Sunday 26 February 2012

குறள் அமுது - (23)


குறள்:
“நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்”                               - 1045

பொருள்:
வறுமை என்றழைக்கப்படும் பெரும் துன்பத்துள் பலவகைப்பட்ட துன்பங்கள் வந்து சேர்ந்து பெரிதாகும்.

விளக்கம்:
நல்குரவு என்றால் வறுமை. இடும்பை பெரும் துன்பத்தைக் குறிக்கும். வறுமை என்பது சாதாரண துன்பம் அல்ல. அளவிடமுடியாத பெருந்துன்பமே வறுமை. எம்மால் துன்பம் எனச்சொல்லப்படும் எல்லாத்துன்பங்களும் சேர்ந்து கூடிக்குலாவும் இடமே வறுமை. 

ஒருவருக்கு அடுத்தடுத்து வந்த துன்பங்களை இராமச்சந்திரக்கவிராயர்

ஆஈன மழைபொழிய இல்லம்வீழ
             அகத்தடியாள் மெய்நோவ அடிமைசாவ
மாஈரம் போகுதென்று விதைகொண்டோட
             வழியிலே கடன்காரன் மறித்துக்கொள்ள
சாவோலை கொண்டொருவன் எதிரேசெல்ல
             தள்ளஒண்ணா விருந்துவர சர்ப்பம்தீண்ட 
கோவேந்தர் உழுதுண்ட கடமைகேட்க
             குருக்கள்வந்து தட்சணை கொடுஎன்றாரே”
எனப் பாடியுள்ளார்.

ஒருவர் வளர்த்த பசு கன்று ஈன்றது. அப்போது  மழைபொழிய அவரது வீடு இடிந்தது வீழ்ந்தது. மனைவி குழந்தையைப் பெற்றெடுக்க உடல் வருந்தினாள்[மெய்நொந்தாள்]. வேலையாள் இறந்தான்[அடிமை சாவ]. நிலம் காய்கிறதே என விதைக்க ஓடியவரை மறித்து 'கடனைத்தா' என கடன்காரன் கேட்க, மரணச் செய்தியோடு ஒருவன் வர, விருந்தினரும் வந்தார். பாம்பும் அவரைக் கடிக்க, அரச ஊழியன் வரிப்பணத்தைக் கட்டு எனக்கேட்க குருக்களும் தட்சணை கொடு என வந்து நின்றார். 

இத்துன்பங்கள் ஏழ்மை உள்ளவருக்கு வரவில்லை. ஏழ்மையும் வறுமையும் வேறு வேறானவை. பொருள் இல்லாத்தன்மை எழ்மையாகும். துன்பங்களால் வரும் வெறுமை வறுமையாகும். இப்பாடலின் படி அவரிடம் மாடு, வீடு, மனைவி, அடிமை, வயல் என எல்லாம் இருக்கிறது. இருந்தும் அவரும் வறியவரே. ஏனெனில் பல துன்பங்களின் ஒட்டு மொத்த வடிவமே வறுமையாகும்.

பொருள் இருப்பவரே வறுமை எனும் பெரும் துன்பத்தால் துடிக்கும் போது, இருக்க இடமில்லாது, உடுக்க உடையில்லாது, படுக்கப் பாயில்லாது, குடிக்க நீரில்லாது, உண்ண உணவில்லாது, மழையும் வெய்யிலும் வாட்ட, நோய்க்கு மருந்தில்லாது, நடக்கக் காலில்லாது, உண்ணக் கையில்லாது, பார்க்க விழியே இல்லாது அரசபயங்கர வாதங்களால் வறுமை ஆக்கப்பட்டு இருப்போர் நிலையை சிறித்தே எண்ணிப் பாருங்கள்.

இவர்களின் வறுமை என்னும் பெரும் துன்பத்துள் எத்தனை எத்தனை புதுப்புது துன்பங்கள் வந்து சேர்ந்து கொண்டே இருக்கின்றன. இன்றைய வன்னியின் வறுமையைச் சொல்லாமல் சொல்லும் குறள் இது. 

No comments:

Post a Comment