Saturday 25 October 2014

மனிதன் வாழ்வாங்கு வாழ

- எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -

மனிதன் வாழ்வாங்கு வாழ முதலில் தேவையானது அழகோ - பொருளோ - கல்வியோ அல்ல. நல்ல பண்பட்ட மனமும் நோய் இல்லா உடலுமேயாம். பண்பட்ட மனதை உருவாக்கும் வல்லமை அவரவர் கையிலேயே இருக்கின்றது. 

அதற்கு பெரியோர் நேயம் மிக மிக அவசியம். நிலத்தை உழுது மண் வளத்தை பண்படுத்தல் போல மனதை உழுது உளத்தை பண்படுத்த வேண்டும். மண்ணில் உள்ள கல் - முள் - வேண்டாத செடி, கொடி  போன்றவற்றை எடுத்து எறிந்து உழவர் பண்படுத்துவரே! அதே வேலையை நாம் நம் உளத்திற்கும் செய்ய வேண்டும். நம்மிடம் உள்ள இழிவான போட்டி - பொறாமை - வஞ்சனை - சூது - வாது - காமம் - கோபம் - மூர்க்கம் - பேராசை யாவற்றையும் தூக்கி குப்பையோடு குப்பையாகப் போட்டு எரித்துவிட வேண்டும். அப்படி பக்குவப் படுத்திய மனதில் அன்பை - கருணையை - பரிவை - காதலை - பக்தியை - அமைதியை - வீரத்தை - தீரத்தை வளர்த்துக் கொண்டால் உள்ளம் எங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பாய்ந்தோடும். அந்த வெள்ளத்தில் தழைத்த இன்ப மலர்கள் வாழ்க்கையின் வசந்தமாய் வீசும்.

“சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்” நன்கு சித்திரம் வரையும் எமக்கே சித்திரம் பற்றி சொல்வதாக எண்ணற்க. இப்பழமொழி சொல்வது வாழ்க்கைச் சித்திரம். நாம் வாழும் வாழ்வை ஒவ்வொரு கணமும் சித்திரமாக வரைந்தபடி இருக்கின்றோம். வாழ்வெனும் சித்திரத்தை மிக அழகாக வரைய உடல் தேவை. அதற்கு நோயற்ற  உடல் வேண்டும். அளவான நித்திரை - அளவான உணவு - அளவான உடலுழைப்பு இருக்க வேண்டும். எதுவும் அளவு மீறிப் போகக் கூடாது.
“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று”

வளி - காற்று. வளி முதலா எண்ணுதல்: வாதம் - பித்தம் - கபம் [சிலோத்துமம்] என கையின் நாடித்துடிப்பை எண்ணுதல். வாதம் அது வளி - வாயுவால் வருவது, பித்தம் அது அழல் - சூடு - சூட்டால் வருவது. கபம் அது சேடம் - நீர்த்தன்மையான தாதுக்களால் வருவது. இந்த மூன்று நாடிகளில் துடிப்பின் எண்ணிக்கை கூடினும் குறையினும் நோய் உண்டாகும். 

அத்துடன் வள்ளுவர்
“அற்றால் அளவறிந்து உண்க அஃதுஉடம்பு
பெற்றன் நெடிதுய்க்கும் ஆறு”
எனவும் “துய்க்க துவரப் பசித்து” எனவும் சொல்வர். உண்ட உணவு அற்றுப்போய் நன்றாகப் பசித்த பின்னர் உண்ண வேண்டுமாம். அதுவும் அளவோடு - உண்ணும் அளவை அறிந்து உண்ண வேண்டுமாம்.

படிப்படியாக ஏறி உயரவேண்டும். கல்வியோ, பொருளையோ தேடுதலில், தன்னைப் பேணிக் கொண்டு - தானாகிய முதலைப் பாதுகாத்துக் கொண்டு - நடக்கவேண்டும். நல்ல நண்பர்களையும் பெரியோர்களையும் தேடிக்கொள்ளலும் ஒரு பெரிய செல்வந்தான். மனிதரில் பதரில்லை. எவர்களையும் வெறுக்காது, பகையை வளராது, விரோதம் பாராட்டாது, ஒப்புரவொழுகிப் பழக வேண்டும். ஆபத்துக்கு உதவுவோரை நன்றிமறவாது நினைத்து வாழவேண்டும். என்ன இவை எல்லாம் எமக்குத் தெரியுந்தானே என்று நினைக்க வரும். என்றாலும் மீட்டுப்பார்பதும் நன்றல்லவா?

குறிப்பு:
நான் இங்கு வந்ததன் பின் எனக்கு என் தந்தை [பண்டிதர் மு ஆறுமுகன்] எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி.

No comments:

Post a Comment