Tuesday 14 February 2012

சங்ககால காதற்பெருவிழாக்கள்


உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடும் வேளையில் தமிழர் கொண்டாடிய காதல் பெருவிழாவா! வியப்பைத் தருகின்றதா? ஆனால் அதுவே உண்மை என்பதை சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. காதலர் தினம் கொண்டாடுவது மேலை நாட்டினர் நாகரீகம் என நாம் நினைப்பது உண்மைக்கு மாறானதாகும். பண்டைத்தமிழர் நாகரீகம் மேலை நாட்டினரின் நாகரீகத்தை விட எந்தவகையிலும் சற்றும் குறைந்ததல்ல.

ஏன் Valentine’s Day என்று கூறப்படும் காதலர் தினத்தையே உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். Valentine’s Day சொல்லும் வரலாறு என்ன? சங்க இலக்கியங்கள் சொல்லும் சங்கத்தமிழரின் காதல் பெருவிழாக்கள் நடந்த அதே காலத்தில் உரோமாபுரியில் பெண்களைப் போகப்பொருளாக நினைத்து குலுக்கல் முறையில் பகிர்ந்து கொண்டனர். 

உரோமாபுரி அரசு காதல் வாழ்வுக்கு தடை விதித்திருந்த காலமது. காதலுக்கு துணைபுரிந்தார் என்ற ஒரே காரணத்தால் Saint Valentine அன்று கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார். அதுவே மேலை நாட்டில் அன்று காதலுக்கு கிடைத்த பரிசு. அவர் கொல்லப்பட்டு அறுநூறு வருடங்களின் பின்பே உரோமாபுரியில் வாழ்ந்தவர்களுக்கு காதல் செய்யச் சுதந்திரம் கிடைத்தது. அச் சுதந்திரமும் கி பி 4ம் நூற்றாண்டளவிலேயே கிடைத்தது. அதன் பின்பே Valentine பாதிரியாரின் நினைவாக காதலர் தினம் கொண்டாடத் தொடங்கினர்.
கி பி 1382ல் Geoffrey chaucer(ஜெவ்ரி சோஸர்) என்பவரால் எழுதப்பட்ட
   “For this was saint Valentine’s Day, 
    When every bird cometh to choose his mate”
என்ற கவிதை வரிகளே மேலைநாட்டில் காதலர் தினம் கொண்டாடியதற்கான ஆதாரமாக இருக்கின்றது.
அக்கவிதை தரும் ஆதாரத்திற்கு ஆயிர வருடங்களுக்கு முன்னர் இருந்தே சங்ககாலத் தமிழர் காதல் பெருவிழா கொண்டாடி வந்ததை சங்கத்தமிழ் இலக்கியங்கள் வரலாற்றுப் பதிவாக பதிவு செய்து வைத்திருக்கின்றன. மனித நாகரீகத்திற்கு பலவகையிலும் எடுத்துக் காட்டாக வாழ்ந்த சங்கத்தமிழர் வீட்டுக்குள் பெண்ணைப் பூட்டிவைத்த நிலையில் வாழவில்லை. சங்ககால இளம் பெண்களுக்கு கருத்துச் சுதந்திரமும் காதற்சுதந்திரமும் இருந்ததோடு முறையற்ற காதலுக்கு தடையும் இருந்தது. 

அன்பின் பல படி நிலைகளில் காதலும் ஒன்று. அதுவே பத்தியாகக் கனிந்து முத்திக்கும் வழிவகுப்பதை பக்தி இலக்கியங்களில் காணலாம். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதற்கு வித்திட்டதும் காதலே. இன்பங்களில் தலைசிறந்த இன்பம் காதலின்பம். உலகின் அசையும் உயிர்கள் யாவும் காதலில் திளைத்து மகிழ்வதாலேயே இவ்வுலகம் பல்லாயிரக் கோடி உயிர்ப் பேதங்களுடன் கண்ணிற்குக் குளிர்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது. காதல் இன்பமே இல்லாத உலகை உங்கள் மனக்கண் முன் ஒருகணம் நிறுத்திப் பாருங்கள். இடுகாட்டு அமைதியோடு வற்றல் என்புக் கூடாய் அது காட்சி அளிக்கும்.

காதலில்லா தனிமை வாழ்க்கை மனவெறுமையைக் கொடுத்தது. அது உலக வளர்ச்சியைத் தடைசெய்தது. அதனால்  
“அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் 
வற்றல் மரம் தளிர்தற்று”
என்ற உண்மையை சங்கத்தமிழர் அறிந்திருந்தனர் என்பதை இக்குறள் எடுத்துச் சொல்கிறது. உலக இயற்கை மனிதனுக்கு கற்றுத் தந்த பாடங்களில் மனிதன் கல்லாமல் கற்ற பாடம் காதல் பாடமே. காதலை உணரமுடியாத சில மனிதர்களும் இருக்கிறார்கள். பற்று, பரிவு, பாசம், கருணை, இரக்கம், அன்பு, காதல், பக்தி யாவுமே உலக உயிர்களை ஒன்றிணைக்கும் மாபெரும் சக்தியாகும்.

பாலை வனத்தில் பட்டமரம் துளிர்விடுமா? பரிவை அன்பை, காதலை உணர முடியாதவர்கள் பாலைவனத்தின் பட்டமரம் போன்றாவர்கள் என்பது வள்ளுவப் பெருந்தகையின் முடிவாகும். காதல் இன்பத்தேன் அருந்தி தான் சுவைத்ததை மிகச்சுருக்கமாக சுவையூட்டி எடுத்துச் சொன்னவர் திருவள்ளுவரே. அவர் எழுதிய முப்பாலில் இன்பத்துப் பாலை நீங்களும் கொஞ்சம் சுவையுங்கள் அதன் உண்மை புரியும்.

காதல் வேறு காமம் வேறு என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். காதலால் பெருவது இரு மனங்களின் சேர்க்கை. காமத்தல் விளைவது இரு உடல்களின் சேர்க்கை. காமத்தின் இயல்பைச் சொல்லும் இடத்தில் மலரைவிடக் காமம் மிகவும் மென்மையானது என்று திருவள்ளுவர் காமத்திற்கு முடிசூட்டியுள்ளார். காமத்தையே மலரைவிட மென்மையானது எனப்போற்றியவர்கள் காதலை எப்படிப் போற்றியிருப்பார்கள் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.   

தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் மனிதத் தன்மையை எம்முள் வளர்த்து எடுப்பதும் காதலே. ஒருவனுக்காக ஒருத்தியும் ஒருத்திக்காக ஒருவனும் தன்னலம் அற்று உருகுவதே காதல். அவரில் ஒருவருக்கு தன்னலம் கூடினாலும் அங்கே இல்லறம் கசக்கும். ஆதலால் காதல் எனும் சக்தியே இந்த உலக இயற்கையின் இதயத்துடிப்பை இயங்குகின்றது எனச் சங்ககாலத் தமிழர் தமது அனுபவத்தாற் கண்டு காதலைப் போற்றினர். பண்டைய தமிழருக்கு காதலே வீரத்தின் விளைநிலமாக விளங்கியது. தன்நாட்டின் மீதும் தமது அரசின் மீதும் தம் இனத்தின் மீதும் கொண்ட காதலால் வீரத்தை விரும்பிப் போற்றினர். காதலும் வீரமும் அவர்களின் இரு கண்களாயின. காதல் வாழ்வும் வீரவாழ்வுமே அவர்களின் இலக்கியங்களாயின.

இடைச்சங்க காலத்திற்கும் முன் வாழ்ந்தவனாகக் கருதப்படும் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் எனும் சோழ அரசன் செய்த இந்திரவிழாவை, மணிமேகலை
 மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த
நாலேழ் நாளிலும் நன்கினி துறைக"        - (மணிமேகலை: 1: 7 - 8)
எனக்கூறுவதால் அதனை அறியலாம். 

ஒருமாதம் முழுவதும் நம் பண்டைத்தமிழ் மூதாதையர் கொண்டாடிய காதல் திருவிழாவை நாம் காதல் பெருவிழா என்று அழைப்பது தானே பொருத்தமாக இருக்கும். மாசிமாத சித்திரை நட்சத்திரம் தொடக்கம் பங்குனிமாத சித்திரை நட்சத்திரம் வரையுள்ள இருபத்தெட்டு நாட்கள் அந்தக் காதல் பெருவிழாவை அரசர் முதல் ஆண்டிவரை எல்லோரும் மகிழ்ந்து கொண்டாடினர். இலக்கியங்கள் இந்திரவிழா காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்ததாகச் சொல்கின்றன. சிம்மனூர் செப்பேடோ மதுரையில் நடந்த இந்திரவிழாவையும் சொல்கிறது.

சங்ககாலத் தமிழர் போகப்பொருளாக பெண்களை நினைத்து குலுக்கல் முறையில் விற்றதாக எந்த ஒரு பதிவும் இல்லை. அப்படி விற்றிருந்தால் திருவள்ளுவர்
“மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்”
என்ற திருக்குறளை இன்பத்துப்பாலில் வடித்திருக்கமாட்டார். காதலின் மென்மையை உணர்ந்த பண்டைய தமிழர் காதலைப் பெருவிழாவாகக் கொண்டாடியதில் என்ன வியப்பிருக்க முடியும்?
இங்கே நாம் ஒன்றை கவனிக்கலாம். அன்று சங்கத்தமிழர் பின்பனிக்காலத்தில் கொண்டாடிய காதல் விழாவின் அடியை ஒற்றியே இன்றும் காதலர் தினம் பின்பனிக்காலத்தில் கொண்டாடப்படுகிறது. 
“கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்
வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்து பனியரசு யாண்டுளன்”       
                                                 - (சிலம்பு: 14: 110 - 112)
‘கொண்டற்காற்று பண்டியனின் கூடல் நகரிலே புகுந்து நெடுவேளான மன்மதனின் வில்விழாவைக் காணும் பின்பனிக் காலமாகிய பனியரசன் எங்குள்ளான்?’ எனக் கேட்டது என்று கூறும் இளங்கோவடிகள் மதுரை நகரில் நடந்த காதல்விழாவாகிய வில்விழாவைச் சொல்கிறார். காமன் விழா ஆதலால் பங்குனி முயக்கம் என்றும் அழைத்தனர். 
அகநானூறும்
“வருபுனல் நெரிதரும் இகுகரை பேரியாற்று 
உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்”                    
                                                        - (அகம்: 137: 8 - 9)
என பேரியாற்றங் கரையில் நடந்த காதல்விழாவை பங்குனி முயக்கமாகக் காட்டுகிறது. 
இதனை சோழநாட்டினர் பங்குனி விழாவாகவும் சேரநாட்டினர் உள்ளி விழாவாகவும் கொண்டாடினர் என்பதை
“கழுமலம் தந்த நல்தேர்ச் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே”               
                                                            - (நற்றிணை: 234: 6 - 8)
என நற்றிணை சொல்கிறது. உறையூர்ப் பங்குனி விழா ஊர்கொண்ட பெருவிழாவாக நடந்தது என இறையனார் அகப்பொருள் உரை கூறுகிறது. 
உள்ளி என்பது நினைத்தல், தேடல், விழைதல் என்ற கருத்துக்களைத் தருவதால் காதலரைத் தேடும் விழாவை உள்ளி விழா என அழைத்திருப்பர். அகநானூறும் 
“கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் 
உள்ளி விழவு”
எனக்கூறுகிறது. 
கலித்தொகை
“மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்தவர்
வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுது”         
                                                                - (கலி: 35: 13 - 14)
என காதற் காமன் விழாவை வில்லவன் விழா எனச் சொல்கிறது. 

பின்பனிக்காலத்தில் காதல்விழா கொண்டாடியதற்கு காரணம் இருக்கின்றது. மரம், செடி, கொடிகள் துளிர்விட்டு புதுப்பொலிவுடன் சிறிதே முகம் காட்ட, விலங்குகளும் பறவைகளும் துணைதேடி அலைய இயற்கையும் மெல்ல வசந்தகாலத்தில் அடிஎடுத்து வைப்பதும் மாசி மாதத்தில் தானே! மனிதர் மட்டும் அதற்கு விதிவிலக்கா? அதனால் காதல் விழாவுக்கு ஏற்ற தொடக்க காலமாக மாசிமாதத்தை தமிழர் தேர்ந்தெடுத்தனர் போலும்.
மார்கழி, தை மாதங்களில் பெய்த மழையால் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து கடலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும். பெருக்கெடுத்தோடும் அப்புதுவெள்ளத்தில் குளித்துக் களிப்பதும் ஓர் இன்ப அநுபவமே. புதுவெள்ளத்தில் நீந்திக்களிப்பவர் இடையே தன் காதல் இணையைத் தேடித் தேடிக் குளிப்பதும், காதல் துணையுடன் ஆடிக்குளிப்பதும் அந்தக் காதல் பெருவிழாக்களின் நோக்கமாக இருந்திருக்கின்றது. கன்னியரும், காளையரும், ஆடவரும் பெண்டிரும் கூடியாடிக் களித்து நீரில் விளையாடியதால் பெருக்கெடுத்து ஓடிய வையையே சேறாகப் போயிற்றாம். அதனை இளம்பூரணார் எழுதிய உரையின் பழம் பாடல் சொல்கிறது.

“பாடிப் பாடிப் பாய்புனல்
ஆடி யாடி அருளியவர்
ஊடி ஊடி உணர்த்தப் புகன்று
கூடிக் கூடி மகிழ்பு மகிழ்பு
தேடித் தேடிச் சிதைபு சிதைபு
சூடிச் சூடித் தொழுது தொழுது
இழுதொடு நின்ற மலிபுனல் வையை”
காதல்விழாவில் பாய்புனலில் பாய்ந்து விளையாடிய இளம்பெண்ணின் மதமதத்த தோள்களைப் பார்த்த அன்றைய ஆண்களின் மனநிலையை நம்பியகப்பொருள் உரையிலுள்ள பாடல்
மண்ணார்ந்து இசைக்கும் முழவொடு கொண்டதோள்
கண்ணாது உடன்வீழும் காரிகை கண்டோர்க்கு
தம்மோடு நிற்குமோ நெஞ்சு”
எனச் சொல்கிறது. வீட்டுக்குள் பெண்ணைப் பூட்டிவைப்பதும் போகப்பொருளாக குலுக்கல் முறையில் பெண்ணை விற்பதும் தமிழர் பழக்கம் அல்ல என்பதை சங்ககாலப் பெண்கள் கொண்டாடிய காதற் பெருவிழாக்களும் நீர்விளையாட்டுகளும் எடுத்துச் சொல்கின்றன.

இனிதே,
தமிழரசி.

2 comments:

  1. வள்ளவன் காமத்துபால் என்று வைத்த பெயரை இன்றய சமூகம் இன்பத்துபால் என மாற்றியதன் விளைவு என்ன காமம் என்ன செவி நுகரக்கூடாத சொல்லா ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. "மலரினும் மெல்லிது காமம்" எனச்சொன்னவர் வள்ளுவர். இன்பதுப்பால் எனச் சொல்லும் வழக்கம் இன்று ஏற்பட்டதல்ல பன்னெடுங்காலமாக உண்டு. களவியல் கற்பியல் இரண்டும் இருப்பதாலும் காமத்தை மட்டும் பேசாது காதலையும் பேசுவதால் இன்பத்துப்பால் என நம் முன்னோர் அழைத்தனர் போலும்.

      Delete