Tuesday 6 June 2017

சங்ககால உணவு உண்போமா! - 3

முண்டகம் [கடல்முள்ளி]

தமிழகம் எங்கும் சங்ககாலத்தில் இயற்கைவளம் நிறைந்திருந்ததை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. ஆட்டுக்கிடாய் கட்டி வளர்த்த வயலில் விரால் மீன்கள் துள்ளிக் குதித்தன. அந்த ஆட்டுக்கிடாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டை இட்டு உழக்கிய சேற்றில் உழாமலே விதைத்தனர். கரும்புப் பாத்தியில் நெய்தல் மலர்கள் பூத்துக் குலுங்கின.
“தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்
ஏறுபொருத செறு உழாது வித்துநவும்
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்”
                                                    - (பதிற்றுப்பத்து: 13: 1 - 3)
இப்படி இயற்கை வளம் நிறைந்திருந்தால் பலவையான உணவுப் பொருட்களும்  நிறைந்தே இருந்தன. கரும்பு ஆலைகளில் கரும்பை இட்டு சாறு எடுக்கும் அளவுக்கு கரும்புச் செய்கை மேன்மை அடைந்திருந்தது. 

மழை விளையாட்டாகப் பொழிய மூங்கில் வளரும் மலைத்தொடரில் கொலைவெறியுடைய யாளி தாக்க யானைக்கூட்டம் கதறுவது போல  கரும்பைப் பிழிந்து எடுக்கும் எந்திரத்திரங்களின் சத்தம் ஓயாது கேட்டது. கரும்புச் சாற்றிலிருந்து வெல்லம் [விசயம்]  உண்டாக்குவதால் ஆலைகளைப் புகை சூழ்ந்திருந்தது. அவ்வாலைகளில் கரும்புச் சாற்றை விரும்பியோர் வாங்கிக் குடித்தனர் என்பதை
“மழை விளையாடும் கழைவளர் அடுக்கத்து
அணங்கு உடை யாளி தாக்கலின் பலவுடன்
கணஞ்சால் வேழம் கதழ்வு உற்றாங்கு
எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை
விசயம் அடூஉம் புகைசூழ் ஆலை தொறும்
கரும்பின் தீஞ்சாறு விரும்பினர் மிசைமின்”
                                                    - (பெரும்பாண்: 257 - 262)
என பெரும்பாணாற்றுப்படை சொல்கிறது. கரும்புச்சாற்றை நானிலமக்களும் விரும்பிக் குடித்தனர்.

கோடை காலத்தில் நெய்தல் நில மகளிர் என்ன செய்தார்கள் என்பதை மாங்குடி மருதனார் படம் பிடித்து புறநானூற்றில் காட்டியுள்ளார். வண்டு மொய்க்க விரிந்த மலர்கள் மணம் வீசும் கடற்சோலை உடைய நெய்தல் நிலம். கடல்முள்ளிப் பூவால் கட்டப்பட்ட மாலையும் வளையலும் அணிந்த மகளிர் பெரிய பனையின் நுங்கின் நீரும், கரும்பின் இனிய சாறும், தென்னையின் [தாழை] சுவையான இளநீருடன் சேர்த்துக் கலந்த அந்த முந்நீரை உண்டு, கடலினுள் நின்ற புன்னைமரத்தில் ஏறி கடலில் [முந்நீர் - ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் மூன்றும் சேர்ந்த கடல் நீர்] பாய்ந்து நீந்தி விளையாடினர். 

“வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்
பூங் கரும்பின் தீஞ் சாறும்
ஓங்கு மணற் குவவுத் தாழைத்
தீ நீரொடு உடன் விராஅய்
முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயுந்து”
                                                 - (புறம்: 24: 10 - 16)
சங்ககாலப் பெண்கள் மரத்தில் ஏறி கிளையிலிருந்து பாய்ந்து நீந்தி விளையாடியதை பல சங்க இலக்கியப் பாடல்கள் பதிவுசெய்து வைத்திருக்கின்றன. பெண்கள் நீந்தினாலே கற்பு கரைந்து போய்விடும் என நினைப்போர் இக்காலத்திலும் வாழ்கின்றனர். அத்தகையோர் சங்ககாலப் பெண்களைப் பற்றி என்ன நினைப்பரோ!
முந்நீர்

சங்ககால மகளிர் கோடை வெயிற் தாகத்தைத் தீர்க்கக் குடித்த முந்நீரை நான் சுவைத்துக் குடித்திருக்கிறேன். உங்களுக்காக….

சங்ககால மகளிர் குடித்த முந்நீர்

தேவையான பொருட்கள்:
நுங்கு  -  1
இளநீர்  -  1
கரும்புச்சாறு  -  ½ கப்

செய்முறை:
1. ஒரு பாத்திரத்துள் வெட்டிய நுங்கின் நீரை விடவும்.
2. நுங்கின் கண்களின் மேலுள்ள தோலை அகற்றி சிறு துண்டுகளாக வெட்டி நுங்கின் நீருடன் சேர்க்கவும்.
3. அதனுடன் வெட்டிய இளநீரையும் விட்டு அதன் வழுக்கலையும் வெட்டிப் போடவும். [வழுக்கல் இருந்தால்]
4. இக்கலவைக்குள் கரும்புச்சாற்றையும் விட்டு நன்கு கலந்து கொள்க.
5. முந்நீரைக் குவளைகளில் விட்டுப்பரிமாறவும்.

குறிப்பு:
இளநீரின் சுவைக்கு எற்ப கரும்புச்சாற்றை கூட்டிக் குறைத்துக் கலந்து கொள்ளலாம். முந்நீர் குளிர்மையாக இருக்கும். ஆதலால் ஐஸ்கட்டி சேர்க்கத் தேவையில்லை.
இனிதே, 
தமிழரசி.

No comments:

Post a Comment