Saturday 19 February 2022

மங்கலமா! மங்களமா! எது சரி?

அலைமகள் கையில் இருக்கும் மங்கல அமுதம்

மங்கலம் என்னும் சொல் இன்று பேசுபொருளாக இருக்கிறது. திருமண அழைப்பிதழ் எழுதி அடிப்பதற்காக அச்சகத்தாரிடம் கொடுத்திருப்பீர்கள். அவர்கள்மங்கலம்என்பதைமங்களம்என மாற்றி அடித்திருப்பார்கள். ‘ஏன் மங்கலம் என்ற சொல்லை மாற்றினீர்கள்?’ என்று கேட்டால், மங்களா, மங்களேஸ்வரி, மங்களாம்பிகை என்ற பெயர்களே இருக்கின்றன. மங்கலா, மங்கலேஸ்வரி, மங்கலாம்பிகை என்ற பெயர்கள் இருக்கின்றனவா? எனக் கேட்பர். அவர்கள் கேட்கும் கேள்வி சரியா? இரண்டு வடிவிலும் பெயர்கள் எழுதப்படுவதே உண்மை. சொல்லின் ஒலியின் இனிமைக்காக எழுத்தை மாற்றி எழுதுவதும் உண்டு.

இலங்கையின் நாகர் கையில் இருக்கும் மங்கல அமுதம்

இரண்டாயிர வருடங்களுக்கு மேலாகத் தமிழில் மங்கலம் என்ற சொல்லே பயன்பாட்டில் இருக்கிறது. 

தொல்காப்பியர் பொருளதிகாரத்தில்

மங்கல மொழியும் அவையல் மொழியும்

மாறில் ஆண்மையிற் சொல்லிய மொழியும்

கூறிய மருங்கிற் கொள்ளும் என்ப - (தொல். பொரு: 240)

என மங்கலச் சொற்கள் பற்றியும் கூறுகிறார்.


திருவள்ளுவர்வாழ்க்கைத் துணைநலம்எனும் அதிகாரத்தில்

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு - (குறள்: 60)

மங்கலம் என்றே கூறியிருக்கிறார். 


சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் இந்திரவிழாவுக்கு இந்திரனின் கோட்டத்தில் வானளாவப் பறக்கவிட்ட மங்கல நெடுங்கொடியை

மங்கல நெடுங்கொடி வானுற எடுத்து - (சிலம்பு: 5: 146)

என்றும்

கண்ணகி சிலைக்குகடவுள் மங்கலம்செய்யும்படி சேரன் செங்குட்டுவன் ஆணை இட்டதை 

“ ‘கடவுள் மங்கலம் செய்கஎன ஏவினான்”     - (சிலம்பு: 28: 233)

எனவும் காட்டுகிறார்.

மங்கலங்கள் குபேரனின் காலடியில் இருக்கிறன.

நம் முன்னோர்களான இவர்கள் ஏன் மங்களம் எனச்சொல்லவில்லை? பார்ப்போமா? மங்கலம், மங்களம் எனும் இரு சொற்களையும் பிரித்துப் பார்ப்போம்.

  1. மண் + கலம் = மங்கலம் எனப்புணரும். [மட்கலம் எனவும் எழுதுவர்] இதிலே கலம் என்பது குடத்தைக் குறித்தது. நம் முன்னோர்கள் குடத்தினுள்ளே விலைகூடிய பொருட்களை, நகைகளை, காசுகளை, மணிகளை, இரத்தினங்களை, முத்துக்களை, பொன்னை இட்டு வைத்தனர். அவர்களது செல்வம் மங்கலத்துள் இருந்தது.  ஐம்பது வருடங்களுக்கு முன்பும் யாழ்ப்பாண வீடுகள், தீவுப்பகுதி வீடுகள் சிலவற்றில்  உறியில் இருக்கும் பானைக்குள் நகைகளை, காசுகளை வைத்து எடுத்தைக் கண்டிருப்பீர்கள். அதனால் அது மனைக்கு மங்கலம் ஆயிற்று. மங்கலம் என்பது சிறப்பு, பொலிவு, அழகு, இன்பம், இனிமை எனப் பல கருத்துக்களைத் தரும் சொல்லாகும்.
  1. மண் + களம் = மங்களம் எனப்புணரும். இதிலேகளம்  இடத்தைக் குறிக்கும். பிங்கல நிகண்டு நஞ்சு என்ற கருத்தையும் தருகிறது. நெற்களம், வயற்களம், அடுக்களம் [சமையற்களம்], போர்க்களம் இவையாவும் களம் என்பது இடத்தைக் குறிப்பதையே காட்டுகின்றன.

இவற்றிலிருந்து நம் முன்னோர் ஏன் மங்கலம் என்றனர்  என்பதை நாம் அறியலாம்

மங்கலம் இலக்குமியின் கரத்தில்

செல்வத்தின் தலைவனான குபேரன் சிலையிலும் தலைவியான இலக்குமியின் கரத்திலும் அன்றேல் காலடியிலும் மங்கலப்  பொற்குடம் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்

மங்கல அடியாகப் பிறந்த சொற்கள் தமிழில் எத்தனை இருக்கின்றன என்பதை ஒருமுறை பட்டியல் இட்டுப்பாருங்கள் தெரியும். மங்கலமொழி, மங்கலவழக்கு, மங்கலவாழ்த்து, மங்கலச்சொல், மங்கலவணி, மங்கலநாண், மங்கலநாள், நாண்மங்கலம், வாள்மங்கலம், குடைமங்கலம், பூமங்கலம், கடவுள்மங்கலம்  என நீண்டு செல்கிறது. இவையாவும் மங்கலம் என்பதே சரியான கருத்தைத் தரும் சொல் என்பதைக் எடுத்துக் காட்டுகின்றன.

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment