Monday 5 June 2017

குப்பை என்னும் வைரம்

வைரம் எடுப்போர் [Northwest Liberia]          - Stephen Haggerty

இயற்கையின் படைப்பே பலவகைப்பட்ட அற்புதங்களால் ஆனது. அவற்றுள் சிலவற்றை எம்மால் நம்பமுடியாது. ‘ஆ! அதுவா இது!’ என்று வியப்பின் எல்லைக்கே எம்மைக் கொண்டு செல்லும். வைரமும் அப்படியானதே! வேண்டத்தகாத பொருளாக அருவெறுத்து கழிவு, குப்பை, கூளம் என்றெல்லாம் கூறும் பொருட்களே வைரமாய் மின்னுகிறது. குப்பையே வைரம் என்றால் நம்புவீர்களா!  குப்பையே வைரம். அதுவே உண்மை. மேலேயுள்ள படத்தைப் பார்த்தால் என்ன தெரிகிறது? எங்கிருந்து வைரம் எடுக்கிறார்கள்?

அதனால் இயற்கையின் படைப்பிலே குப்பை என்று கழித்து வைப்பதற்கு எதுவும் இல்லை. எனெனில் இயற்கையாக உருவானவை யாவும் ஒரு சுழற்சி முறையில் தோன்றியும் அழிந்தும் தம்மை நிலைநிறுத்திக் கொள்கின்றன. ஒன்று பிறிதொன்றாக நிலைமாறும் பொழுது சிலவேளையில் அதன் பெருமதியும் கூடும். இயற்கையில் இருந்து மனிதன் உண்டாக்கிய செயற்கைப் பொருட்கள் யாவும் இயற்கையுடன் மீண்டும் கலக்கும். 

மரத்தில் இருந்து மனிதன் உருவாக்கிய உரல், உலக்கை, கட்டில், வள்ளம், வீடு போன்றவையும், ஒலையில் இருந்து இழைத்த கிடுகு, பாய், உமல், கடகம், பெட்டி போன்றவையும், கல், மண், வெள்ளி, இரும்பு போன்றவற்றில் இருந்து செய்த யாவுமே உடைந்து அழிந்து போகும் போது மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும். 

அளபெடைப் பெயர்ச்சொல் பற்றி தொல்காப்பியர்
“இயற்கைய ஆகும் செயற்கைய”
                                                  - (தொல்: சொல்: 125)
எனக் கூறியது மனிதன் உண்டாக்கும் செயற்கைப் பொருட்கள் இயற்கையுடன் கலக்கும் தன்மைக்கும் பொருந்துகிறது.

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்து கடந்த ஒன்றரை நூற்றாண்டு வரை இருந்த அந்தநிலை இன்று இல்லை. கி பி 1868க்குப் பின்னர் மண்ணின் வளமும் நீரின் வளமும் காற்றின் வளமும் மாசடைந்து காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எதனால் அந்த நிலை உலகிற்கு ஏற்பட்டது என்பதை உலகும் உலகவல்லரசுகளும் நன்கு அறியும். எனினும் அவை இயற்கையின் பண்பைக் காதலிக்காது செயற்கையாம்  பணத்தைக் காதலிப்பதால் காலநிலை மாற்றங்களைப் பொருட்படுத்தவில்லை. ஏதோ கண் துடைப்புக்கு ஐ நா சபையில் ஒன்றுகூடி அறிக்கை விடுவார்கள். அவர்கள் தம்  எண்ணங்களைச் செயற்படுத்த முன் முப்பது வருடங்கள் ஓடி ஒரு தலைமுறை அழிந்திருக்கும். 

இயற்கையைக் காதலித்த அந்தத் தலைமுறை என்ன செய்தது  அவர்கட்கு முன் வாழ்ந்த தலைமுறையினர் என்ன செய்தனர் என்பதை அறியாது இளம் தலைமுறை தடுமாறும். உங்கள் முந்தையோர் செய்தவை எல்லாம் பிழை என மூளைகள் சலவை செய்யப்படும். அதற்கு முன்பு எம் இளைஞர்களே! கொஞ்சம் விழித்துக் கொள்ளுங்கள். இல்லையேல் இன்று பேசு பொருளாக எட்டிப் பார்க்கும் plastic rice, plastic eggs போன்ற பல பொருட்கள் நம் சந்ததியினரை காவு எடுக்க வரும். எனவே நாம் நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிட்டு உண்பதே சாலச் சிறந்ததாகும். ஒவ்வொரு நாடும் வெளிநாடுகளை நம்பி உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யாது பயிர்ச்செய்கைக்கு முதன்மை கொடுத்தால் இந்த இழிநிலையிலிருந்து மனிதகுலம் தப்பும்.

நான் மேலே சொன்ன மண்ணின் வளமும், நீரின் வளமும், காற்றின் வளமும் மாசடையக் காரணம் என்ன? கடந்த ஒன்றரை நூற்றாண்டாக செயற்கையாக இரசாயனப் பொருட்களைக் கொண்டு plastics - Celluloid[1868], Reyon[1900], Cellophane[1908], polyethylene[1933], Acrylic[1936], Nylon[1939] போன்ற பொருட்களை இந்தஇந்தக் காலங்களில் இருந்து உற்பத்தி செய்கின்றனர். இப்பொருட்கள் எதுவுமே தொல்காப்பியர் சொன்ன ‘இயற்கைய ஆகும் செயற்கைய’ என்னும் கூற்றுக்குப் பொருந்தாது. 

அவற்றில் சில மக்கி மண்ணோடு மண்ணாக குறைந்தது 450 வருடங்கள் எடுக்கும். ஒரு சில மண்ணோடு மண்ணாக 1000 வருடங்கள் செல்லும். அப்படி மண்ணோடு மண்ணாக மாறினாலும் நிலத்திலும் நீரிலும் காற்றிலும் நச்சுத் தன்மையை உண்டாக்கும். எமக்கு மட்டுமல்ல கடல்வாழ் உயிரினங்களில் இருந்து உலக உயிரினங்கள் யாவற்ருக்குமே இவை கேடு தரும். Plasticஐ நிலத்தில் போடாதீர்கள். அவை சூழலியலைப் பாதிக்கும்.

எனவே ‘PLASTIC’ என்பது உலக உயிர்கொல்லி. அது குப்பை அல்ல, என்பதை நம் சிந்தையில் செதுக்கி வைக்க வேண்டும். 

நம் முன்னோர்கள் குப்பை என்று எவற்றைச் சொன்னார்கள் தெரியுமா?
“பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தாறு தந்த
கொற்ற நீள்குடைக் கொடித்தேர் செழிய!”
                                                       - (புறம்: 24: 21 - 23)
இப்பாடலில் புலவரான மாங்குடி மருதனார் ‘குப்பை’ என்று நெற்குவியலைக் குறிப்பிடுகிறார். 

பொருநராற்றுப்படை
“குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை”
                                                       - (பொருநராற்றுப்படை: 244)
எனத் தானியக் குவியலைக் குப்பை என்கின்றது. 

நற்றிணையோ
“…………………… சூழ்கழி இறவின்
கணங்கொள் குப்பை உணங்குதிறன் நோக்கி”
                                                       - (நற்றிணை: 101: 2 - 3)
என இறால் குவியலாகக் காய்வதைப் பெண்கள் பார்த்ததைச் சொல்கிறது. 

திரிகடுகம்
“உப்பின் பெருங்குப்பை நீர்படியின் இல்லாகும்”
                                                        - (திரிகடுகம்: 83: 1)
என உப்புக் குவியலைக் குப்பை என்கின்றது. எனவே நம் முன்னோர்கள் உணவுப் பொருட்களின் குவியலையே குப்பை என்றனர்.

நம்முன்னோர்கள் குப்பை என்று உணவுப்பொருட்களை அழைத்த உண்மை தெரியாமல் அவற்றை எல்லாம் குப்பை என வீசி எறிந்தோம். வெளிநாட்டாரின் உணவு மோகத்தில் மயங்கி அவர்களின் சொற்கேட்டு இன்று நீரழிவு என்றும் இரத்தக் கொதிப்பு என்றும் மாத்திரை மாத்திரையாகப் போட்டு நோயில் நுடங்குகிறோம். நீரழிவு நோய்க்கு அரிசி கூடாது என்று கூறி கோதுமை மாவில் செய்த உணவுகளை உண்கிறோம். உண்மையில் கோதுமையை விட புழுங்கல் அரிசியே சிறந்தது. புழுங்கல் அரிசியிலிருந்து கிடைக்கும் low glycemic திடீரென கூடும் சக்கரை உயர்வைத் தடுக்கும். 

அது போல் நம்முன்னோர் கரும்புச்சாற்றைக் குடித்து நோயற்று வாழ்ந்தார்கள். நாமோ கரும்புச்சாற்றை குப்பை என்று குடிக்காது தவிர்த்து சீனியை உண்டு நீரழிவால் துன்பப்படுகிறோம். கரும்புச்சாற்றில் இருக்கும் நீரழிவைத் தடுக்கும் இராசாயனப் பொருட்கள் உயர் வெப்பநிலையில் அதைக்காய்ச்சி சீனியாக்கும் பொழுது இல்லாமல் போகிறது. இக்காலத்தில் தண்ணீர்ப் பந்தல் வைத்து மோர் குடிக்கக் கொடுப்பது போல சங்ககாலத்தில் கரும்புச்சாறு குடிக்கக் கொடுத்ததை சங்க இலக்கியம் காட்டுகிறது. 

குப்பை என்ற பெயருடைய குப்பை மேனி, குப்பைக் கீரை யாவுமே உடல் நலத்தைப் பேணுபவையாகும். குப்பைக் கீரையைத் தமிழர்கள் இரண்டாயிர வருடங்களுக்கு மேலாக உண்டு வருகின்றனர். புறநானூற்றில்
“குப்பைக் கீரை கொய்கண் அகைத்த
முற்றா இளந்தளிர் கொய்து கொண்டு உப்பின்று
நீர்உலை யாக ஏற்றி மோரின்று
அவிழ்பதம் மறந்து பாசடகு மிசைந்து”
                                                    - (புறம்: 159: 9 - 10)
என வறுமையால் உப்பு இல்லாமல் குப்பைக்கீரையை உண்டதை பெருஞ்சித்திரனார் சொல்வதால் அறியலாம். மூட்டுவலிக்கு குப்பைக்கீரை சிறந்த மருந்தாகும்.

இன்று நாம் குப்பை என்று வெட்டி வீசும் சில தாவரங்கள் நம் முன்னோருக்கு நில மட்டத்திலிருந்து பல நூறு மீற்றருக்குக் கீழ் இருக்கும் வைரம், மாணிக்கம், பொன், வெள்ளி, செம்பு, போன்ற விலைமதிப்பற்ற பல பொருட்களைக் காட்டிக் கொடுத்தன. ஆனால் எமக்கு அவை பற்றிய மிகச்சிறிய அடிப்படை அறிவுகூட இல்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

கல்லும் மலையும் குதித்து பெரும் காடும் சுனையும் கடந்து ஓடிவரும் ஆறு. அப்படி ஓடிவரும் ஆறு கல், மண், மரம், செடி, கொடி, இறந்த உயிரினங்கள் யாவற்றையும் உருட்டிப் புரட்டி இழுத்துவரும். ஓடிவரும் இடத்தில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் ஆறு இழுத்துவரும் பொருட்கள் அந்த தடங்கலில் சிக்குண்டு தங்க, ஆற்று நீர் திசைமாறி வளைந்தோடும். இப்படித் தொடர்ந்து தங்கும் பொருட்கள் யாவும் ஒன்றாகச் சேர்ந்து உருவாவதே வண்டல் மண்ணாகும். ஆற்று நீர் இந்த வண்டல்களோடு கனிமங்களையும் கொண்டுவந்து சேர்க்கும். கனிமங்கள் ஒன்று சேர்ந்து கனிமப் படிவங்களை உண்டாக்கும். இவ்வாறு உண்டான வண்டல் படிவங்கள் காலப்போக்கில் படிவப் பாறைகளாக மாறும். 

எரிமலையின் போது கொதித்து ஓடும் பாறைக் குழம்பு [Magma] குளிர்ந்து பாறைகளாகின்றன. அப்போது வெப்பநிலைக்கு தக்கபடி ஒவ்வொரு கனிமங்களும் பாறைக் குழம்போடு தொழிற்பட்டு புதுக்கனிமங்களை உருவாக்கி பாறையோடு இறுகிப் பாறையாய் இருக்கும். தண்ணீர் மீண்டும் பாறையினுள் ஓடி கனிமங்களைக் கரைத்து இழுத்து வரும். அது வேறு இடங்களில் படிமங்களாகப் படியும். இச்செயற்பாடு இயற்கையின் சுழற்சியாய் மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது. இதன் போது உருவாவதே வைரம், பிளாட்டினம், தங்கம், வெள்ளி போன்றவை. இன்னொரு வகையில் சொல்வதானால் நீர் அள்ளிவந்த குப்பைகளையே இயற்கை காலவேட்டத்தில் வைரம், பொன் போன்ற விலைமதிப்பற்ற பொருட்களாக மாற்றுகிறது. அதனால் குப்பையே வைரமாகிறது.

புல்லுருவி

இயற்கையாக எங்கே குதிரைவாலி, புல்லுருவி போன்றவை வளருமோ அந்த நிலத்தின் அடியிலே பொன், வெள்ளி போன்ற கனிமங்கள் கிடைக்கும் என்பதை பண்டைத்தமிழர் அறிந்திருந்தனர். அவை வளரும் மண்ணின் நிறத்தையும் தன்மையையும் கொண்டு எப்பொருள் கிடைக்கும் என்பதையும் அறிந்திருந்தனர். குதிரைவாலி என்பது தினை, வரகு, குரக்கன் போன்ற ஒரு தானியமாகும். ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் வாழ்ந்தோர் குதிரைவாலியை சுவைத்து உண்டனர். நாம் குதிரைவாலியை குப்பை என ஒதுக்கிவிட்டோம். அது நீரழிவு நோய் உள்ளோருக்கும், மலச்சிக்கல் உடையோருக்கும் மிகநல்ல உணவாகும்.
குடியோட்டி - பொன்னுமுட்டை

நாம் அன்றாடம் குப்பை என்று வெட்டி வீசும் ஓர் அற்புதமான மூலிகைச் செடி குடியோட்டிச் செடியாகும். அதனை பொன்னுமுட்டைச் செடி என்றும் வைத்திய வாகடங்கள் சொல்கின்றன. அதன் பூ பொன் முட்டை போல இருப்பதால் பொன்னுமுட்டை என அழைத்தனர் போலும். இச்செடி காடுபோல மண்டி இயற்கையில் வளர்ந்திருக்கும் நிலத்தின் கீழே செம்பு இருக்கும் என்பதையும் தெரிந்து வைத்திருந்தனர். குடியோட்டிச் செடியின் விதைகள் உடலில் ஏற்படும் வலிகளைப் போக்கும். பல்வலிக்கு அதன் விதைகளை காய்ந்த இலையில் வைத்துச் சுற்றி சுருட்டுப்போல் குடிக்கக் கொடுப்பர். மயக்க மருந்தாகவும் அவ்விதைகள் பயன்படுத்தப்பட்டன. கண்டசர்க்கரையுடன் குடியோட்டிப் பூவைச் சேர்த்துக் காய்ச்சி இருமலுக்கு மருந்தாகப் பயன்படுத்தினர். 
ரம்ப

நாம் கறிக்கு வாசனைக்காகப் போடும் ரம்பயும் ஒரு கனிமக் காட்டியே. நீரும் கருமையான மண்ணும் கலந்த சேற்றுநிலத்தில் இயற்கையாக ரம்பச் செடிகள் செழித்து வளர்ந்து இருக்குமாயின்  அவ்விடத்தின் கீழே வைரம் இருக்கும் என்பதையும் ஆராய்ந்து கண்டிருந்தனர். அத்துடன் அங்கிருக்கும் சேற்றில் இருந்து மூக்கை அரிக்கும் ஒருவித மணமும் வரவேண்டும். 

இயற்கையோடு இசைந்து வாழ்ந்த நம் முன்னோரின் பல அரிய நல்ல கண்டுபிடிப்புகளை நாம் குப்பை எனப்புறக்கணித்து உண்ண நல்ல உணவில்லாமல் செயற்கை உணவுகளை உண்டு வாழும் நிலை வருவதை எண்ணிச் சிரிப்போமா! அழுவோமா!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment