Wednesday 1 February 2012

கயிலையா? கைலாசமா? தமிழர் எப்படி அழைத்தனர்?

கவிழமலை

தமிழ் முன்னோர்கள் எத்தனையோ அழகிய பழந்தமிழ்ச் சொற்களை எமக்காகத் தந்து சென்றிருகிறார்கள். நாம் பிறமொழி மோகத்தில் மயங்கி அவற்றைக் கண்டு கொள்வதில்லை. அத்தகைய ஒரு சொல்லே இந்த கவிழமலை. கவிழ்தல் என்றால் அகம் புறமாதலாகும். அதாவது உள்ளே இருப்பது வெளியே வருதல். தலைகீழாதல் எனினும் பொருந்தும். இன்றும் ஒரு பாத்திரத்தில் உள்ள பொருள் வெளியே சிந்தினாலோ சிதறினாலோ கவிழ்ந்து கொட்டியது என்கிறோம் தானே?

இரண்டு புவித்தகடுகள் ஒன்றோடு ஒன்று மோதி ஒன்றினுள் ஒன்று புகுந்து நிலத்துள் இருந்து எழுந்த மலையை தமிழர் 'கவிழமலை' என அழைத்தனர். இந்தியாவுக்கு வெளியே இருந்து வந்தவர்கள் தமிழின் காரணப்பெயரை அறியாது தமிழரால் அழைக்கப்பட்ட கவிழமலையை கயிலை மலை என்றும் கைலாஷ் என்றும் அழைத்தனர். நாமும் அவர்களுடன் சேர்ந்து கயிலை எனவும் கைலாயம் என்றும் சொல்கிறோம். 
தமிழுக்கே உரிய ழகரத்தோடு கூடிய கவிழமலை எனும் அந்தப் பழந்தமிழ்ச் சொல்லை தமிழ்க் குழந்தையாகிய திருஞானசம்பந்தர் எமக்காகத் தனது தேவாரத்தில் பதிவு செய்திருக்கிறார். அதுவும் அவர் இராவணனைப் பற்றிப் பாடும் தேவாரத்தில் கயிலைமலையை கவிழமலையாகச் சொல்வதிலிருந்து கயிலையே கவிழமலை என்பதை தெளிவாக அறியலாம். 

கவிழமலை தரளக் கடகக்கையால் எடுத்தான் தோள்
பவழ நுனை விரலால் பையஊன்றிப் பரிந்தாரும்"       
                                                     - (ப.திருமுறை: 1: 45: 9)

இராவணன் கவிழமலையைத் தூக்கும் காட்சி [எல்லோரா]

கவிழமலையை முத்துப்பதித்த வீரவளை (கடகம்) அணிந்த கையால் எடுத்த இராவணனின் தோளை தனது பவளம் போன்ற சிவந்த நுனிவிரலால் மெல்ல ஊன்றிய சிவன் பின்னர் அவனுக்கு பரிந்து அருள்புரிந்தாராம்.
இராவணன் தனது வீரவளை (தொடி) அணிந்த கையால் உயர்மலையை எடுத்த அதே காட்சியை 
“இமைய வில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
 உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன்”                          - (கலி: 38: 1 - 5)
கபிலரும் கலித்தொகையில் கூறியுள்ளார்.
சிவன் உமையுடன் அமர்ந்திருந்த கவிழமலையை இராவணன் தூக்கினான் என்ற கதையை இரண்டாயிர வருடங்களாக தமிழர் கூறிவருவதை இவற்றால் அறியலாம்.

கவிழமலையை மேலுள்ள படத்திலும்  எல்லோராவிலுள்ள குகைச் சிற்பத்தில் இராவணன் கவிழமலையை தூக்கும் காட்சியை கீழுள்ள படத்திலும் காணலாம். புவியியற் காரணத்தால் இமயமலை உருவானதை அதன் தமிழ்ப்பெயரான 'கவிழமலை' வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நாம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. இனிமேலாகிலும் இமயமலையை கவிழமலை என எழுதலாமே!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment