Sunday 12 February 2012

குறள் அமுது - (21)


குறள்:
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் 
காடும் உடையது அரண்                                - 742 

பொருள்:
ஒரு நாட்டிற்கு தெளிந்த நீரும், மண்ணும், மலையும் குளிர்ந்த நிழலையுடைய காடும் இருப்பதே அரணாகும். 

விளக்கம்:
ஒரு நாட்டை பாதுகாப்பது அரண்.  மேலோட்டமாகப் பார்த்தால் இக்குறள்  ஒரு நாட்டிற்குத் தேவையான இயற்கை அரணைக் கூறுவதாகவே கொள்ளலாம். அக்காலத்து போர்முறையில் இயற்கை அரணின் தேவை இருந்தது. இக்காலத்தில் ஆகாயத்தில் இருந்து குண்டுகளைப் பொழிந்தே போர் செய்கிறார்கள், எனவே இயற்கை அரண்கள் ஏனெனக்கருதி இக்குறளைப் புறம் தள்ளிவிட முடியாது. 

நாட்டை போரிலிருந்து காப்பதை மட்டும் நாம் அரண் எனச்சொல்லமுடியாது. நாட்டில் வாழும் எல்லா உயிர்களையும் எப்பொழுதும் பாதுகாப்பதே உண்மையான அரணாகும்.  அவ்வரண் உயிர்களை பசியிலிருந்தும் நோயிலிருந்தும் காக்கவேண்டும். நாட்டில் வாழும் உயிர்களை காக்க முடியாத அரணால் என்ன பயன்?  உலக நாடுகள் யாவற்றிலும் நீரும் மண்ணும் மலையும் காடும் இருக்கின்றன. எல்லா நாடுகளுமா நோயின்றி, வறுமையின்றி செல்வச் செழிப்பில் மிதக்கின்றன?
தெளிந்த சுத்தனான நீரே மணிநீர். பளிங்குபோல் நீர் இருக்குமானால் நீரால் வரக்கூடிய தொற்று நோய்கள் எந்த உயிரையும் அணுகாது. எனவே மணிநீர் ஒரு நாட்டிற்கு அரண் சேர்க்கிறது. நல்ல வளமான மண் இருக்கும் நாட்டிலேயே பயிர்கள் விளையும். உழவுத் தொழிலுக்கும் பண்ணை வளர்ப்பிற்கும் நீரும் மண்ணும் மிக முக்கியமானவை அல்லவா! மலையிலிருந்து வீழும் அருவி ஆறாகப்பெருகி ஓடி நாட்டிற்கு வளத்தைச் சேர்க்கிறது.
நல்ல மழைபொழிந்து நாடு செழிக்க அடர்ந்த பெரிய காடுகள் இருக்க வேண்டும். காடுகள் குளிர் நிழலைத்தருவதால் நீர்வளம்மிக்க நிலத்தோடு  தண்ணீர் பஞ்சம் அற்றாதாய் அந்நாடு செழிப்பாய் இருக்கும். தென்றல் அங்கே தவழும். வெப்பத்தால் வரும் நோய்கள் அணுகாது.
ஆதலால் நாட்டில் வாழும் உயிர்களை அரணாக காப்பது மணிநீரும் மண்ணும் மலையும் குளிர்ச்சியான நிழல் தரும்காடுமேயாகும்.

No comments:

Post a Comment