Saturday 3 June 2017

ஊமையாக்கும் காதல்


காதலே உலக உயிர்கள் யாவும் ஒன்றோடு ஒன்று அன்புகாட்டவும் இரக்கப்படவும் துணைபுரிகிறது. அதனாலேயே பாரதியாரும் ‘காதல் இல்லையேல் சாதல் சாதல்’ என்று உரக்கக் குரல் கொடுத்தர். அந்தக் காதலே இனக்கவர்ச்சியையும் தூண்டுறது. அந்தத் தூண்டுதலால் எழும் காதலை பலரும் அறியச் சொல்வோர் சிலரே. அதனால் காதல் வயப்பட்டோர் ஊமையர் போல தமது காதலைச் சொல்லமுடியாது இருக்கின்றனர்.

சங்க காலத்தில் ஓர் இளம் நங்கையைக் காதலித்த காதலன் ஒருவன் கல்விக்காகவோ போருக்காகவோ பொருள் தேடியோ இன்னொரு நாட்டிற்கு சென்றுவிட்டான். அவர்களின் காதலை அவளின் தோழி மட்டுமே அறிவாள். காதலன் பிரிந்து சென்ற நாளில் இருந்து காதலி படுந்துயரைப் பார்த்து பெருந்துயர் கொண்டாள் தோழி. தனது காதலுக்காகத் தோழி அடைந்த வருத்தத்தைக் கண்ட காதலி
“கவலை யாத்த அவல நீள்இடைச்
சென்றோர் கொடுமை எற்றித் துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே கூவல்
குரால்ஆன் படுதுயர் இராவிற் கண்ட
உயர்திணை ஊமன் போலத்
துயர்பொறுக் கல்லேன் தோழி நோய்க்கே”
                                                      - (குறுந்தொகை: 224)
யாமரங்கள் செறிந்த துன்பந்தரும் பாலை வழியிடையே சென்றவரின் கொடுமையை உயர்வாக எண்ணித் தூங்காது இருக்கும் வருத்தத்திலும் பார்க்க வருத்தம் உண்டாகிறதே! இரவு நேரம் கிணற்றினுள் விழுந்த குரால் நிறப்பசுவைக் கண்ட ஊமையன் அதனைப் பிறருக்கு எடுத்துச் சொல்லமுடியாதிருப்பது போல நான் படுந்துன்பத்தைப் பார்த்து என் காதலைப் பிறருக்குச் சொல்லமுடியாது கலங்கும் தோழியின் வருத்தத்தால் ஏற்படுந் துயரை என்னால் பொறுக்க முடியவில்லையே!

காதலி தன் காதலை மற்றோருக்குச் சொல்லமுடியாது ஊமையானாள். இவளது காதலை எவருக்கும் எடுத்துச் சொல்லமுடியாது தோழியும் ஊமையானாள். ஒரு ஊமை படும் துயரைப்பார்த்து இன்னொரு ஊமை வருந்தமுடியுமே அல்லாமல் சொல்லித் தேற்ற முடியுமா? முடியாது. காதல் இருவரையும் ஊமையாக்கியதால் ஒருவரைப் பார்த்து ஒருவர் வருந்துகின்றார்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment