Thursday 16 October 2014

குறள் அமுது - (97)

குறள்:
பகுத்துஉண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை                   - 322

பொருள்:
தம்மிடம் உள்ளவற்றை பிரித்து கொடுத்து உண்பதோடு பல உயிர்களையும் காப்பதே அறிஞர்கள் தொகுத்து தந்த அறங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்ததாகும்.

விளக்கம்:
உலகவாழ்க்கையின் இயல்பை நன்றாக ஆராய்ந்து கற்றுத் தெளிந்த அறிஞர்கள் மனிதர் எப்படி வாழ்ந்தால் இன்பமாக வாழலாம் என்பதை எமக்காகத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள். ‘ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்’ ‘நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை’ ‘மருந்தே ஆயினும் விருந்தோடு உண்’ ‘செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்’ ‘தன்னைப் போல பிறரையும் நேசி’ ‘உண்டிக்கழகு விருந்தோடு உண்ணல்’ ‘இரந்தோர்க்கு ஈவது உடையோர் கடனே’ என எத்தனையோ விதத்தில் பல நூல்களில் பல அறிஞர்கள் பகுத்து உண்டு வாழ்தல் சிறந்தது என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். 

உணவை உயிர்களுக்குப் பகுத்துக் கொடுத்து உண்ணவேண்டும் என்பதை எதற்காகத் திருவள்ளுவர் கொல்லாமை என்னும் அதிகாரத்தில் சொல்கிறார் என்பதை கொஞ்சம் சிந்திக்கவேண்டும். உயிர்களை அடித்துத் துன்புறுத்தி, வெட்டி, குத்தி, சுட்டுக் கொல்வதை மட்டுமே கொலையெனக் கருதுகிறோம். உயிர்களுக்கு உணவைக் கொடுக்காது பட்டினி போட்டும் கொல்ல முடியும். ஆதலால் உண்ண உணவும் நீரும் கொடுத்து உயிர்களைக் காத்தல் தலைசிறந்த செயலாகும். விலங்குகள், தாவரங்கள் யாவுமே உயிர்கள் தான். தாவரங்களுக்கு வேண்டிய நீரை எடுத்துக் கொள்வதால்  அவை நீரின்றி வாடி வதங்கி அழிவதால் நிலம் பாழாகிறது. அதனாலேயே திருவள்ளுவரும் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பு’ என்பதை கொல்லாமை அதிகரத்தில் சொல்லியிருக்கிறார்.

தான் சொன்னதை நாம் கேட்காவிட்டாலும் என்ற காரணத்தால் நூல்களை ஆராய்ந்து கற்ற அறிஞர்கள் தொகுத்துத் தந்தவற்றுள் பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல் தலை சிறந்தது என்று எடுத்துக் கூறியுள்ளார். தனக்கென வாழாது தன்னிடம் இருப்பவற்றை பிரித்துக் கொடுத்து உண்பதோடு உலக உயிர்களையும் தன்னைக் காப்பது போல பாதுகாத்து பிறர்க்கென வாழ்தலே தலைசிறந்தது என்பதை மனிதர் யாவரும் உணரும் போது இவ்வுலகம் இன்பமயமாகும். 

No comments:

Post a Comment