Wednesday 15 October 2014

இரு மருந்து

- எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -
1945


மருந்து - நோய் தீக்க வல்லது. மருந்து செய்வோன் - மருத்துவன். இறைவனுக்கு 'பிறவிப்பிணி மருத்துவன்' என்று ஓர் அழகிய பெயர் உண்டல்லவா?
உலக உயிர்களுக்கு பிறவிப்பிணி இருப்பது போல் பசிப்பிணியும் இருக்கின்றது. பிணி - நோய். பிறவிப்பிணி - உயிர்களை மீண்டும் - மீண்டும், பிறந்து - பிறந்து, வாழ்ந்து - வாழ்ந்து  இறக்கத் தூண்டும் நோய். பசிப்பிணி - உயிர்கள் எவ்வளவுதான் ஆசையோடு உணவை தேடித் தேடி உண்ணினும் மீண்டும் - மீண்டும் பசியைத் தூண்டி உண் - உண் என உண்ணச் செய்யும் நோய். இவ்உலக உயிர்களின் வாழ்க்கைப் போராட்டத்திற்கு முதன்மைக் காரணியாய் இருப்பது பசிநோயே.

இயற்கையோடு உலகவுயிர்கள் ஒன்றும் வரை இவ்விருபிணிகளும் தொடரும். ஆனால் பிறவிப்பிணியை நீக்க தேவர்கள் கண்டுபிடித்து அருந்திய தனிமருந்தே அமிர்தம். தேவர்கள் அமிர்தத்தை உண்ண - அம்பலத்தே ஆடும் மருந்து நஞ்சை உண்ட கதை அறிவீர்கள். அதனால் அவன் பிறவிப்பிணி மருத்துவனானான்.

பசிப்பிணியைப் போக்க இதுவரை மருந்து காண்பாரில்லை. எனினும் நேரத்துக்கு நேரம் ஓரளவு உணவை உண்டு பசியைப் போக்கி, பசி நோயைக் கொஞ்சம் கட்டுக்குள் வைக்கலாம். உண்ணாமல் தின்னாமல் பொருள் - பொருள் என்று உழைத்து மாள வேண்டியதில்லை. முதலில் உண்டு, உடுத்து வாழவேண்டும்.

உயிர் வாழ்வதற்கு - பசிப்பிணியைப் போக்க உணவு மட்டும் போதுமா? இல்லை - தண்ணீரும் வேண்டும். உணவையும் நீரையும் தருவோர் யார்? உழவர் அல்லவா! ஆதலால் உழவரை பசிபிணி மருத்துவர் என்பர்.

“உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே”
நிலன் - நிலத்தில் விளையும் உணவுகள். நீரும் நிலனும் என்றாலும் நீரும் நெல்லும் என்றாலும் ஒக்கும்.

உயிர்களின் பசியை ஓரளவு போக்கவல்ல மருந்துகள் இரண்டு. அவ்விரு மருந்தையும் ‘நீரும் சோறும்’ - ‘நீரும் நிலனும்’ - ‘நீரும் நெல்லும்’ எனப் போற்றினர். நீரும் உணவும் என இரு மருந்துகள் பசியைத் தீர்ப்பதால் அவை இருமருந்தாயிற்று.

“இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்”
புறநானூறு, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை நீர் - உணவு ஆகிய இருமருந்து விளைவிக்கும் நல்ல நாட்டுத் தலைவன் என்று புகழ்கிறது. அவன் நீரையும் விளைவித்தான் - குளங்களைக் கட்டினான் - குளத்து முற்றத்திலே துஞ்சினான் - இறந்தான். ஆதலால் குளங்களில் நீரைத்தேக்கி நெல்லை விளைவித்து மனிதரின் பசிப்பிணியைத் தீர்ப்போம்.
இனிதே,
தமிழரசி.
குறிப்பு: இரண்டாம் உலகமகாயுத்தம் முடிந்த பின்னர் நாட்டில் பசியால் பலரும் இறந்த நேரம் என் தந்தையால் எழுதப்பட்டது.

No comments:

Post a Comment