Sunday, 28 May 2017

புங்கை ஊரின் மக்கள் கேளும்!

சேவற் பண்ணை

மண்ணை மதித்து வாழ்ந்த காலம்
மகிழ்ந்து நன்றாய் உண்ட மாந்தர்
பண்ணை என்று என்னைச் சொன்னார்
பாரில் எங்கும் பரவி நின்றேன்!

உண்ண நீரும் உணவும் நல்கி
பண்ணை போலக் கூடி நன்கு
பண்ணை ஆக வாழ்தல் கண்டு
பண்ணை என்றார் பரிந்து நின்றேன்!

பண்ணைப் பாலம் தன்னில் போகும்
புங்கை யூரின் மக்கள் கேளும்!
பண்ணை என்னை மறந்து நீரும்
பாங்காய் செல்லல் கண்டு நின்றேன்!

இண்டை நாளில் எனை மறந்தே
இரவு பகலாய் ஆய்ந்து நன்றாய்
பெண்ணை பண்ணை ஆச்சு தென்று
பேரறிஞர் சொல்ல நாணி நின்றேன்!

பண்ணை

பெண்ணை பண்ணை ஆன தென்றால்
பனையின் பேரை என்ன சொல்வீர்!
பெண்ணை என்பது பனையே ஆகும்
பண்ணை யானோ செடியாய் நின்றேன்!

விண்ணைத் தொட்ட புகழை நண்ணி
வைத்திய ஏடு தோறும் செங்கண்
பண்ணை சேவற் பண்ணை என்றே
பண்ணை பலதாய் பேச நின்றேன்!

பண்ணை என்றன் பூவைக் கொண்டு
பேரை இட்டார் பண்டை சேவற்
பண்ணை யானேன் கோழிக் கொண்டை
பூவே யென்ன கேட்டு நின்றேன்!

வெண்ணெய் கையிலி ருக்க நோய்க்கு
வையம் முழுதும் தேடி ஓடி
எண்ணெய்க் கலையும் மக்கள் நீரோ!
எந்தன் பண்பு சொல்ல நின்றேன்!


கண்புரை [Cataracts]

மண்ணில் பிறந்த உயிர்கள் வாழ
மருந்தாய் தருவேன் எந்தன் உயிரை
கண்ணில் படரும் புரையை நீக்கி
காணும் காட்சி காட்டி நின்றேன்!

பெண்ணின் கருவறை நோயும் குருதிப்
பெருக்கும் போக்கி பெண்மை பேணி
மண்ணில் மைந்தர் பிறக்க வைத்து
மனிதர் போற்ற மகிழ்ந்து நின்றேன்!

பண்ணை என்றன் மேன்மை கண்டே
பண்ணை பண்ணை யாய் உலகோர்
பண்ணை வளர்த்து கோடி கோடி
பணம் பண்ணல் பார்த்து நின்றேன்!

பண்ணை பெற்ற மக்கள் நீங்கள்
பழமை மறந்து நடத்தல் நன்றோ!
பண்ணை விதைகள் தேடி வித்தி
பண்ணை வைத்து வாழ்த்த நிற்பேன்!                                       
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
எப்படி யாழ்ப்பாணத்திலுள்ள பண்ணை என்ற இடத்திற்கு ‘பண்ணை’ என்ற பெயர் வந்தது? ஒருகாலத்தில் எம் யாழ்ப்பாணப் பண்ணைப்பகுதி பண்ணைச்செடிகளால் சூழ்ந்து இருந்ததால் அவ்விடத்தை பண்ணை என அழைத்தனர். பண்ணைக்கீரைச்செடி மூலிகைச் செடியில் ஒன்றாகும். அது சிறுபண்ணை, செம்பண்ணை, புற்பண்ணை, சேவற்பண்ணை எனப்பல வகையில் காணக் கிடைக்கிறது. மானாவாரி [மழையை நம்பி பயிர் செய்யும் நிலங்கள்] நிலங்களில் மழைக்காலத்திற்குப் பின்னர் முளைக்கும் செடிவகைகளில் பண்ணைக் கீரைச்செடியும் [Celosia Argentea] ஒன்று. அதனால் நம்முன்னோர் அதனைப் பயிரிட்டனர். பண்ணைச்செடி நம் எல்லோருக்கும் தெரிந்த செடியே. வைத்திய வாகடங்கள் ‘பண்ணை’ என்று கூறும் செடிவகையில் ஒன்று சேவற்பண்ணைச் செடியாகும். அதனை இக்காலத்தில் ‘கோழிக் கொண்டைச் செடி’[CockComb] என்று அழைக்கிறோம். 

நம் முன்னோர் கண், இரத்தம், சிறுநீர் தொடர்புடைய நோய்களுக்கு மருந்தாகப் பண்ணைச்செடியைப் பயன்படுத்தினர். இதன் கீரையை உண்டுவந்தால் மலட்டுத் தன்மை நீங்கும் என்பர். அக்காலத்தில் யாழ்ப்பாணத் தமிழர் வீடுகளில் எல்லாம் இச்செடி நின்றது. இப்போது மருந்துக்கும் கிடைப்பது அரிது. எத்தகைய வரட்சியையும் தாங்கி நிற்கும் தன்மையுடையது.  பல உலகநாடுகள் மருந்துக்காக இச்செடியை வளர்த்து பணம் பண்ணுகின்றன. நாமும் பண்ணையின் பெயரைச் சொல்லி வளர்த்தால் என்ன? பலவகையான பண்ணை விதைகளை  ebayல் வங்கலாம்.

No comments:

Post a Comment