Monday, 1 October 2012

தமிழரின் நான்மறை எது? - பகுதி 2


றைவன் வேதங்களைச் சொன்னார் என்னும் பொழுது, எங்கே? யாருக்கு? எப்போது? சொன்னார் என்பன போன்ற கேள்விகள் கூடவே எழும். சங்க இலக்கிய கால வரலாற்றுப் பதிவுகளை தந்த சங்க இலக்கியச் சான்றோர்களிலே பரணர் மிகவும் நேர்த்தியாகவும் நுணுக்கமாகவும் அன்றைய தமிழரின் வரலாறுகளை பதிவு செய்திருக்கிறார். பூம்புகார்த் துறையில் ஆலமரமுற்றத்தே நான்மறை முதுநூல் உடைய மூன்றுகண் இறைவன் இருந்த வரலாற்றையும் பதிவுசெய்துள்ளார். அதனைப் பரணர் ‘உலகெலாம்[ஞாலம்] மணம் பரப்பும்[நாறும்] நல்ல செழுமையான[நலங்கெழு] புகழ் உள்ள [நல்லிசை], நான்மறையாகிய பழையநூலை[முதுநூல்]  உடைய மூன்றுகண் இறைவனின்[முக்கட் செல்வன்] ஆலமர முற்றம் அழகுபெறுவதற்கு[கவின்பெற], பொய்கை சூழ்ந்த பொழிலில் வீட்டுப் பெண்கள்[மனை மகளிர்] கையால்செய்த[கைசெய்] பாவைகள் இருந்த துறையை’
"ஞாலம் நாறும் நலங்கெழு நல்லிசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்
ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில்மனை மகளிர்
கைசெய் பாவைத் துறை”                      (அகம்: 181: 15 - 19)
எனக் குறிப்பிடுவதால் அறியலாம். முதற்பகுதியில் எடுத்துக்கூறிய புறநானூற்றுப் பாடைலைப் பாடிய ஆவூர் மூலங்கிழார் போலவே இப்பாடலிலும் பரணரும் 'நான்மறை முதுநூல்' என நான்கு மறையையும் ஒரு நூலாகவே சுட்டுகிறார். இப்படி நம் முன்னோர் எடுத்துச் சொல்லியும் அவற்றை ஏற்றுக்கொள்ளாது பிறர் கூறும் இருக்கு, யசுர், சாம, அதர்வணங்களை நான்மறை எனக்கூறல் தகுமா?

சிறுபாணாற்றுப்படையும் 
“நீல நாகம் நல்கிய கலிங்கம் 
ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த”    (சிறுபா: 96 - 97)
என்று ஆலமர நிழலில் இருந்த இறைவனைச் சொல்கிறது .

“ஆறறி அந்தணர்க்கு அருமறை பலபகன்று”     
                                                     (கலி: கடவுள் வாழ்த்து)
என கலித்தொகை கடவுள் வாழ்த்தும் சொல்லும். 

ஆலமர் செல்வரையே நாம் இன்று தட்சணாமூர்த்தி என்கிறோம். வடமொழியில் தட்சிணம் என்றால் தெற்கு. தெற்கே இருக்கும் கடவுள் என்பதை தட்சணாமூர்த்தி என்னும் சொல் சொல்கிறது. கோயில்களில் தெற்கே தென்முகக் கடவுளாக இருப்பவர் என்பதை அது சொல்லவில்லை. திருக்கோணேச்சரத்தைக் தட்சண கைலாயம் என்றும் கூறுவர். அங்கிருந்த ஆலமரநீழலில் இருந்து இறைவன் அருமறை சொன்னார் என்பது பண்டைய ஈழத்தமிழரின் நம்பிக்கையாகும். ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என நாம் வழுத்துவதும் அதனைக்காட்டுகிறது. அந்தத் தென்நாடே கடல்கொண்ட தென்நாடு. அங்கிருந்து ஆலமர்செல்வர் சொன்ன அருமறைகள் என்ன?
படம்: நன்றி; வரலாறு (திரு கலைக்கோவன்)
திருஞானசம்பந்தக் குழந்தை அதற்கு அறிவுப்பசி. அந்த அறிவுப்பசியைப் போக்க அக்குழந்தை  தனது தேவாரத்தில்
“நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல் மேவி அருமறை சொன்னதென்ன?”           
                                                   - (பன்.திருமுறை: 1: 48: 1)
என்று இறைவனிடம் கேள்வி எழுப்புகிறது. சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் நால்வருக்கும் ஆலமர நிழலில் சொன்ன அருமறை என்ன? எனக்கேட்கும் அக்குழந்தை இன்னொரு தேவாரத்தில் 
"அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான்"
                                                  - (பன்.திருமுறை: 1: 53: 1)
என்று இறைவனப் போற்றுகிறது. திருஞானசம்பந்தரின் இந்தத் தேவாரம் சங்கத் தமிழரின் மறையான முதுநூலின் நான்கு பிரிவையும் அறம், பொருள், இன்பம் வீடு எனக்காட்டுகிறது. இவையே தமிழரின் நான்மறையாகும். இறவனால் அருளப்பட்டதாக இன்பத்தைக் கூறும் ‘இறையனார் அகப்பொருள்’ இந்த நான்கில் ஒன்றாக இருக்கக்கூடும். புறநாநூறு சொல்லும் நான்மறை-முதுநூலின் சாற்றையே எமது சங்க இலக்கியங்களும், பக்தி இலக்கியங்களும் தருகின்றன எனச்சொல்லலாம்.

பொய்யாமொழிப் புலவரை, ஒருவர் புலவர் என அழைத்ததற்கு 
“அறம் உரைதானும் புலவன் முப்பாலின்
திறம் உரைத்தானும் புலவன் - குறுமுனி
தானும் புலவன் தரணி பொறுக்குமோ
யானும் புலவன் எனில்”
எனக்கூறினாராம். 

அவரது கூற்றுப்படி திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலையே சொன்னார். மேலோட்டமாகப் பார்க்கும் போது அதுவே சரி. ஆனால் என் ஐயன் வள்ளுவன்  
“எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”                            
                                                 - (திருக்குறள்: 43: 3)
என்கிறாரே. அவர் சொன்னதுபோல் மெய்ப்பொருளை அறிய திருக்குறனினுள் நுழைந்து ‘வீடாம் மெய்ப்பொருள்’ பற்றி ஏதும் சொல்லி இருக்கிறாரா எனப்பார்ப்போம். 

திருக்குறளின் முதலாவது அதிகாரமான கடவுள் வாழ்த்தே வீடுபேற்றின் சிறப்பை எடுத்துச் சொல்வதாகவே இருக்கின்றது. எமது உயிர் இறைவனுடன் சேர்தலே வீடுபேறாகும். 
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்”              - (திருக்குறள்: 1: 10)
இதில் எங்கே அவர் கடவுளை வாழ்த்தியுள்ளார்?

நிலையாமை அதிகாரத்தில் 
“நில்லாதவற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறிவு ஆண்மை கடை”               - (திருக்குறள்: 34: 1)
என்கிறார்.

துறவு அதிகாரத்தில்
“யான்எனது என்னுஞ்செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்”                    - (திருக்குறள்: 35: 6)
என வானவரும் அடையமுடியாத முத்தியை அதாவது வீடுபேற்றை உயர்ந்த உலகமாக படம்பிடித்துக் காட்டுகிறார். 

கடைசியில் நிலையாமையைப் போக்கும் வழியை
“பற்றுக பற்றற்றான் பற்றினை”         - (திருக்குறள்: 35: 10)
எனத் தெளிவுபடுத்துகிறார். 

அடுத்து, நிலையான பொருளான இறைவனின் உண்மையை அறிவதை ‘மெய்யுணர்தல்’ என்ற அதிகாரத்தில் சொல்கிறார். இந்த அதிகாரமே இறைவனை உணர்வதைப் பற்றியே சொல்கிறது. அதில் மெய்ப்பொருளை உணராத மயக்கத்தாலேயே பிறப்பு ஏற்படுகிறது என்றும், ஐயத்தின் நீங்கித் தெளிந்தவர்க்கு இந்த உலகத்தை விட வீடு பேற்றைதரும் முத்தி மிக அருகில் இருக்கும் என்றும், அது இன்பத்தைக் கொடுக்கும் என்றும் பலவாறு கூறுகிறார்.

“பிறப்புஎன்னும் என்னும் பேதமை நீங்கச் சிறப்புஎன்னும்
செம்பொருள் காண்பது அறிவு”         - (திருக்குறள்: 36: 8)
வீடுபேற்றை அடைய இதைவிடச் சிறந்த வழியை மிகச்சுருக்கமாக எவரால் சொல்ல முடியும்? திருவள்ளுவன் சொன்ன அந்தச் செம்பொருளையே நாம் செந்நிறத்து அம்மானாக சிவனாகக் காண்கிறோம். 

அவாஅறுத்தல் என்ற அதிகாரத்தில் ஆசையே நாம் பிறப்பதற்குக் காரணம் என்பதையும் ஆசையை நீக்கிய கணமே முத்தி கிடைக்கும் என்பதையும் மிக அழகாகச் சொல்கிறார்.
“அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து”                  - (திருக்குறள்: 37: 1)
எனத் தொடங்கி
“ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்”                       - (திருக்குறள்: 37: 10)
என வீடுபேற்றை 'பேராஇயற்கை' எனும் பெரும் பெயரால் புகழ்ந்துள்ளார்.

வீடுபேறு அடைதலுக்கு இன்னுமொரு அழகிய சொல்லாக ‘வாராநெறி' என்ற சொல்லைத் திருவள்ளுவர் தந்துள்ளார். 
“கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி”                         - (திருக்குறள்: 36: 6)
மீண்டும் பிறவி வராத வழியே, வாரா நெறி. அதுவே தமிழர் கண்ட பெருநெறி. அதனை மணிவாசகர் தமது திருவெம்பாவையில்
“வாரா வழியருளி வந்தென் உளம் புகுந்து”
எனச் சொல்லுவார்.

இப்படி கடவுள் வாழ்த்து, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாஅறுத்தல் போன்ற அதிகாரங்கள் வீடு அடைதலைப் பற்றியே எடுத்துச் சொல்கின்றன. எனவே பண்டைத் தமிழரின் முதுநூல் ஆகிய நான்மறை சொன்ன அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருளையும் திருக்குறளும் சொல்கின்றது. இன்றைய தமிழர் கையில் இருக்கும் நான்மறை திருக்குறளே! 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment