Wednesday 7 June 2017

குறள் அமுது - (136)


குறள்:
இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலம்என்னும் நல்லாள் நகும்                           - 1040

பொருள்:
எம்மிடம் ஒரு பொருளும் இல்லையென்று முடங்கி இருப்போரைக் கண்டால் நிலமகள் என்று சொல்லப்படும் நல்லவள் சிரிப்பாள்.

விளக்கம்:
இத்திருக்குறள் உழவு என்னும் அதிகாரத்தில் உள்ள பத்தாவது குறளாகும். மனிதர் உயிர்வாழ்வதற்கு வேண்டியவற்றை உழவுத் தொழிலால் பெறலாம் என்பதையும் எந்த ஒரு தொழில் இல்லாது போனாலும் உழவுத் தொழில் செய்து வளம் கொழிக்க வாழலாம் என்பதையும் நிலத்தின் ஏளனச் சிரிப்போடு திருவள்ளுவர் சொல்லும் பாங்கு நயக்கத் தக்கதாகும். 

உலகில் ஏழ்மையே இல்லாது அகல வேண்டுமெனில் நிலத்தை உழுது பயிரிட்டு வேளாமை செய்வதே சாலச்சிறந்ததாகும். மழை பொழிந்து நீரைத் தந்தாலும் நாம் நிலத்தில் இருந்தே நீரையும் உணவையும் பெறுகிறோம். மனிதன் உயிர்வாழ நீரும் உணவும் இன்றியமையாதவையாகும். 

உலக உயிர்களில் பதர் இல்லாத ஒரே ஓர் உயிரினம் மனித இனமாகும். அத்தகைய மனித இனத்திலும் நிலத்தை உழுது பயிரிடத் தேவையான வித்துக்களும் உழும் கலப்பையையும் கையில் இருக்கவும் சோர்வடைந்து ஏழ்மையில் வாடும் அறிவிலியும் பதரே என்பதை
“வித்தும் ஏரும் உளவா யிருப்ப
எய்த்து அங்கிருக்கும் ஏழையும் பதரே”         - (நறுந்தொகை: 68)
என நறுந்தொகையில் பாண்டிய அரசனான அதிவீரராம பாண்டியன் கூறியுள்ளான். நறுந்தொகையை வெற்றிவேற்கை என்றும் அழைப்பர்.

நிலத்தை உழுது பண்படுத்தி வித்திட்டு மரம், செடி, கொடிகளை நட்டுப் பயிரிட்டு வளர்ப்பதால் நிலத்தின் வளம் செழிக்கிறது. மழை பொழிகிறது. உண்ணும் உணவுப் பொருட்களும், உடுக்கும் உடைகளுக்கான பருத்தி, பட்டுப்போன்றவையும், குடிக்கும் நீரும், சுவாசிக்கத் தேவையான சுத்தமான காற்றும் எமக்குக் கிடைக்கின்றன. பாடுபட்டு பலன் அடைகிறோம். உடலோடு உள்ளமும் நலம் பெறுகிறது. அவற்றுக்கான விலையை என்றுமே நிலம் கேட்டதுண்டா?

அதனாலேயே திருவள்ளுவர் எம்மிடம் ஒன்றும் இல்லையே என்று கூறிக்கொண்டு அசையாது முடங்கி இருப்பாரைப் பார்த்து உலக உயிர்களையெல்லாம் தாங்கிப் பாதுகாக்கும் நல்லவளான நிலமகள் ‘மனிதராய் பிறந்து முடங்கிப் பதராய் கிடக்கின்றனரே’ என வாய்விட்டு தனக்குள் சிரிப்பாளாம் என்கிறார்.

No comments:

Post a Comment