Friday 3 February 2012

ஒருவரம் வேண்டுவனே!


ஈழத்து மாந்தையிலே காதலன் ஒருவன் தான் காதலித்த பெண்ணிடம் தன் காதலைச் சொல்வதற்காக அவள் பின்னே அலைந்து திரிந்தான். ஒருநாள் அவளிடம் தன் காதலைச் சொல்லத் தொடங்கினான். ஆனால் சொல்ல நினைத்ததைச் சொல்லமுடியாது தடுமாறி தனக்கு 'ஒரு வரம் தருமாறு' கேட்கின்றான். வேப்பமரம் எந்தக் கோடை வெய்யிலிலும் குளிர் நிழலையும் இதமான காற்றையும் தரும். வேப்பமரத்தில் வேப்பங்காய்கள் தூங்குவது பார்க்க மிகவும் அழகாக இருக்கும். ஆதலால் வேப்பமரத்தின் இதமான காற்றை நுகர்ந்தவாறு தூங்கும் காய்களின் அழகையும் அவளையும் இரசித்தபடி அவள் மடியில் தான் தூங்க அவளிடம் வரம் கேட்கின்றான்.

























ஆண்:  வேப்பமரம் தூங்க 
                      விதவிதமாய் காய் தூங்க
            உன்மடியில் நான் தூங்க
                      ஒருவரம் வேண்டுவனே!

அவன் கேட்ட வரத்தை அவள் கொடுக்கவில்லை. எனினும் அவள் நினைவு அவனைவிட்டு அகலவேயில்லை. அவள் நினைவை மெல்லச் சுவைத்தபடியே கனகமணிக் கட்டிலில் கண்ணயர்ந்தான். கனவிலே அவள் வந்தாள். கனவில் காதலியை கண்ட மகிழ்ச்சியை அவனது தோழிக்கோ அன்றேல் தங்கைக்கோ கூறுகிறான்.


ஆண்:  கனகமணிக் கட்டிலில் நான்
                      கண்ணுறங்கும் போதினிலே
            காதலால் மாதரசி கனவில் 
                      வரக் கண்டேனடி!  
                               -  நாட்டுப்பாடல் (மாந்தை) 
                                         -  (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

சங்ககாலத்தில் சோழ அரசனான கோப்பெருஞ்சிங்கன் தன் காதலியைப் பிரிந்து போருக்காகவோ அன்றேல் அரசியல் காரணமாகவோ வேறிடம் சென்றிருந்தான். அவனும் மாந்தைக் காதலன் போலக் காதலியின் நினைவால் தூங்காது விழித்திருந்து அவனையும் அறியாது துங்கினான். கனவில் அவள் வந்தாள். கனவில் அவள் வந்ததால் அந்தத் தூக்கம் அவனுக்கு இன்பமாக இருந்தது. அவனது காதலியை அவனுக்கு கொண்டு வந்து கொடுத்த கனவே அவனை இன்பமான தூக்கத்திலிருந்து  எழுப்பி விட்டது. 

அதனால் கோப்பெருஞ்சிங்கன் கனவுக்குச் சொல்கின்றான்.  'கனவே! கோடைகாலத்தில் மலரும் பாதிரிப்பூவின்  துய்மயிர் போன்று மயிர் படர்ந்து அழகொழுகும் வயிற்றையும் மாந்தளிர் போலும் நிறத்தையும் உடைய காதலி நுண்ணிய வேலைப்பாடுடைய நகைகளை அணிந்தவள். அவளை நேரடியாகாக் கொணர்ந்து தந்தது போல என்னை இனிமையான தூக்கத்திலிருந்து எழுப்புகின்றாய். தனது துணையைப் பிரிந்திருப்போர் உன்னை இகழார்'. 
"வேனிற் பாதிரிக் கூன்மலர் அன்ன
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை
நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல
இன்துயில் எடுப்புதி கனவே
எள்ளார் அம்ம துணைப் பிரிந்தோரே"        
                                                        - (குறுந்தொகை: 147)
இனிதே,
தமிழரசி

 சொல்விளக்கம்
1.  கனகமணி  -  பொன்னாலான மணி
2.  வேனில்  -  கோடைக்காலம்
3.  பாதிரி  -  பாதிரிப்பூ
4.  கூன்மலர்  -  கூனியமலர்
5.  அன்ன  -  போல
6.  மயிர் ஏர்பு - மயிர்க்கால் 
7.  ஒழுகிய  -  வரிசையாகப் படர்ந்து
8.  அம் கலுழ்  -  அழகு ஒழுகும்
9.  மாமை  -  மாந்தளிர் நிறம்.
10.  எடுப்புதி  -  எழுப்புகின்றாய்
11.  எள்ளார்  -  இகழார். 

No comments:

Post a Comment