Saturday 11 February 2012

நெஞ்சமே கோயில்



நாம் கடவுளுக்குச் செய்யும் பூசைகள் இரண்டு வகைப்படும். ஒன்று புறப்பூசை. மற்றது அகப்பூசை.

புறப்பூசை - எல்லோரும் பார்த்திருக்கச் கடவுளுக்கு பூசை செய்வது. இதனை கிரியாபூசை என்றும் கூறுவர். தேவாரம் பாடி, மந்திரங்களைக்கூறி, நாம் இப்பூசையை பூவால் அர்ச்சித்தும்  செய்யலாம். பூசாரியைக் கொண்டும் செய்விக்கலாம். இதுவே கோயில்களில் நடைபெறும் பூசையாகும். இப்பூசையை ஒவ்வொரு கோயில் அறக்காவலர் தத்தமது வீக்கத்தைப் பொறுத்து பெரும் தடல் புடலாக போட்டி போட்டு செய்வர். அதிலும் நம் கோயில் திருவிழாக்களையும் சிறப்புப் பூசைகளயும் செய்தோர் தாம் செய்ததைச் சொல்லும் பாங்கைக் கேட்க காதுகள் கோடி வேண்டும். இதற்கு சில கோயில் அறக்காவலர்களும் பூசை செய்யும் பூசாரிகளும் விதிவிலக்கல்ல.

'நெஞ்சம் நெகிழ்ந்து நெகிழ்ந்து நினைப்பவரது மனத்துள்ளே புகுந்து நிற்கும் பொன்போலும் சடையையுடைய இறைவன், பொய்யும் புரட்டும் வஞ்சனையும் [பொக்கம்] மிக்கோர் பூசையில் இடுகின்ற பூவையும் நீரையும் பார்த்து அவர்களின் அறியமையை எண்ணி வெட்கப்பட்டுச் சிரிப்பாராம் [நக்கு நிற்கும்-நகைத்து நிற்பார்]' என திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தில் பாடியுள்ளார். அதனை நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடைப்புண்ணியன்
பொக்கம் மிக்கவர் பூவும்நீரும் கண்டு
நக்கு நிற்கும் அவர்தம்மை நாணியே”          (பன்.திரு: 5: 90: 9)
எம்மனம் குற்றங்களாகிய தூசுக்களால் அழுக்குப் படிந்து இருக்கின்றது. மனம்நிறைய குற்றங்களைச் சுமந்து கொண்டு நாம் என்ன கூக்குரல் இட்டாலும் இறைவனின் தன்மையை நாம் உணரமாட்டோம் என்பதை மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் 
சீலமும் பாடி சிவனே சிவனேயென்று
ஓலமிடினும் உணராய் உணராய் காண்”
என்று சுவையாகச் சொல்லியுள்ளார்.
அகப்பூசை - கடவுளை மனதில் நிறுத்தி தாமே பூசை செய்வது. இந்தப் பூசையை யாரும் பார்க்க முடியாது. இப்பூசையைச் செய்ய எப்பொருளையும் செலவுசெய்யத் தேவையில்லை. பூசாரியும் தேவையில்லை. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் செய்யலாம். நேரகாலம் பார்க்கவும் தேவையில்லை. இதனை ஞானபூசை என்பர். 

இப்பூசையின் சிறப்பை தாயுமானசுவாமிகள்
 நெஞ்சமே கோயில் நினைவே சுகந்தம் அன்பு 
  மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே”
என இறையை தன் மனக்கோயிலில் எழுந்தருள அழைப்பதைப் பாருங்கள். 
திருநாவுக்கரசு நாயனார் தான் செய்த அகப்பூசையை
“காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய அட்டி
பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே”        
                                                     - (பன்.திரு: 4:76:4)
எனத் தேவாரத்தில் கூறியுள்ளார். 
அருளாளர்கள் இப்படி எடுத்துச் சொல்லியும் நாம் செவி மூடி இருப்பதேன்? இவ்விருபூசைகளில் எதைச் செய்து கடவுளை வணங்குவது சிறந்தது என்பதை நாம் தான் முடிவெடுக்க வேண்டும். அகப்பூசை செய்வது மிகக்கடினம். எனினும் மனதை ஒருமுகப்படுத்திப் பழகுவதனால் மனக்கோயிலில் யாரும் தமது கடவுளர்க்கு பூசை செய்யலாம்.
கோயிலுக்கு வரும் பக்தர்களை அவர் தர்மகர்த்தா, இவர் மந்திரி, மற்றவர் பணக்காரர் என்ற பாகுபாடு பார்க்கும் மனநிலை மாறவேண்டும். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற உயர் தனிக்கொள்கையைச் உலகுக்குச் சொன்ன தமிழினம் அவர் பெரியவர் இவர் சிறியவர் என்று பாகுபாடு பார்ப்பது இழிவாகத் தெரியவில்லையா? கடவுளின் முன்னே எல்லா உயிரும் சமமே.
இனிதே,
தமிழரசி.

2 comments:

  1. உள்ளத்தில் உறையும் இறைவனை உணர்வதற்கு ஏற்ற பூசை அகப்பூசையே என்பதனை அழகு தமிழில் விளக்கிய தமிழரசிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. தொடரட்டும் உங்களது நற்பணி.
    அன்புடன் முத்துராமன், கோவை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. வெளிநாட்டிற்கு சென்றிருந்ததால் தங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி தெரிவிக்க முடியவில்லை.

      Delete