கருவின் உயிராய் உயிரை இயக்குவது எது? இந்தக் கேள்விக்கு விடை சொன்னவர்கள் எல்லோரும் ஒரே விடையைச் சொல்லவில்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு பதில்களையே சொல்கின்றனர். அவர்களுள் திருமூலர் அறிவியல் முறைப்படி கொஞ்சம் ஆராய்ந்து சொல்கிறார் எனக்கொள்ளலாம்.
கருவின் உயிராய் உயிரை இயக்கி மானுட வடிவு எடுக்க வைக்கும் பொருள் பற்றி ஆராய்ந்து பல திருமந்திரங்களில் திருமூலர் கூறியிருக்கிறார். இன்றைய அறிவியல் எமக்கு எடுத்துச் சொல்லாதனவற்றையும் சொல்கிறார். அவற்றுள் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு தாயின் கர்ப்பப்பையினுள் இருக்கும் கருவின் தொழிற்பாட்டுக்கு தேவையான காற்றின் பாகுபாடு பற்றியும் அத்திருமந்திரம் சொல்கிறது. அத்திருமந்திரம் என்ன சொல்கின்றது என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.
“போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தெனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடானெனிற் பன்றியு மாமே”
- (ப.திருமுறை: 10: 2: 14: 7)
போகின்ற எட்டு: நாவில் சுவை, கண்ணில் ஒளி, காதில் ஓசை [சத்தம்], மூக்கில் நாற்றம் [மணம்], மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய எட்டும் ஆண் பெண் இன்ப வேட்கைப் புணர்ச்சியின் கணத்தில் தொழிற்படாது போகும். ஊறு என்று சொல்லப்படும் தொடுகை உணர்வின் உச்சவெளிப்பாடாகவே விந்தின் வெளிப்பாடு அமைவதால் ஐபுலன்களில் ஒன்றான உடல் [மெய்] தவிர்ந்த ஏனைய நான்கு புலன்களின் உணர்வுகளையும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று சொல்லப்படும் அந்தக்கரண உணர்வுகளையும் சிற்றின்பப் புணர்ச்சியின் போது உணரமுடியாது.
சிற்றின்பமே பேரின்பத்திற்கு வழிவகுத்தது என்பது எமது முன்னோர் கண்ட முடிவாகும். அதனாலேயே பாரதியாரும்
“புலன்களோடு கரணமும் ஆவியும்
போந்து நின்ற விருப்புடன் மானுடன்
நலன்கள் ஏது விரும்புவன் அங்கவை
நண்ணுறப் பெறல் திண்ணம்” என்றார்.
உடல் தவிர்ந்த புலன்கள் நான்கும் கரணங்கள் நான்கும் ஆகிய எட்டுமே தொழிற்படாது போகின்ற எட்டாகும்.
புகுகின்ற பத்தெட்டு: பத்து + எட்டு = பத்தெட்டு. உடலின் தொழிற்பாட்டுக்கு தேவையாய் உடலினுள் இயங்கும் பத்து வாயுக்கள். தாய் தந்தையரின் மரபணுக்கள் சுமந்து வரும் எட்டு குணங்கள். ஆகமொத்தம் பதினெட்டு.
பத்து வாயுக்கள்:
பிராணன்: பத்து வாயுக்களிலே தலைசிறந்த வாயு பிராணன். கண், காது, வாய், மூக்கு பகுதிகளில் இருக்கும்.இதனை ஒட்சிசன் என்று கூறமுடியாது. ஆனால் அது போன்றது. உடலெங்கும் இயங்குவது.
வியானன்: எமது உடலின் சக்தியை சமமாகவைத்திருக்க உதவுவது. உடலெங்கும் இயங்குவது. உடலில் இருக்கும் நாடிகள் வழியாக வியானான் இயங்குகிறது.
அபானன்: மூலாதாரப் பகுதியில் இருப்பது. பெருங்குடல் முதல் குதம் வரை இயங்கும். கழிவுகளை வெளியேற்றும். இனப்பெருக்க உறுப்புகளை இயக்கும். இது உடலை சமநிலையில் வைத்திருக்க உதவும்.
சமானான்: உண்ட உணவு செரிக்க உதவும். இதுவே செரித்த உணவை உடலெங்கும் கொண்டு சென்று அந்தந்த உறுப்புக்கு தேவையான அளவு சக்தியைக் கொடுக்கிறது. தொப்பூழைச் சுற்றி இருப்பது. அதாவது உடம்பின் நடுவே இருக்கும்.
உதானான்: தொண்டை, நெஞ்சு, மூக்கு, தோள்பட்டை பகுதியில் இருப்பது. உயிருள்ள உடலில் இருக்கும் சூட்டிற்கு உதானனே காரணம். உதானன் வெளியேறுவதாலேயே மரணத்தின் பின் உடல் குளிர்கிறது. அதனால் மரணத்தின் பின் உயிரின் பயணத்திற்கு உதவுவதும் இதன் தொழிலாகும்.
நாகன்: தொண்டைப்பகுதியில் இருப்பது. விக்கல், ஏப்பம், வாந்தி என்பவற்றை உண்டாக்கும்.
கூர்மன்: கண்ணில் இருப்பது. கண் இமைப்பதற்கும், விழித்தெழுவதற்கும் உதவுகின்றது.
கிருகரன்: மூக்கில் இருப்பது. மணங்களை நுகர்வதற்கும், தும்மல், பசி உண்டாக்குவதற்கும் உதவுகின்றது.
தேவதத்தன்: நெஞ்சில் இருப்பது. கொட்டாவி விட உதவுகின்றது.
தனஜ்சயன்: உடலெங்கும் இருப்பது. கருவின் உயிருள் முதல் புகும் வாயு தனஜ்சயனே. உயிர் உடலைவிட்டு போனாலும் இது உடலைவிட்டுப் பிரியாது, உடல் மண்ணோடு மண்ணாகும்வரை இருக்கும். தனஜ்சயன் இறந்த உடலை வீங்கச்செய்து, நாற்றம் எடுக்க வைக்கும். இறந்த பின் மண்ணுள் புதைத்த உடலில் உள்ள மயிரை வளரச்செய்வதும் தனஜ்சயனின் தொழிற்பாடாகும்.
இந்த பத்து வாயுக்களின் தொழிற்பாட்டை ஆராய்ந்து கண்டறிந்தவர்கள் தமிழர்களே என்பதை இவ்வாயுக்களின் பெயர்களில் வரும் இறுதி எழுத்து ‘ன்’ என தமிழுக்கே உரிய ‘ன’கரத்தில் முடிவதால் அறியலாம்.
எட்டுக்குணங்கள்:
காமம்: ஆண், பெண் இனக்கவர்ச்சியால் ஏற்படும் இன்பவேட்கைக் குணமாகும்.
குரோதம்: தீராத பகை. அழியாப் பகையை மனதில் சுமந்து வாழும் குணமாகும்.
உலோபம்: கடும்பற்றுள்ளம். தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுக்காத குணமாகும்.
மோகம்: அதிகூடிய காமத்தால் மயங்கும் குணமாகும்.
மதம்: அதாவது செருக்கு. தன்னைவிடச் சிறந்தவர் இல்லை என்னும் மமதைக் குணமாகும்.
மாச்சரியம்: மற்றவர்கள் தன்னிலும் நன்றாக வாழ்வதை, படிப்பதை, முன்னேறுவதைக் கண்டு பொறாமை கொண்டு அவர்களைக் கெடுக்க நினைக்கும் குணமாகும்.
தம்பம்: பகட்டுக்கு மயங்கி, ஆடம்பரமாக வாழ நினைத்தல் மற்றவர்களை குறைவாக நினைக்கும் குணமாகும்.
அகங்காரம்: தான் என்ற முனைப்பு. இறுமாப்புடன் செயற்படும் குணமாகும்.
இந்த எட்டுக்குணங்களும் கருவிலே தோன்றி, குழந்தைப் பருவத்தில் தளிர்விட்டு, இளமைப் பருவத்தில் உடன் வளர்ந்து இச்சைப் பருவத்தே மலர்ந்து மணம் வீசி, உயிர் உடலைவிட்டு போகும்வரை இருக்கும். அவற்றின் வெளிப்பாடுகள் உயிர்களுக்கு உயிர் வேறுபடும். பிறந்து வளரும் சூழலும், மரபணுக்களின் தொழிற்பாடுகளும் அதற்குக் காரணமாகும்.
மூழ்கின்ற முத்தன்: உயிர் - ஆன்மா. கருப்பையின் உள்ளே ஒரு திரவம் இருக்கிறது அல்லவா? அதனுள் கரு மூழ்கிக் கிடப்பதால் திருமூலர் மூழ்கின்ற முத்தன் என உயிரைக் குறிப்பிடுகிறார். அதாவது கர்ப்பபையினுள் இருக்கும் அம்நியோட்டிக் திரவத்தினுள் [Amniotic fluid] முத்தாக உயிர் கொண்ட கரு மூழ்கும் என்கிறார்.
ஒன்பது வாய்:
கண் துவாரங்கள் இரண்டு
மூக்குத் துவாரங்கள் இரண்டு
காதுத்துவாரங்கள் இரண்டு
வாய்த் துவாரம் ஒன்று
மலவாசல் துவாரம் ஒன்று
சலவாசல் துவாரம் ஒன்று
ஆக மொத்தம் மனித உயிருக்கு ஒன்பது வாசல் இருப்பதையே ஒன்பது வாய்தலும் என்றார்.
நாகம்: மூளையின் தொடர்ச்சியாய் தொடர்ந்து வரும் முண்ணானின் அமைப்பை திருமூலர் நாகம் என்று கூறி, மூலாதார சக்தியின் தொழிற்பாட்டைக் குறிப்பிடுகிறார்.
எட்டுடன் நாலு புரவியும்: வெளியுலகில் இருந்து உயிரின் இயக்கத்துக்காகச் செல்லும் எட்டு கெட்டவாயுக்களையும் நான்கு நல்ல வாயுக்களையும் புரவி [குதிரை] என்கிறார். அவை மூச்சுக் காற்றாக எமக்குள் மிக விரைவாக உட்சென்று வெளிவருவதால் குதிரை என்றார். மேலே குறிப்பிட்டவற்றை இயற்கை என்று சொல்லப்படும் பாகன் [இறைவன்] உயிரினுள் புகவிடாவிட்டால் அந்த உயிரின் பிறப்பானது பன்றியைப் போல இழிவானதாக இருக்குமாம்.
இவையாவும் கருவின் உயிராய் உள்புகுந்து இயங்காவிட்டால் உயிரேது? இவ்வுலகேது?
இனிதே,
தமிழரசி.