Monday 28 February 2022

யானும் இருகை சுமந்து வாழ்வேன்!

போர்க்கால மேகம் உலகைச் சூழ்ந்திருக்கும் இந்நாளில் போரின் கொடுமையைப் பார்க்கிறோம். தமிழனுக்குப் போர் புதியதல்ல.  சங்ககாலத் தமிழர் அறத்தையும் மறத்தையும் தமது இரு கண்ணெனப் போற்றினர். மறப்போர் செய்யத போதெல்லாம் அறத்தையும் கைப்பிடித்தனர். அறம் மறம் இரண்டையும் புறநானூறு கூறிய போதும் அந்த இரண்டையும் ஒன்றாகப் பல இடங்களில் எடுத்துக் காட்டுகிறது. 


சோழன் நலங்கிள்ளி என்பவன் ஆவூரை முற்றுகையிட்டான். ஆவூரின் அரசனான சோழன் நெடுங்கிள்ளி கோட்டை மதிற்கதைவைப் பூட்டி உள்ளே இருந்தான். நாட்டில் இருந்த உணவும் ஒழிந்தது. செழிப்பு மிக்க செல்வந்தர் வீடூகளில் கூட நீரில்லை. பச்சிளங்குழந்தைகள் பாலுக்கு அலறுகின்றன. (இத்துயரங்கள் எக்காலத்தும் மாறாதவை). மிருகங்களும் மனிதரும் படுந்துன்பத்தைப் பார்த்த கோவூர்க் கிழார் எனும் சங்ககாலப் புலவர்


இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா

நெல்லுடைக் கவளமொடு நெய்மிதி பெறாஅ

திருந்திரை நோன்வெளில் வருந்த ஒற்றி

நிலமிசைப் புரளும் கைய வெய்துயிர்த்து

அலமரல் யானை உருமென முழங்கவும்

பாலில் குழவி அலறவும் மகளிர்

பூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில்

வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்

இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்

துன்னருந் துப்பின் வயமான் தோன்றல்

அறவை யாயின் நினது எனத்திறத்தல்

மறவை யாயின் போரோடு திறத்தல்

அறவையும் மறவையும் அல்லை யாகத்

திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்

நீள்மதில் ஒரு சிறை ஒடுங்குதல்

நாணுத்தக வுடைத்திது காணுங் காலே - (புறம்: 44)


சோழன் நெடுங்கிள்ளியைப் பார்த்துயானைகள் நெற்சோறும் நெய்யும் சேர்ந்த கவளம் பெற்று உண்ணாது நிலத்திற்புரண்டு இடிமுழக்கம் போல பிளிறுகின்றன. குழந்தைகள் பாலில்லாமல் அலறப் பெண்கள் பூ இல்லாது வெறுந்தலையை முடிக்கின்றனர். வேலையாட்கள் நிறைந்த வீடுகளிலும் குடிக்க நீர் இன்றி அழும் கூக்குரல் கேட்கிறது. நீ கோட்டைக்குள் இனிமையாக இருப்பது மிகவும் துன்பமானது. ஆற்றல் மிக்க சிங்கம் போன்ற தலைவனே! அறமுடையவனாயின்நின் கோட்டை இது என்று கூறித் திறந்து விடு. மறமுடையவனாயின் போர்புரிய கோட்டையைத் திறந்து செல். அறத்தையும் மறத்தையும் செய்யாது கோட்டை மதிற்கதவை அடைத்து ஒடுங்கியிருப்பதை ஆராய்ந்து பார்த்தால் அது வெட்கக்கேடாகும்என இடித்துரைக்கிறார்.


போர்க்காலத்தில் அரசனைப்பார்த்துஅறம் செய்! அல்லது மறம் செய்! என கோவூர்க் கிழார் சொன்ன பாங்கு சங்கத் தமிழர் அறத்தையும் மறத்தையும் போற்றி வாழ்ந்ததைக் காட்டுகிறது.


மறம் செறிந்த போர்வீரரும் அறத்தைக் கைவிடவில்லை. சங்ககாலப் போர்க்களம் ஒன்று. அங்கே போர்புரிந்த போர்வீரன் ஒருவனை எதிர்த்து யானை கொல்ல வருகிறது. கொல்ல வரும் யானையைப் பார்த்த வீரனின் மறநெஞ்சில் அறம் தளிர்க்கிறது. யானையை பார்த்து சிரித்தபடி அதைக் கொல்லாமல் இருக்க ஐந்து காரணங்கள் கூறுகிறான்.


தன்னால் விலங்கால் தனித்தால் பிறன்வரைத்தால்

யானை எறிதல் இளிவரலால் - யானை

ஒருகை யுடைய தெறிவலோ யானும்

இருகை சுமந்து வாழ்வேன்                   

                                            - (தொல்: புறத்திணை-உரை: 5) 


தன்னால் என்ன செய்யமுடியும் முடியாது என்பது யானைக்குத் தெரியாது. அதாவது பகுத்தறியும் அறிவு அதற்கு இல்லை. இரண்டாவது அது ஒரு விலங்கு. மூன்றாவது தனித்து வருகிறது. நான்காவது பிறன் ஒருவன் வளர்ப்பது. நான்கு காரணத்தையும் கூறி யானையைக் கொல்லல் இழிவு என்கிறான். அவன் கண்ணில் யானையின் ஒற்றைத் துதிக்கை தெரிகிறது. ! யானை ஒரு கை உடையது அல்லவா? அதனை வேலெறிந்து கொல்லலாமா? கொன்றபின்னர் எப்படி நானும் இருகை சுமந்து வாழ்வேன். இரண்டு கை உடையவனுக்கு அது மானக்கேடு என அறத்தை நினைத்து யானையைக் கொல்லாது ஓடவிடுகிறான். இன்றைய போர்க்களங்களில் அறத்தைப் பார்க்க முடியுமா?

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment