் நீர் தேங்குகிறதா? தேங்கும் இடம் எது? அதுவே குட்டையாக மாறுகிறதா? அல்லது வேறு இடத்துக்கு வழிந்தோடுகிறதா? எதுவரை செல்கிறது?  என்பவற்றைப்   பார்த்துக் குறித்து வையுங்கள். நம்மூரைப் பசுமையாக்கத் தேவையான குளங்களை அமைக்க அது உதவும். எப்படி? என்ன செய்வது? என்பதைப் பின்னர் சொல்கிறேன்.

மனிதன் காட்டில் அலைந்த காலத்திலேயே பெண்கள் பயிர் வளர்க்கத் தொடங்கினார்கள் என்பதை உலக வரலாறு எடுத்துச் சொல்கிறது. அதனால் பண்டைத் தமிழர் பெண்களுக்கு கூடுதலான அறிவையும் பொறுப்பையும் கொடுத்துச் சென்றுள்ளனர். அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக ‘கணக்கதிகாரம்’ என்னும் நூலிலுள்ள ‘நீர்வழிச் சூத்திரம்” எனும்
“ஒரு நாளின் நாழிகையை ஒல்லா மனத்தின்
உரு நாழிகைக்கு ஈந்து மானே - தரும்இலக்கம்ச்
சேர்ந்ததற்கு வேறான இந்நாழிகைக்கு ஈந்து
பார்த்ததினம் பேரே பகர்
இப்பாடலைச் சொல்லலாம். 

இச்சூத்திரத்திலிருந்து
குளம் என்ன கொள்ளளவு உடையது?
எத்தனை மடைகளால் தண்ணீர் பாய்கிறது?
இவ்வளவு பரப்பளவுக்கு எவ்வளவு காலத்தில்  நீர்ப்பாசனம் செய்யலாம்?
எவ்வளவு தண்ணீர் மடைகளிலிருந்து வெளிவரும் ?
எல்லா மதகுகளும் திறக்கப்பட்டால் எவ்வளவு தண்ணீர் வெளியேறும்? என்பனவற்றைக் கண்டறியலாம்.

காரிநாயனார் ஏன் மானே! என விளித்து, பெண்ணுக்கு குளத்தைப்பற்றிய இவ்வளவு விடயங்களையும் கண்டறியத் தேவையான சூத்திரத்தைச் சொன்னார்? என்பதை  நாம் சிந்திக்க வேண்டும். நம்முன்னோர் பெண்களாகிய எமக்குக் கொடுத்துச்சென்ற பொறுப்பினை மதித்து வாழ்ந்தால் புங்குடுதீவு என்ன இவ்வுலகமே உணவில் தன்னிறைவு பெறும். 

நான் என் சிறுவயதில் தந்தையுடன் சேர்ந்து வன்னியில் பல இடங்களில் சிரமதானம் செய்திருக்கிறேன். அந்நாளில் என்னை அறிந்தவர்களுக்கு அது தெரியும். வினோபாஜியே சிரமதானத்திற்கு முதல் வித்திட்டவர். எங்கள் சிரமங்களைப் புறக்கணித்து ஒன்றாகக் கைகோர்த்து ஒன்றைச் செய்து முடிக்க நேரம் மட்டுமே தேவை. அரசாங்கமோ அதிக பணமோ தேவையில்லை. அரசாங்கத்துக்கும் உலகிற்கும் நாமே முன்னோடியாக விளங்கலாம். புங்குடுதீவு வளம் பெற நன்னீர் வேண்டும். நன்னீர் தேங்க குளங்கள் வேண்டும். குளந்தொட்டு [குளத்தைத் தோண்டி] புங்குடுதீவின் வளம் பெருக்குவோம்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment