Tuesday 1 February 2022

பண்டைய ஈழத்து மாந்தையில் இருந்த தூங்கெயில்

பண்டைய ஈழத்து மாந்தையில் இருந்த தூங்கெயில் - இது போன்றது
[தூங்கெயில் - நீரினுள் தாழ்ந்து - தூங்கியெழும் மதில்]

This Animation[Sleeping fortress wall - தூங்கெயில்] Created By Deepi Sivasanthiran

இயற்கை வளம் கொஞ்சிவிளையாடும் இலங்கையின் மாந்தை பற்றியும், பண்டைத் தமிழ் மன்னர்கள் நாட்டைக் காப்பதற்காகக் கட்டிய அரண்கள் பற்றியும் விளக்கிய பின்னர் மாந்தையில் எழுந்த தூங்கெயில் பற்றிய விளக்கத்தைத் தருதல் நன்று என நினைக்கிறேன்


பண்டைய ஈழத்திருந்த தூங்கெயில் பற்றிய செய்தியை தமிழ் இலக்கியங்களில் காணலாம். அவற்றுள்ளும் சங்க இலக்கியம், தேவாரம், புறப்பொருள் வெண்பாமாலை, இராமாயணம், மாந்தைப்பள்ளு, மாந்தைமாண்மியம், விஸ்வபுராணம் போன்ற பல தமிழ் நூல்கள் பல கோணங்களில் தூங்கெயிலின் அமைப்பை எடுத்துக் காட்டியும் எம்மவர்கள் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. 


இதுவரை காலமும் 'வானத்திழைத்த' என்ற ஒரு சொல்லை சரியாகப் பிரித்துப் பொருள் கொள்ளாமையே அதன் காரணமாக இருக்கலாம் எனக் கருதுகிறேன். எனது தரவுகளுக்கு அமைய மாந்தையில் இருந்தது போன்ற தூங்கெயிலை முதன்முதலில் Animation ஆக வடிவமைத்துத் தந்த என் தங்கை மகள் தீபி சிவச்சந்திரனுக்கு என் அன்பான வாழ்த்தும் ஆசியும் உரியன.


பண்டைய இலங்கையின் வடமேற்குப் பகுதியில் இருந்த புகழ் பெற்ற கடற்கரைப் பட்டனம் மாந்தை என அழைக்கப்பட்டது. அது உலகமக்களால் பெரிதும் விரும்பப்பட்ட பெரு நகராக விளங்கியது. அது கடற்கரையில் இருந்ததை அம்மூவனார் என்னும் சங்ககாலப் புலவர் 

கடல்கெழு மாந்தை அன்ன               - (நற்றிணை: 395: 9)

என நற்றிணையில் குறிப்பதால் அறியலாம்.


அங்கே துறை - துறைமுகம் இருந்ததை 

துறை கெழு மாந்தை                        - (நற்றிணை: 35: 7)

என நற்றிணையில் அம்மூவனாரே பதிவு செய்திருக்கிறார்.


அது தலைநகராக இருந்ததை அகநானூற்றில் மாமூலனார்

“வலம்படு முரசின் சேரலாதன்

முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து

முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து

நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்

பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்

பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்

ஒன்றுவாய் நிறையக் குவைஇ அன்றவன்

நிலம்தினத் துறந்த நிதியத்து அன்ன"     - (அகநானூறு: 127: 6)

எனக் குறிப்பிட்டுள்ளார்


சேரலாதன் ஈழத்து மாந்தையைத் தலைநகராகக் கொண்டு சேரநாட்டை ஆண்ட சங்ககால அரசன். பெருங்கடலில்[முந்நீர்] கப்பல் ஓட்டிச்சென்று பகையரசனின் கடம்பு மரத்தை அறுத்துச் முன்னோர் வியக்க இமயத்தில் வளையும் வில்[வணங்குவில்] அடையாளத்தைப் பொறித்தவன். பகைவர் திறையாகத் தந்த ஆம்பல்[1014 = 100,000,000,000,000] பெறுமதியான செல்வமெல்லாம் மாந்தைநகரில் இருந்த அவனது அரண்மனை முற்றத்தில் நிலம் தின்று உக்கிப் போகும்படி  கைவிட்டவன் என்று மாமூலனார் சொல்கிறார். சங்ககாலத்தில் மாந்தைநகர் புகழோடும் செல்வச் செழிப்போடும்  இருந்த நிலையை இவை எடுத்துச் சொல்கின்றன.


செல்வம் மிக்க ஒரு நாட்டிற்குப் பாதுகாப்பைத் தருவது அரணாகும். அதனைத் திருவள்ளுவரும்

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடையது அரண்                    - (குறள்: 742)

என்கிறார்.


அதனால் தலைநகரங்கள் பெரும் பாதுகாப்புடன் விளங்கின. அவை வள்ளுவர் சொன்ன நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் ஆகிய நான்கு அரண்களோடு மனிதர் கட்டிய மதிலரணும் சேர்த்து ஐந்து வகையான அரண்கள் உடையனவாக இருந்தன. 


தத்தமது நாட்டைச் சுற்றி அரசர்கள் நான்கு வகையான மதிலரண்களைக் கட்டினர். 

  1. மதில் அரண்: இந்த நால்வகை அரண்களில் உயரம் மட்டும் உடையது மதில் என அழைக்கப்பட்டது.
  2. எயில் அரண் : உயரமும் அகலமும் உடைய மதிலரண் எயில் என அழைக்கப்பட்டது. மதிலரண்களின் அடிப்பகுதி 72’ முதல் 84’ அகலமுடையதாக இருந்ததைக் குடிலரின் அர்த்த சாஸ்திரம் சொல்கிறது. எயில் அரணின் மேற்பகுதி தானே இயங்கி அம்பு எய்யும் விற்களும், படைவீரர்களாகிய எயினரும் இருக்கக் கூடிய வகையில் அகலமாகக் கட்டப்பட்டன. மேற்பகுதியில் மறைந்திருந்து அம்பு எய்யும் தொழிலை எயினர் செய்ததாலும், வில்லை எய்யும்இல்’ [வீடு]  அங்கு இருந்ததாலும் எயில் என அழைக்கப்பட்டது. அம்பெய்யும் புழை ஏப்புழை என்றும் ஏவறை என்றும் அழைக்கப்பட்டது.
  3. இஞ்சி அரண்: இஞ்சுதல் என்றால் இறுகுதல். கருங்கற்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடிக்கிவைக்கப்பட்டு அதன் மேல் செம்பை உருக்கி வார்த்துக் கட்டப்பட்ட அரண், இஞ்சி அரண் என அழைக்கப்பட்டது. உறுதியுடையதாக இஞ்சி அரண் இருந்தது. எயில் அரணில் இருப்பவை யாவும் இஞ்சி அரணிலும் இருந்தன.
  4. சோ அரண்: உயரம், அகலம், திண்மை மூன்றுடன் பிறரால் எளிதில் கைப்பற்றமுடியாத பல இயந்திரப் பொறிமுறைகள் கொண்டதாகச் சோ அரண் இருந்தது.


செம்பைச் சேர்த்து மதில்கள் கட்டினார்கள் என்பதை

செம்பு உறழ் புரிசை பாழி நூறி               - (அகநானூறு: 375: 13)

என அகநானூறும்

செம்புறழ் புரிசை செம்மல் மூதூர்           - (புறநானூறு: 37: 11)

எனவும்

செம்பு புணைந் தியற்றிய சேணெடும் புரிசை    

                                                               - (புறநானூறு: 201: 9)

எனவும் புறநானூறும்,

செம்படுத்த செழும்புரிசை                       - (ப.திருமுறை: 139:3)

என தேவாரமும் இன்னும் பல நூல்களும் சொல்கின்றன. 'மதில் அரண்' புரிசை எனவும் அழைக்கப்பட்டது. 


செம்பிட்டுச் செய்தஇஞ்சி அரண்இலங்கையில் இருந்ததை திருஞானசம்பந்தரும் அவர் அடியொற்றி கம்பரும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். இருவரும் இராவணன் ஆண்ட இலங்கையின் அரணையே குறிப்பிட்டுள்ளார்கள்.


செம்பைச் சேர் இஞ்சிசூழ் செறிந்திழங்கு பைம்பொழிற் 

  சேரே வாரா வாரீசத் திரை எறி நகர்க்கு இறைவன்

                                                         - (ப.திருமுறை: 1: 126: 8)

இத்தேவாரத்தில் திருஞானசம்பந்தர், செம்பு சேர்த்துக்கட்டிய   இஞ்சிமதிலரண் சூழ்ந்த, பசுமையான சோலைகள் நிறைந்த, பெரிய கடலலைகள் மோதுகின்ற [இலங்கை] நகரின் தலைவன் இராவணன் என்கிறார். 


கம்பரும் 

செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர் செல்வம் தேறி ……….

கும்பிட்டு வாழ்கிலேன் கூற்றையும் ஆடல் கொண்டேன்       

                                                         - (கம்பராமாயணம்: 7431)

எனக் கும்பகர்ணன் கூறுவதாக இலங்கையைக் இஞ்சித் திருநகராய் காட்டுகிறார். இன்றும் இலங்கையின் தெற்குக் கடற்கரையோடு இருக்கும் இராவணன் கோட்டையை செம்புக் கோட்டை என அழைக்க இவையும் ஒரு காரணமாக இருக்கலாம். 


அரண்களிலே சிறந்த அரணான சோ அரண் இராவணனின் இலங்கையில் இருந்ததை சங்கஇலக்கியங்களும் தொட்டுக்காட்டத் தவறவில்லை. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் திருமாலின் பெருமையைக் கூறும் இடத்தே

சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த

                                           - (சிலம்பு: ஆய்ச்சியர் குரவை:7 :3) 

என்கிறார்.


மாந்தைப்பகுதி சோபட்டனம் எனவும் எயிற்பட்டனம் எனவும் அழைப்பட்டது. இதைக் கிரேக்க மாலுமிகளும் கூறியதைக் காணலாம். 

மதிலொடு பெயரிய பனிநீர்ப் படுவின் பட்டனம்"     

                                                      - (சிறுபாணா:153)

என எயிற்பட்டனத்தைப்[மதில் உள்ள பட்டனம்] பற்றிச் சிறுபாணாற்றுப்படை சொல்கிறது

பண்டைக்கால எயிற்பட்டனத்தின் சிறப்பை மாந்தைக் கடலில் இருந்த  தூங்கெயில்எமக்கு எடுத்துச் சொல்கிறது.


தூங்கு + எயில் தூங்கெயில்தூங்கு, தூங்கல் என்பன உறங்கல், தாழ்தல் என்ற கருத்துக்களில் வரும். மாந்தை நகர்க்  கடலுள் கட்டப்பட்டிருந்த எயில் [மதில்]தூங்கெயில் என எமது முன்னோரால் அழைக்கப்பட்டது. தூங்கெயில் கடலினுள் தாழ்ந்தும், தேவையான போது எழுந்தும் தொழிற்படக் கூடிய விதத்தில் கட்டப்பட்டிருந்தது. அதை ஏறக்குறைய லண்டன்  தேம்ஸ் நதியில் கட்டியிருக்கும் Thames Barrier போன்றது எனலாம். தூங்கெயிலை மயன் கட்டினான் என்பதை மாந்தைமாண்மியம், மாந்தைப்பள்ளு மட்டுமல்ல விஸ்வபுராணமும்

உத்தர திக்கினமிக்க ஊசிக் காந்தத்தினாலே

சுற்றிலுமகல நாலைந்தோ சனை தூரமுள்ள

முத்திரை மிகுந்த கோட்டை சிருட்டித்தார்

 

காந்த உள்ள அம்மதிலை 4 x 5 = 20 யோசனை தூரத்திற்குக் கட்டினர் என்கிறது.


இலங்கை அந்நாளில் இந்தியக்கண்டத்துடன் சேர்ந்திருந்தது. பின்னாளில் இந்தியாவிலிருந்து பிரிந்து கண்டத்தீவாய் மாறியது. அப்போது இலங்கை செல்வங்கொழிக்கும் குபேரபட்டினமாக இருந்தது. அங்கே இரத்தினங்களும் செம்பு போன்ற கனிமப் பொருட்களும் நிறைந்திருந்தன. அதன் காரணமாக மாந்தையில் புட்பகவிமானம்  பறந்தது. தூங்கெயில் எழுந்தது. சூரிய ஒளிக்கதிரின் துகளில் இருந்து ஒளிநடராசரும் புன்னகைத்தார். அதனால் அங்கு  ஆழ்ந்த விஞ்ஞான அறிவுடைய மக்களும் வாழ்ந்தனர் என்பதை உணரலாம்.


இலங்கையில் வாழ்ந்த இயக்கரும் நாகரும் வானிலும் நீரிலும் இயங்கித் திரியவல்ல கப்பல்களையும் விமானங்களையும் செய்தனர். அதனை

வானினினொடு நீரும் இயங்குவோருக்கு இறைவனாய இராவணன்                                                            - (. திருமுறை: 1: 53: 7)

எனத் திருஞானசம்பந்தர் தேவாரத்தில் இராவணன் புகழ் பேசுவதால் அறியலாம். 


அக்காலத்தில் இந்தியாவின் மேற்கு மலைத்தொடரின் நீட்சியாய் குமரிமலைத்தொடர் இருந்தது. அந்தக் குமரிமலைத் தொடர் இலங்கையின் மேற்குக் கடலின் எல்லையாக இருந்ததால் அது இலங்கைக்கு அரணாக இருந்தது. அப்போது பனிஉருக கடல் நீரின் மட்டம் உயர்ந்ததுடன் இந்தியத் துணைக்கண்டத்தட்டு ஆசியக் கண்டத்தட்டின் கீழ்புகுந்ததால் இமயமலை உருவானது.  அகத்தியர் பொதிகை மலைக்கு வந்ததற்குச் இதிகாசங்களும் புராணங்களும் சொல்லும் கதை கண்டத்தட்டுக்களின் இடப் பெயர்ச்சி எனலாம். இதனால் இந்தியாவின் மேற்குமலைத் தொடரின் ஒருபகுதி கடலினுள் மூழ்கியது. குமரிமலையிலிருந்து வடகிழக்காக இன்றைய மாந்தைக்கு அருகாமைவரையிருந்த கோடு [மலை] மூழ்கி அதங்கோடு [அழிந்தமலை; அதம்-அழிவு] ஆகியது. இந்த அதங்கோட்டில் வாழ்ந்த அதங்கோட்டு ஆசானின் முன்னிலையில் தொல்காப்பியம் அரங்கேறியதாகப் பனம்பாரனார் குறிப்பிட்டுள்ளார்.


கடல் நீர் உட்புகுந்த வழியால் இலங்கையின் வளத்தைக் கொள்ளையடிக்க இலங்கைக்கு மேற்கிலிருந்தும் வடமேற்கில் இருந்தும் வெளிநாட்டார் வரத்தொடங்கினர். அவர்களிடம் இருந்து நாட்டைக்காக்க இந்தியாவுக்கும் குமரிமலைக்கும் இடையே மயன் கடலினுள் வடக்குத் தெற்காக காந்த அரணைக் கட்டினான்.


தூங்கெயில் வடக்குத் தெற்காக இருந்ததை சோழர் புகழ்பாடும் குலோத்துங்க சோழன் உலா

தூங்கெயில் கொண்ட சுடர்வாளோன் - ஓங்கிய

மால் கடல் பள்ளி வறிதாக மண்காத்து

மேல்கடல் கீழ்கடற்கு விட்டகோன்

எனச்சொல்ல 

தூங்கு எயிலெறிந்த சோழனும் மேல்கடலில்

வீங்குநீர் கீழ்கடற்கு விட்டோனும்

                                             - (விகிரமசோழன் உலா: 9)

என விக்கிரம சோழன் உலாவும் சொல்கிறது. 


தூங்கெயில் வடக்குத் தெற்காக கடலினுள் இருந்ததால் மேற்குக்கடல் நீர் கிழக்குக் கடலுக்கு வரமுடியாதிருந்தது. அதனை உடைத்து மேற்குக் கடல் நீரை கிழக்கு கடலுக்கு விட்டனர். முற்காலச் சோழரால் தகர்த்து அழிக்கப்பட்ட அந்தத் தூங்கெயிலில் வெண் சங்குகள் பதித்து இருந்ததை

கடவுள் அஞ்சி வானத்திழைத்த 

தூங்கெயிற் கதவம் காவல் கொண்ட

      - (பதிற்று: 31: 18 - 19)

எனப் பதிற்றுப்பத்து கூறுகின்றது. 


வானத்திழைத்த என்ற இந்தச் சொல்லை  வானத்து + இழைத்து என்று பிரித்து வானத்திலே தூங்கெயிலைக் கட்டியதாகப் பலர் கூறுவதோடு அதனை தொங்கு எயில் எனவும் ஆகாயக் கோட்டை என்றும் திரித்துச் சொல்கின்றனர். அவர்கள் சொல்வது பிழையான கருத்தாகும்


உண்மையிலே வால் + நத்து + இழைத்த = வானத்திழைத்த எனப்புணரும். வால் என்பது வெண்மையையும் நத்து என்பது சங்கையும் குறிக்கும். [வானத்திழைத்த தூங்கெயிற் கதவம்]  வெண்சங்குகள் பதித்த தூங்கெயில் கதவு எனப் பொருள்கொள்ள வேண்டும். செல்வங்களையும் பெண்களையும் கொள்ளையடித்துச் செல்லும் தேவர்களின் தொல்லையால் அவர்களுக்கு அஞ்சி [கடவுள்அஞ்சி] வெண்சங்கு பதித்துக் கட்டியிருந்த தூங்கெயிலைக் கைப்பற்றி வெற்றி கொண்டான் என்பதையே பதிற்றுப்பத்து சொல்கிறது. அதுமட்டும் அல்ல கடவுள் அஞ்சி - கடவுளுக்குப் பயந்து என்பதை 'கடவுள் அஞ்சி' என்பவன் ஓர் அரசன் என எழுதுவோர் பலராவர். அவனே அம்மதிலைக் கட்டினான் என எழுதுவோரும் உண்டு. அது நகைப்புக்கு இடமானதே. இப்படி எமது அறியாமையால் நம் முன்னோரின் பல நல்ல வரலாறுகளை குழி தோண்டிப் புதைக்கிறோம். சங்ககால நூல்கள் கடவுள் அஞ்சி ஓர் அரசன் எனக்குறிப்பிடவில்லை.


அந்த தூங்கெயில் கடலினுள் இருந்து மேலே எழுந்து வரும் பொழுது இடிபோன்ற சத்ததுடன் உருமி நெருப்பைச் சொரியும் என்கிறது சிறுபாணாறுப்படை. 


ஓங்கு எயில் கதவம் உருமுச்சுவல் சொரியும்

தூங்கெயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை

                                                      - (சிறுபாணா: 80 - 81)  

கையை ஓங்கி அடித்தான் என்று சொல்லும் பொழுது கையை உயர்த்தி அடித்தான் என விளங்கிக் கொள்வோம். உயர்ந்து அல்லது மேலே எழுந்து [ஓங்கு] வரும் மதிலின் [எயில்] கதவு [கதவம்] உருமி [உருமு] சுவாலையைச் [சுவல் - தீச்சுடர்] அள்ளி வீசும் [சொரியும்] தூங்கெயிலை உடைத்த [எறிந்த] வீரவளை [தொடி] அணிந்த தோளையுடைய சோழன் [குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் முன்னோன்] என்கிறது சிறுபாணாற்றுப்படை.


சோ அரண் அழலைக் கக்கும் என்பதை புறப்பொருள் வெண்பாமாலை

சுழல் அழலுள் வைகின்று சோ

                                 - (பு.வெ.228)

எனச் சொல்கிறது. 



பெரிபிளஸ்சும் [peripilus] கி மு 3ம் நூற்றாண்டிலேயே சோபட்டனத்தை [Sopatna] குறிப்பதை ‘Trade and Merchants in Ancient Tamilakam’  என்ற நூலில் குருசரண் தாஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.


இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது இப்படி நெருப்பைக் கக்கவும் இடிபோன்ற சத்தத்தை எழுப்பவும்  கடலினுள் இருந்து எழுந்தும் தாழ்ந்தும் இயங்கவும் தேவையான சக்தியை எப்படி எங்கிருந்து எம் மூதாதையர் பெற்றார்கள்? அதுவும் மாந்தையில்? என்ற கேள்விகள் உண்டாவது இயல்பே. 


தமிழர் பன்னெடுங்காலமாக பொன்னைப் பயன்படுத்தினர். அதன்பின் அவர்கள் அறிந்து கொண்ட கனிம உலோகங்களை பொன்னின் பெயர் கொண்டே அழைத்தனர். அவர்கள் சிவந்த பொன்னை செம்பொன் என்று சொல்ல அது செம்பு என்றும், இருண்ட பொன்னை இரும் பொன் என அழைக்க அது இரும்பு என்றும் மருவிற்று. பாதரசம், செம்பு, இரும்பு, கந்தகம் போன்ற கனிமப்பொருட்களை பண்டைய தமிழர் பயன்படுத்தியமையை அகழ்வாராச்சிகளும் தொல்பொருள் சான்றுகளும் கோடிட்டு எமக்குக் காட்டுகின்றன. ஆதலால் மாந்தையில் வாழ்ந்த தமிழரும் இக்கனிமங்களால் தூங்கெயிலைக் கட்டினர் என்பது கண்கூடே.


உலகிலுள்ளோர் வானத்திலிருந்து வீழும் கற்களைக் கொண்டு இரும்பைப் பிரித்தெடுக்க, தமிழர்களாகிய நம் முன்னோர் கடற்கரை ஓர மணலிலும், பாறைகளிலும் இருந்து வார்ப்பு இரும்பைப் பிரித்து எடுத்தனர் என்பதை  Calcutta Asiatic Society iiல்  H M Heath என்பவர் 1794 லிலேயே பதிவு செய்து வைத்துள்ளார்.


பண்டைக்கால ஈழத்தில் செம்புத்தாதை உலையில் இட்டு பிரித்து எடுத்த போது மிதந்த கழிவுகளின் [copper slag] சுவடுகள் மாந்தையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தொல்லியல் ஆய்வாளரான சிரான் தரணியகல [Deraniyagala] கி மு 1800ல் மாந்தையில் செம்பு பயன்படுத்தியதற்கான சுவடுகள் இருந்ததைக் கூறியுள்ளார்.


அத்துடன் அங்கு கண்டுபிடிக்கப்பட்ட கண்ணாடி மணிகளும் தமிழ்நாட்டு கொடுமணல், அரிக்கமேடு போல் இல்லாமல் நீலப்பச்சை நிறத்தில் இருப்பது அம்மணிகளைச் செம்பு, இரும்பு கலந்தே செய்திருப்பர் என்பதைக் காட்டுகிறது. எனவே பண்டைய நாளில் மாந்தையில் வாழ்ந்த தமிழர் செம்பையும் செம்பை பிரித்து எடுக்கும் வழிமுறையையும் அறிந்திருந்ததோடு  செம்பை எதற்கு எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் அறிந்து வைத்திருந்தனர் என்பது தெளிவாகிறது.


மாந்தைப்பள்ளு

காந்தமுறு தடமதிலும் கமழுமலர்ப் பொழிலுமுற்ற

மாந்தை நகர் 

எனச்சொல்வதால் தூங்கெயில் காந்தத்தன்மை உடையதாய் இருந்தமை தெரிகிறது. சீன யாத்திரியர்களும், கிரேக்க மாலுமிகளும் அரேபிய நாடோடிக் கதைகளும் இலங்கையில் இருந்த காந்தக்கோட்டை பற்றிய குறிப்பைத் தருவதைக்  காணலாம். இலங்கைக்கு வெளியே இருந்து வரும் கப்பல்கள் காந்த மதிலில் உள்ள காந்தத்தால் கவர்ந்து இழுக்கப்படுவதால் அவை அம்மதிலில் மோதி உடைந்து சிதைவடைய, இலங்கையர் வந்து சிதைந்து போன கப்பலில் உள்ள பொருட்களை கொள்ளை அடித்துச் செல்வார்கள் என்று கூறவும் அவர்கள் தவறவில்லை.



எனவே மாந்தையில் காந்த்தன்மையுள்ள மதில் இருந்ததை பண்டைய மேலைத்தேச, கீழைத்தேச மக்கள் அறிந்திருந்தனர் என்பது தெளிவாகின்றது.

 

எம்முன்னோர்கள் தூங்கெயிலின் தொழிற்பாட்டிற்குத் தேவையான மின்காந்தசக்தி, வெப்பசக்தி, இயக்கசக்தி, எரியும் சக்தி போன்றவற்றை  செம்பிலிருந்தும், பாதரசத்தில் இருந்தும், நீரிலிருந்தும் கந்தகத்திலிருந்தும் பெற்றிருப்பார்கள் என்பதில் வியப்பில்லை.


புறநானூற்றில் நப்பசலையாரும் தூங்கெயிலின் சிறப்பைக் கூறுமிடத்து பகைவர்களும் அஞ்சி நெருங்கமுடியாத அரிய வலிமையுடையது என்பதை

“………………………………..சார்தல்

ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்

தூங்கெயில்                                    - (புறம்: 39: 4 - 6)

எனச் சொல்கிறார்.                       


பழந்தமிழர் மரபுப்படி இரு அரசர்களுக்கு இடையிலோ அல்லது கொள்ளைக்காரர்களாலோ போர் ஏற்படும் போது கோட்டையுள் நுழைய முற்படுபவர் உழிஞையர் என்றும் கோட்டையைக் காப்பாற்றுபவர் நொச்சியர் என்றும் அழைக்கப்படுவர். உழிஞைப் போர்கள் நீருக்குள்ளேயே நடைபெற்றன. தொல்காப்பியர் இதை

நீர்ச்செரு வீழ்ந்த பாசியும்       (தொல்: பொரு: 69)

எனச்சொல்வதைக் கொண்டு நாம் உணரலாம்


நீரில் எப்படி பாசி தள்ளத்தள்ள படர்ந்து வருமோ அப்படி போர்வீரர் நீருக்குள் படர்ந்து கோட்டையுள் நுழைய முற்படுவர். இப்படி கோட்டையுள் நுழைவோரைத் தடுக்க அரண்களில் இயந்திரப் பொறிகளைச்  செய்து வைத்திருந்தனர். 


தூங்கெயிலிலும் இப்படியான இயந்திரபொறிகள் பல இருந்தன. அதில் இடங்கணி என அழைக்கப்பட்ட கல்லுமிழ் கவண், செம்பு உருக்கும் மிடா [பகடு குழிசி], மதிலில் பற்றிப்பிடித்து ஏறுவோர் கையில் குத்தும் ஊசி [கைபெயரூசி], எஃகு உலை [காய்பொன் உலை], தானே வளைந்து எய்யும் விற்கள் [எந்திரவில்], இடங்கணிக்கு தேவையான கல்லைப் போட்டுவைக்கும் கூடை [கல்லிடு கூடை], அகழியைக் கடந்து மதிலில் ஏறுவோரைப் பிடிக்கும் தூண்டில், ஏவறைகள் [புழை], அம்பு தொங்கவிடப்படும் விட்டம் [ஐவித்துலாம்], கழுகுப்பொறி, புலிப்பொறி, தகர்ப்பொறி [பாய்ந்து குத்தும் செம்மறியாடு] போன்ற பலவற்றோடு குடப்பாம்பு, தேனீ, குளவி, கண்கொத்தும் பறவை [சென்றெறி சிரல்] போன்ற உயிரினங்களும் இருந்தன என்பதை சிலப்பதிகார உரையால் அறியமுடிகிறது.


பகைவரை நோக்கி எந்திர அம்பு எய்வதற்காகக் கட்டப்பட்ட துளைகள் ஞாயில் என அழக்கப்பட்டன. அதனை

இஞ்சி சூழ்வன எந்திரப் பந்திசூழ் ஞாயில்

என்கிறது பெரியபுராணம். 


கடலினுள் மூழ்கி இருக்கும் தூங்கெயில் பிறநாட்டு கப்பல்கள் வரும்பொழுது இடிபோன்ற சத்தத்துடன் மேலெழுந்து வரும். தூங்கெயிலின் காந்த அலைகள், கப்பல்களை மதிலை நோக்கி இழுக்க, தூங்கெயிலில் உள்ள நாகத்தலைகள் கப்பல்களை நோக்கி நெருப்பைக் கக்கி, அவற்றை எரித்தன. அதற்குப் பயந்து பிறநாட்டவர் இலங்கையினுள் நுழைய அஞ்சியிருந்தனர் என்பதை பண்டைய உலக மாந்தரால் அறிகிறோம்.


மயனால் மாந்தையில் எழுந்த தூங்கெயிலின் சிறப்பை இன்றைய உலகிற்குச் சொல்லவேண்டிய கடமை தமிழ் இனத்திற்கு அதிலும் ஈழத்தமிழ் இனத்திற்கு இருக்கிறது. அதனை எடுத்துக் காட்ட  வேண்டிய கடப்பாடு ஈழத்தில் பிறந்து மிகச்சிறிய அளவு  தமிழை அறிந்திருக்கும் எனக்கும் உண்டு எனக்கருதுகிறேன்.

இனிதே,

தமிழரசி.


குறிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள சில கருத்துக்கள் என் தந்தை பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் எழுதிய மறைந்த மாநகரம் என்ற நூலில் அவரால் எழுதப்பட்டவையாகும். மேலே உள்ள animation முழுவடிவம் பண்டிதர் மு ஆறுமுகனின் நூற்றாண்டு விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. நூற்றாண்டு மலருக்காக 2014ல் இந்த ஆய்வை எழுதினேன்.


மேலே 127வது அகநானுற்றுப்பாடலில் வரும் 'நன்னகர் மாந்தை' என்பதை 'நன்னகர் மரந்தை' என மாற்றி எழுதியும் 31வது பதிற்றுப்பத்துப்பாடலில் வரும் 'வானத்திழைத்த தூங்கெயிற் கதவம்' என்பதை பிழையான கருதுகோளில் 'ஆகாயக்கோட்டை' என எழுதியும் வருவது ஈழத்தமிழினத்தின் வரலாற்றுக்கு சிதைவை ஏற்படுத்துவதை நாம் உணரவேண்டும். சிலர் இலக்கியங்கள் வரலாறாகுமா என எண்ணக்கூடும். ஆனால் தமிழ் நிலப்பரப்பில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள், தொல்பொருளாளர்கள் பயன்படுத்தும்  ஈமத்தாழி, கற்படுக்கை, முதுமக்கள்தாழி, உறைகிணறு, ஏறுதழுவுதல் போன்ற ஆயிரக்கணக்கான சொற்கள் சங்க இலக்கிய சொற்களே. பண்டைய  உண்மை வரலாறுகளையும் சங்கத் தமிழ் இலக்கியங்கள் படம்பிடித்து வைத்துள்ளதை தொல்பொருள் ஆய்வுகள் காட்டுகின்றன என்பதை மனம் கொளல் நல்லது.

No comments:

Post a Comment