Tuesday 23 October 2012

குறள் அமுது - (47)

குறள்:
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”                                       - 350

பொருள்:
பற்றேயில்லாத இறைவனின் பற்றைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். பற்றுக்களை விட்டுவிடுவதற்காக  அப்பற்றைப் (இறைவனின் பற்றை) பற்றிக் கொள்ளுங்கள்.

விளக்கம்:
இத்திருக்குறள் துறவு என்னும் அதிகாரத்திலுள்ள கடைசிக்குறள். துறவு என்பது உலகத்தின் மேல் உள்ள பற்றுக்களைத் துறத்தல்[நீக்கிவிடுதல்]. இன்னொரு வகையில் சொல்வதானால் துறவென்பது ஆசைகளை களைந்து விடுதலாகும். எமது துன்பங்களுக்குக் காரணம் பற்றாகும். அதனாலேயே பெரியோர் ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றனர். 

துன்பத்தையோ இன்பத்தையோ அளக்க அளவுகோல் இல்லை. ஒருவருக்கு இன்பமாக இருப்பது மற்றவருக்குத் துன்பமாக இருக்கலாம். உயிர்களை வதைத்தும் கொன்றும் சிலர் இன்பம் அடைகின்றார்கள் அல்லவா? எனவே இன்பமும் துன்பமும் அவரவரின் மனப்பண்பைப் பொறுத்து இருக்கும்.

பற்று இருவகைப்படும். ஒன்று அகப்பற்று. மற்றது புறப்பற்று. நானே பெரியவன், நானே செய்வேன் என்ற எண்ணத்தால் வரும் தலைக்கனத்துக்கு அகப்பற்றே காரணம். இது எனது வீடு, இது எனது கார், நீ எனது வேலையாள் என்ற இறுமாப்புக்கு புறப்பற்றே காரணம். இவ்விரு பற்றுக்களையும் பற்றிப் பிடித்துக்கொண்டு சுழல்வதாலேயே அடிக்கடி துன்பத்தால் துடிக்கின்றோம். 

இவ்விரு பற்றுக்களையும் நீக்கினால் துன்பம் இல்லாது இன்பமாக வாழலாம். பற்றுக்களை நீக்கி வாழ்வது மிகவும் இலகுவான செயல் அல்ல. பிறந்த கணப்பொழுது முதலே ஏதோ ஒன்றின் மேல் பற்று உடையவராகவே வாழ்கிறோம். பால், உணவு, உடை, கல்வி, வேலை, பொருள், தாய், தந்தை, சுற்றம், வீடு, நாடு, மொழி என பற்றுக்கள் விரிந்து செல்கின்றன. 

இன்பங்களில்  சிறந்த இன்பம் பேரின்பம்.  பேரின்பத்தில் மூழ்கித் திளைக்கும் வழி என்ன? பற்றைவிட்டால் பேரின்பம் காணலாம். ஒரு பற்றை விடுவதற்கு இன்னொன்றைப் பற்றுகிறோம். தாய்வீட்டில் வாழ்ந்த பெண், தாய் எனும் பற்றைவிட்டு காதலன் எனும் பற்றைப் பிடித்து இன்பம் காண்பது போல, யான் எனது என்னும் உலகப் பற்றைவிட்டு, பற்றே இல்லாத இறைவனின் பற்றைப் பற்றிப் பிடித்தால் பேரின்பம் காணலாம். 

No comments:

Post a Comment