Monday 7 February 2022

ஏன் கணவருக்கும் எனக்கும் சண்டையில்லை?

 

இன்பங்களைத் தேடி அடைவதே மனித வாழ்க்கையின் நோக்கமாகும். அதில் மனதுக்கினிய பல்வகைப்பட்ட இன்பங்களை அள்ளித் தருவது இல்வாழ்க்கை. அது கற்றுத்தரும் பாடங்களை நாளும் நாளும் கற்கிறோம். சரியெது? பிழையெது? எவையெவை எமக்கு வேண்டும்? யார் யாரிடம் எப்படி நடப்பது? தாமரை இலைத் தண்ணீர் போல் எங்கே இருக்க வேண்டும்? உற்றார் பெற்றோர் உறவினர் நண்பர் என எத்தனை வகையான கல்வி. அக்கல்விக்கு இணையாக எதனையும் கூறமுடியாது. இல்வாழ்க்கையில் கிடைத்த அறிவு எம்மை மேலும் மெருகூட்டி மிளிர வைக்கிறது.

கணவனை மனைவியும் மனைவியைக் கணவனும் புரிந்து கொண்டு பத்து ஆண்டுகள் மகிழ்ச்சியில் கழிந்த பின்பும் காலம் அவர்கள் வாழ்விலும் கோலங்கள் போடும். உறவென்றும் பகையென்றும் கோபமென்றும் துரோகமென்றும் பொருளென்றும் பணமென்றும் பல வண்ணங்கள் காட்டும். இவை மனவிரிசல்களையும் பிரிவுகளையும் ஏற்படுத்தும். இதுவே இன்றைய இல்லற வாழ்க்கை காட்டும் உண்மை. இத்தகைய நெருடலான வாழ்க்கையை இன்பவாழ்க்கையாக மாற்றுவது எது? அல்லது எவை?

1983ம் ஆண்டு என நினைக்கிறேன். புத்தம் புதுவீடு, வீட்டிற்கு முன் சிறிய குளம். அக்குளத்தில் பறைவைகள், பெரும்பாலும் அன்னங்கள் உலாவரும். அவற்றைப் பார்த்து இரசிக்க கணவருக்கும் எனக்கும் பிடிக்கும். இளம் வயதினருக்கு வேறு என்ன வேலை? விடுமுறை நாளொன்றில் மதிய உணவும் மாம்பழ அல்வாவும் [இலண்டனில் மாம்பழமும் தேங்காயும் வாங்கமுடியாத காலம்] சமைத்தேன். பின்னர் இருவரும் சென்று குளக்கரையில் இருந்து கதைத்தபடி அன்னங்களைப் பார்த்து மகிழ்ந்தோம். உணவு உண்ண வீட்டிற்கு வந்த கணவருக்கும் எனக்கும் இடையே சிறிய ஊடல்[சண்டை அல்ல]. சமைத்த உணவு மூடியபடி அப்படியே இருக்க, பார்ப்பதற்கு ஆளற்று தொலைக்காட்சிப் பெட்டியில் ஏதேதோ காட்சிகள் போக, நேரமும் நகர்ந்தது. 

எங்கள் வீட்டு அழைப்புமணி அழைத்தது. கதவைத் திறந்தேன். அங்கே என் மச்சாளும் அண்ணனும் சிரித்தபடி நின்றார்கள். எங்கள் ஊடல் எங்கோ சென்று மறைந்தது. எம் இருவரையும் விட்டு மெல்லச் சற்று விலகியிருந்த மகிழ்ச்சி குதித்து ஓடி வந்து வீட்டை நிறைத்தது. நால்வரும் உணவு உண்டு மகிழ்ந்தோம். வாழ்க்கையும் துள்ளு நடை போட்டது.

திருவள்ளுவர்ஊடுதல் காமத்துக்கு இன்பம்என்றார். அத்தகைய ஊடலும் சண்டையாக வெடிக்கும். ஊடலை, சண்டையை நீக்கி இல்வாழ்க்கையை இன்பமாக மாற்றுவது அன்பான உறவினர், நண்பர் வருகையும் விருந்தோம்பலும் என்பதை எம் வாழ்க்கை எமக்கு உணர்த்தும்.

இரண்டாயிர வருடங்களுக்கு முன் சங்க காலத்தில் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஊடல் ஏற்பட்டது. கணவன் தன் மனைவியின் ஊடல் நீங்க தங்கள் வீட்டிற்கு விருந்தினர் எவராவது வரமாட்டார்களா என ஏங்குவதை மாங்குடி கிழார் என்ற சங்ககாலப் புலவர் படம்பிடித்து வைத்துள்ளார். விருந்தினர்க்குச் சமைத்துச் சமைத்து அவள் கண்களோ புகை மண்டி இருந்தது. அந்த ஊடலிலும் அவளின் புகைமண்டிய கண்களே அவன் நினைவுக்கு வருகிறது

புகையுண்டு அமர்ந்த கண்ணள் தகைப்பெறப்

பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர்

அந்துகில் தலையில் துடையினள் நப்புலந்து

அட்டி லோளே அம்மா அரிவை

எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பு ஆன்று

சிறுமுள் எயிறு தோன்ற

முறுவல் கொண்ட முகம் காண்கம்மே

- (நற்றிணை: 120: 6 -10)

பிறை போன்ற நெற்றியில் நுண்மையாகத் துளிர்த்திருந்த வியர்வைத் துளிகளைத் சீலைத் தலைப்பில் துடைத்தபடி என்னுடன் ஊடியதால் அடுக்களைக்குள் போய்விட்டாளே மாநிறமான பெண். ‘எனக்காக விருந்தினர் வரமாட்டார்களா! கோபத்தை விடுத்து சிறிய பற்கள் தெரிய சிரிக்கும் அவளது  அழகிய முகத்தைக் காண்பதற்காகஎன ஏங்குகிறான். விருந்தினர் வந்தால் அவள் சிரித்து வரவேற்பாள் என்பது அவனுக்குத் தெரியும்.

சங்ககாலப் புலவரான பரணர் பார்த்த பெண் ஒருத்தி என் கணவனுக்கும் (தலைவனுக்கும்) இடையே சண்டையே (ஊடலே) இல்லை எனத் தோழியிடம் கூறுகிறள். ஏனெனில் அவளுடைய வீட்டில் எந்நேரமும்  விருந்தினரே நிறைந்திருப்பார்கள். விருந்தினர் வரவர அவர்களை இன்முகத்துடன் வாங்க வாங்க என்று வரவேற்று உணவளிக்க வேண்டும். அல்லாவிடின் வள்ளுவன் சொன்னது போல விருந்தினர் மனம் அனிச்சம் பூவாக மாறிவிடுமே.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து - (திருக்குறள் - 90)

அனிச்சம் பூவை மணந்தால் அது வாடும். மூச்சிக் காற்றின் வெப்பம் அனிச்சம் பூவின் மென்மையான இதழ்களை வாடச்செய்கிறது. அனிச்சம் பூவின் அருகே மூக்கை வைத்து மணந்ததும் அது வாடும். ஆனால் பத்தடி தூரம் தள்ளி இருந்து முகத்தை சிறிது சுழித்தாலே விருந்தினர் நெஞ்சம் வாடிவிடும். இத்திருக்குறள் அனிச்சம் பூவைவிட விருந்தினர் மனம் மிக மென்மையானது என்கிறது.

பரணர் பார்த்த பெண்ணிடம் அவளின் தோழியைத் தலைவன் தூது அனுப்புகிறான். தோழி அவளிடம் சென்றுதலைவனுடன் ஊடல் கொள்ளதேஎன்கிறாள். அதற்கு அவள் 

“…………………….. பரத்தமை

புலவாய் என்றி தோழி! புலவேன்………….

தொன்றுமுதிர் வேளிர் குன்றூர் அன்னவென்

நன்மனை நனிவிருந்து அயரும்

கைதூ வின்மையின் எய்தா மாறே                               

                                                            - (நற்றிணை: 280: 5 - 10)

தோழி! அவன் பரத்தமை [விலைமாதரிடம் செல்பவன்] உடையவன் என்பதை அறிந்திருந்தும் நீ அவன் மேல் ஊடல்கொள்ளாய் என்கின்றாய்! பழமை முதிர்ந்த வேளிரது குன்றூரைப் போலப் பெரியது எனது வீடு. அங்கு விருந்துண்ண வருவோரை வரவேற்று உணவு கொடுப்பதால் கையாற நேரமில்லை. எப்படி அவனுடன் ஊடல் கொள்வது?’ என்கிறாள்.  அவன் பரத்தையிடம் சென்றதைக் கேட்டு ஊடல் கொள்ளவும் அவளுக்கு நேரம் இல்லை.

பண்டைத் தமிழரின் விருந்தோம்பற் பண்பு மன அழுத்தங்களைப் போக்கி  குடும்ப விரிசல்களை நீக்கியுள்ளதை அறியமுடிகிறது. 

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment