Friday 24 February 2012

கலைபயில்வோர் ஞானக்கண்


பண்டைத்தமிழர் பெண்களுக்கு உரிய கலைகள் அறுபத்து நான்கு என்றும் ஆண்களுக்கு உரிய கலைகள் எழுத்திரண்டு என்றும் பிரித்திருந்தனர். எனவே பண்டைனாளில் பெண்களும் ஆண்களும் தத்தமக்குரிய கலைகளைப் பயின்றனர் என்பதை அறியலாம். அக்கலைகளைப் பயில வகைவகையாக பல கலைநூல்களும் இருந்திருக்கின்றன.
கலையாரு நூல் அங்கம் ஆயினான் காண்
          கலைபயிலுங் கருத்தன் காண்.....”       
                                                    - (பன்.திருமுறை: 6: 87: 8)
என சிவனை கலை நூலின் பகுதியாகக் காட்டி கலை பயில்பவனாகவும் திருநாவுக்கரசு நாயனார் காட்டுகிறார்.
இதனால் திருநாவுக்கரசர் காலத்தில் பலரும் பல கலைகளைப் பயின்றிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இயல்பான நூல்களைக் கற்பதை விட கலைகளைப் பயில்வதற்கு மிகக் கூடிய ஈடுபாடும் பொறுமையும் கற்பனை வளமும் புதியனவற்றை உண்டாக்கும் திறனும் இருக்கவேண்டும். எனவே கலைபயில்பவர்களின் அறிவுக் கண்ணாய் சிவன் இருப்பதை
கலைபயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்”    
                                                       - (பன்.திருமுறை: 6: 73: 2)
என திருநாவுக்கரசு நாயனார் தமது தேவாரத்தில் சுட்டிக்காட்டுகிறார்.


வாயிருந்தும் தமிழே படித்து ஆளுறாது ஆயிரம் சமணரும் தன்னைக் கெடுத்ததாகக் கூறிய திருநாவுக்கரசருக்கு செந்தமிழை படித்து அறிய தன்னால் முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்திருக்கிறது. தமிழை மட்டுமல்ல எண்ணாகிய கணிதத்தோடு பண்ணுடன் சேர்ந்த கலைகளையும் இறைவனின் மேன்மையையும் அறியாதிருந்த அவரை தாய் தந்தையரைப் போல அன்பாய் அரவணைத்து திருஎறூம்பியூர் இறைவன் ஆண்டுகொண்டாராம். ஆதலால் இறைவனை தான் அடையப்பெற்றதை 
“பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்
          எண்ணேடு பண்ணிறைந்த கலைகளாய
தன்னை உந்தன் திறத்தறியாப் பொறியிலேனத்
          தந்திறமும் அறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
          அடைந்தேனைத் தொடர்ந்தென்னை ஆளாக்கொண்ட
தென் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச்
           செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே”     
                                                     - (பன்.திருமுறை: 6: 91: 1) 
எனச்சிறுகுழந்தை போல் பெருமிதமாகச் சொல்லி மகிழ்வதைப் பாருங்கள். கலைபயில்வோருக்கு இயல்பாகவே பலகலைகளையும் ஆராய்ந்து கற்க ஞானக்கண் இருக்க வேண்டும். அது அருட்கொடையாக கிடைக்கவேண்டும்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment