Sunday 11 June 2017

உழைப்பே தலை!


ஒருவனைப் பார்த்து அவன் பெரிய உழைப்பாளி என்று பெருமையாகப் பேசுகிறோம். அதுபோல்  இன்னொருவனை ஒரு உழைப்பும் இல்லாமல் துன்பப்படுகிறான் என்றும் சொல்கிறோம். உழைப்பு என்றாலே துன்பப்படுதல் அல்லது வருந்துதல் என்ற கருத்தைத்தான் தரும். எந்த வேலையும் துன்பம் தரும் தானே.

அவன் பெரிய உழைப்பாளி என்னும் பொழுதும் அவன் பெரிதாகத் துன்பப்படுகிறான் என்றே சொல்கிறோம். அவன் படுந்துன்பம் அவனுக்குப் பொருளைப் பணத்தைத் தருகிறது. அதனால் அவனை மதிக்கிறோம். உழைப்பு இல்லாமல் இருப்பவன் உண்மையில் துன்பப்படவில்லை. பொருள் இல்லாமையே அவன் படுந்துயரமாகும். ஆதலால் துன்பப்படுவதே தலைசிறந்தது என்பது நம்மவர் கண்ட முடிவாகும். துன்பப்படுவதை பார்த்து மகிழ்வது வியப்பைத் தரவில்லையா? மனிதமனம் இத்தகைய ஒரு புதுமையான கலவையாக இருப்பது அற்புதமே! 

'உழைப்பு' என்னும் சொல் 'உழப்பு' என்னும் சொல்லில் இருந்து பிறந்த சொல்லாகும். தொல்காப்பியத்தில் உழப்பு என்ற சொல் இருக்கிறது. நாம் வெளிநாட்டிற்கு வந்து துன்பப்படுவது போல இரண்டாயிரத்தி ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டிற்கு பொருள் தேடிச்சென்றவன் தான் சென்ற நாட்டில் பட்ட துன்பத்தை மிகவும் விளக்கமாகக் கூறுவதை தொல்காப்பியர்
“சென்ற தேஎத்து உழப்பு நனிவிளக்கி”
                                                   - (தொல்: பொ:144: 51)
என்கிறார். ஆனால் தற்காலத் தமிழராகிய நாம் வெளிநாட்டில் பொருள் தேட எவ்வளவு உழைக்கிறோம்[துன்பப்படுகிறோம்] என்பதை நம் ஊர்களில் இருப்போருக்கு விளக்கிச் சொல்வதில்லை. அது அங்கே பலரை சோம்பி இருக்க வைக்கிறது.

தாயுமான சுவாமிகள் ‘என் உள்ளத்தை அறிவாய்! படுந்துன்பத்தை அறிவாய்! நான் ஏழை, தள்ளிவிடுவீராயின் தவித்துப்போவேன்’ என இறைவனிடம் கூறியதை
“உள்ளம் அறிவாய் உழப்பு அறிவாய் நான்ஏழை 
தள்ளிவிடின் மெத்தத் தவிப்பேன் பராபரமே”
                                                    - (பராபரக் கண்ணி: 33)
என பராபரக் கண்ணி சொல்கிறது. இதில்  துன்பப்படுவதை அறிவாய் என்பதை உழப்பு அறிவாய் என்கிறார். 

பட்டினத்தார்  துன்பத்தால் வரும் உயர்வையும் துன்பப்படாது சோம்பி இருப்பதால் வரும் இழிவையும் திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் மிக அழகாக எடுத்துக் கூறியுள்ளார்.
உழப்பின் வாரா உறுதிகள் உளவோ
கழப்பின் வாராக் கையுற வுளவோ”
துன்பப்பட்டு முயல்வதால் கிடைக்காத உறுதிப்பாடுகளும் இருக்கின்றனவா? சோம்பலால் [கழப்பு] கிடைக்காத துன்பங்களும் [கையுறவு] இருக்கின்றனவா? இல்லையே! எனவே உழப்பே தலை! உழைப்பே தலை!!
இனிதே,
தமிழரசி.

1 comment: