Friday, 10 October 2014

என்கண் இரண்டும் உறங்காதே!


நம் தாய் நாடாம் ஈழத்திருநாட்டை விட்டு வந்து எத்தனையோ ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. மூன்றாவது தலைமுறையும் உருவாகிவிட்டது. எனினும் தாய் மடியின் சுகத்தை யாரால் மறக்கமுடியும்? ஈழத்தமிழ் நாட்டின் இயற்கை வளத்திற்கு ஈடாக எதைச் சொல்லமுடியும்? எந்த ஒரு பொருளின் அருமையும் கையில் இருக்கும் பொழுது தெரியாது. எம் கையைவிட்டு நழுவிப்போன பின்பே நாம் எதைத் தொலைத்தோம்? அதன் பெறுமதி என்ன? என்பவற்றை உணரத்தொடங்குவோம். அப்படி தாய்நாடாம் ஈழத்திருநாட்டை நினைத்து அதன் எழிலை அசைபோடும் போதெல்லாம் நெஞ்சம் பாடும் பாட்டிது.

சங்குமுழங்கும் தமிழ்நாடன் தன்னை நினைத்த போதெல்லாம்
பொங்குகடலும் உறங்காது பொழுதோர் நாளும் விடியாது
திங்களுறங்கும் புள்உறங்கும் தென்றல் உறங்கும் சிலகாலம்
எங்கும்உறங்கும் இராக்காலம் என்கண் இரண்டும் உறங்காதே
                                                         - (விவேகசிந்தாம்ணி - 39)

அதிகாலையில் கோயில்களில் சங்குகள் ஊதும் முழக்கம் கேட்கும் தமிழ்நாடன் [ஈழத்தமிழ் நாடு] தன்னை நினைத்த போதெல்லாம் அவனது நாட்டைச்சூழ [ஈழநாட்டைச் சூழ] சீறிப்பாய்ந்து பொங்கி எழும் கடல் அலை என்றும் உறங்காதிருக்க, பொழுது விடியாது அந்த நாள் நீண்டு செல்ல, நிலவும் மறைய, பறவைகளும் உறங்க, மெல்ல அசையும் தென்றற்காற்றுக் கூட வீசாது உறங்கும், கொஞ்ச நேரமாவது எல்லா இடத்திலும் இரவு நேரத்தில் யாவும் உறங்கும் ஆனால் என் இரண்டு கண்ணும் உறங்காதே!

உண்மையில் இந்தப்பாடல் ஈழநாட்டிற்குப் பாடப்பட்டதல்ல. ஒரு காதலி தன் தமிழ் நாட்டுக் காதலனை நினைந்து பாடிய பாடல். ஆனால் அதே பாடலை கொஞ்சம் மாற்றி

“சங்குமுழங்கும் ஈழநாடு தன்னை நினைத்த போதெல்லாம்
பொங்குகடலும் உறங்காது பொழுதோர் நாளும் விடியாது
திங்களுறங்கும் புள்உறங்கும் தென்றல் உறங்கும் சிலகாலம்
எங்கும்உறங்கும் இராக்காலம் என்கண் இரண்டும் உறங்காதே!”

எனப்படித்துப் பாருங்கள் என் கண் இரண்டும் உறங்காதது போல் உங்கள் கண்களும் உறங்காது.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment