Saturday 5 February 2022

கள்ளி என்னைக் கொல்லாதீர்! என்னில் அகிலுண்டு!!

leaflet Design by Elangkeeran


உலகெலாம் பரந்து வாழும் தமிழர்களே! யாழ் தீவகத்து மக்களே!! உங்கள் தாய் மண்ணை நினைத்து வாழும் புங்குடுதீவு உறவுகளே!!! கள்ளியாகிய என்னைக்  கொஞ்சம் வாழவிடுங்கள். என் இனத்தின் பெருமையும் புகழும் அறிவீர்களா? மனிதனே உலகில் தோன்றமுன் தோன்றி மலைகளை மண்ணாக்கியதில் என்னினத்திற்குப்  பெரும் பங்கு உண்டு. ஓரறிவாகிய தொடும் அறிவைமட்டும் உடைய என் இனத்தைப் பற்றி ஆறறிவு படைத்த உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமா?


உம்மை தெண்டனிட்டுக் கேட்கிறேன் கள்ளி என்னைக் கொல்லாதீர். இயற்கையின் படைப்பிலே மிக நுண்மையான பலவித நுட்பங்களைச் சேர்த்து படைக்கப்பட்ட இனம் எம்மினமே. எத்தகைய கொடிய வெய்யிலையும் தாங்கி நிலத்தடி நன்னீரை நிலமட்டத்திற்கு மேலே எடுத்து வருகிறோம். முருங்கைக் கல்லினுள் இருக்கும் நீரையும் உறிஞ்சி எடுத்து வளர்கிறோம். எம் வேர்களில் உள்ள அமினோ அமிலங்கள் கல்லை நெகிழவைத்து உடைத்து மண்ணாக்குகின்றன. அதனாலேயே உங்கள் ஔவைப்பாட்டியும்

“…………………………………… - நெட்டிரும்புப்

பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்

வேருக்கு நெக்கு விடும் - (நல்வழி: 83)

எனப்பாடினார். 

உங்களில் பலர் சிறுவயதில்ஆத்திசூடி’, ‘கொன்றைவேந்தன்’, ‘வெற்றிவேற்கைஎல்லாம் படித்திருப்பீர்கள். அதிவீரராம பாண்டியன்  [குலசேகர பாண்டியன் - புங்குடுதீவில் கோட்டைகட்டி வாழ்ந்தவன்] இயற்றிய வெற்றிவேற்கையில்

அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது

சுடினும் செம்பொன் தன்ஒளி கெடாது

அரைக்கினும் சந்தனம் தன்மணம் அறாது

புகைக்கினும் கார்அகில் பொல்லாங்கு கமழாது

கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது” 

                                                - (வெற்றிவேற்கை: 23 - 27)

இவை போல நல்லோர்களின் நற்குணம் என்றும் மாறாது என்று சொன்னான் அல்லவா! அதை விளக்க பால், பொன், சந்தனம், அகில், கடல் ஆகிய ஐந்தையும் கூறியுள்ளான். அகில் கட்டை புகைத்தாலும் கெட்டமணம் [பொல்லாங்கு] வீசாதாது என்றானே! அப்படி இருந்தும் என் மேல் ஏனிந்தக் கோபம்?


விளம்பி நாகனார் அகில் கள்ளியின் வயிற்றிலும் அரிதாரம் மான்வயிற்றிலும் முத்து கடலினுள்ளும் விளையும் நல்ல சான்றோர் பிறக்கும் குடியை யார் அறிவார்? எனக் கேட்டாரே!

கள்ளி வயிற்றின் அகில் பிறக்கும் மான்வயிற்றின்

ஒள்அரி தாரம்பிறக்கும் பெருங்கடல் - உள்

பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார் யார்

நல்ஆள் பிறக்கும் குடி  

                                                 - (நான்மணிக்கடிகை: 4)

நீங்கள் படித்ததுண்டா!


பழமொழி நானூறும், ‘தெளிந்த நீரருவி ஆரவாரிக்கும் மலைநாடனே! உனக்கு அறிவுரை சொல்வோர் கள்ளி போல தோன்றினாலும் அவரது சொல் காகம் கரைவதைப் போன்று இருப்பினும் எள்ளி நகையாடாதே, கள்ளியினுள் இருக்கும் அகில் போன்றும் காகம் நடக்கப்போவதைச் சொல்வது போலவும் [பறவைச் சோதிடம்] பெறுமதி உள்ளதாக இருக்கும். எளிதிற்பிடிக்க முடியாத உடும்பை நாய் பிடித்தால் பார்பனரும் தின்பர். எவருடைய வாயிலிருந்து வரும் நல்ல அறிவுரையை ஏளனம் செய்யாதே, முயற்சி செய்யாது உடும்பு தின்பது போல வீரம் இல்லாதவனும் நாட்டைப் பிடிப்பான்என்று சொன்னதை எவரும் சொல்லவில்லையா!!

கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்

எள்ளற்க யார்வாயின் நல்லுரையை - தெள்ளிதின்

ஆர்க்கும் அருவிமலை நாட நாய்கொண்டால்

பார்ப்பாரும் தின்பர் உடும்பு

- (பழமொழி நானூறு: 87)

செடியாக இருந்த கள்ளி வயதாக ஆக அதன் காழ் முற்றி அகிலாகும். அதனால் அகிலுக்கு காழ்வை என்ற பெயரும் உண்டு. இராமாயணத்தில் கம்பரும்

கள்ளியின் தாய் பிளந்து உக்க கார் அகில்களும்

எனப்பாடியுள்ளார். இப்படி எத்தனை புலவர்கள? கள்ளியில் இருந்தே அகில் பிறக்கும் என்பதை பதிவு செய்துள்ளனர். ஏன் இவை ஒன்றும் தெரியாமல் போனது?  கள்ளி என்னைக் கொல்லாதீர்!

புங்குடுதீவில் வெட்டி வீழ்த்தி இருந்த கள்ளி மரங்களில் ஒன்று 2020 

[Photo Credit goes to Saravanan]


மேலேயுள்ள படத்தில் என் நிலையைப் பாருங்கள். அதுவும் உங்கள் முன்னோர் பிறந்து காதல் மொழிபேசிய புங்குடுதீவில். ஏன் வேரோடு மரஞ்சாய்ந்து மண்ணோடு மண்ணாகக் கிடக்கிறேன்? உங்களுக்குச் செய்த தவறுதான் என்ன? என்னுள் அகில் இருப்பதை அறியாது JCPயால் மோதித் தூக்கி எறிந்துள்ளீர்கள். ஒரு தாயின் வயிற்றினுள் குழந்தை இருப்பதை அறியாமல் அவளை மோதிக் கொல்வதும் கள்ளி என்னைக் கொல்வதும் ஒன்றே. என்னுள் அகில் உண்டு!’ எனக்கதற கள்ளி மரமாகிய எம்மினத்திற்கு வாயுண்டா? வீழ்ந்து கிடக்கும்  கள்ளியின் வயிற்றினுள் அகிற்பிஞ்சுப் பிளவாக  இருந்ததேஅது முழுமையாக முற்றாததால் அதன் பிளவை எரிக்கும் போது மணமற்ற புகையே வந்தது. ஒரு தாய்வயிற்றில் இருக்கும் குழந்தையை இரண்டு மூன்று மாத ஊன்தடியாக எடுத்தால் கொஞ்சி மகிழமுடியுமா? நீங்கள் கொன்று சாய்த்திருக்கும் கள்ளியின் உள்ளே இருக்கும் அகில் பிளவு முற்ற இன்னும் 25 இருந்து 100 வருடங்கூட ஆகலாம். 


மேலை நாட்டு மோகத்தால் தமிழர்கள் தமிழைப் படியாது உங்கள் முன்னோர் சொன்னவற்றை அறியாதிருக்கிறீர்கள். பண்டைத்தமிழர் சொன்னவற்றின் உட்கருத்தை ஆராய்ந்து அறிந்திருந்தால் இன்று தமிழினம் உலகோடு சேர்ந்து கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலைமை வந்திராது. என்னுள் இருக்கும் அகிலில் antiviral properties இருக்கிறது எனக் கதற என்னால் முடியுமா? இயற்கையாக அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களைக் காக்கும் பொறுப்பு மனிதராகிய உங்களுக்கு இருக்கிறது. விலங்காயினும் மரமாயினும் அப்பொறுப்பு மாறாது. அதைவிட மனிதரின் நோய்தீர்க்கும் மருந்தாகப் பயன்படும் மரங்களைக் உமதுயிரைவிட மேலாக நினைக்க வேண்டாமா?


நீங்கள் மட்டுமல்ல 1970ம் ஆண்டுக்குப் முன்னர் தீவுப்பகுதியில் வாழ்ந்தோர் செய்த தவறால் உண்மையான கள்ளி வயிற்று அகிலை பார்க்க முடியாது இருக்கிறீர்கள். 1960ம் ஆண்டுக்குப் பின்னரே பல கல்வீடுகள், மதில்கள் தீவகப்பகுதியில் எழுந்தன. அதற்காக கள்ளியாகிய எம்மை அழித்தனர். அழிக்காதிருப்பின் கள்ளி வயிற்றிற்பிறந்த அகிலைக் கண்டிருப்பீர்கள். அது பல நோய்களைத் தீர்க்கும் மருந்தாகி இருக்கும்.

இன்றும் நீங்கள் விலை மதிப்பானவை என பவளம், முத்து, மாணிக்கம், வைரம், பொன், பட்டு போன்றவற்றைப் பாதுகாக்கிறீகள். அதுபோல் பண்டைத் தமிழர் சந்தனத்தையும் அகிலையும் விலைமதிப்பானவை என்றே கணித்தனர். அதனை சிலப்பதிகாரத்திலுள்ள  இந்திரவிழா எடுத்த காதையில்

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்து கடை அறியா

- (சிலம்பு: 5: 18 - 20)

என இளங்கோவடிகள் கூறுவதால் அறியலாம். 

அதாவது பட்டும் [தூசு], பவளமும் [துகிர்], ஆரமும் [சந்தனமும்], அகிலும், குற்றமில்லாத முத்தும், மணியும் அரிய அணிகலச்[நகைகள்] செல்வமெல்லாம் அளந்து அறியமுடியாத அளவிற்கு இருந்தனவாம். இளங்கோவடிகளது காலத்தில் விலைகூடிய பொருட்களோடு அகில் விலைப்பட்டுள்ளது. அக்கால கட்டத்தில் கிரேக்கரும் இத்தாலியரும் அகிலை மிகக்கூடிய விலைக்கு வாங்கியதே அதற்குக் காரணமாகும். கள்ளிவயிற்றில் பிறந்த அகில், கிட்டத்தட்ட ஐயாயிர வருடங்களாக மனிதர்களின் நோய்களுக்கு மருந்தாகப் பயனபட்டுள்ளது. 

கி மு 931ல் ஆண்டளவில் இஸ்ரேலின் பேரரசனான சொலமனுக்கு அரேபிய நாட்டு அரசி ஷீபா கொடுத்த காணிக்கையில் தமிழர் நிலத்தில் விளைந்த அகிலும் முத்தும் இருந்தன. அதற்கும் முன்பே தமிழர் கிரேக்கம், எகிப்து, இத்தாலி, பாபிலோனியா, சுமேரியா போன்ற பல நாடுகளோடு வாணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். எனினும் அகஸ்தஸ் (Agustus) காலம் கிமு 22 தொடக்கம் ஷீனோ (Zeno [Emperor]) காலம் கிபி 491வரை அந்த நிலைப்பாடு முதன்மை பெற்றிருந்ததை வரலாறு காட்டவில்லையா?

புங்குடுதீவில் 28/10/2020 அன்று நின்ற கள்ளி, இன்று நிற்கிறதா?

[Photo Credit goes to Saravanan]

கள்ளி இனங்களில் இயற்கையாகவே காணப்பட்ட  Natural bioactive compounds folic acid, glycosides, pyrocatechol போன்ற பல இராசனப் பொருட்கள், antiviral properties போன்றவை  அகிலில் இருந்ததால் மருத்துவத்திற்கு உதவியது. இரத்த சோகையால் வந்த கொடிய நோய்களைத் தீர்க்கும் மருந்தாகியது. அகிற்புகை முதுமையால் வரும் நரை, திரைகளை [தோல் சுருக்கங்களை] நீக்கி அழகிய நிறத்தைக் கொடுத்தது. அரசர்களும் செல்வந்தர்களும் போட்டிபோட்டு மிகவிலை கொடுத்து அகிலை வாங்கினர். அது பண்டைத் தமிழரின் பொருளாதாரத்தை வளர்த்தது. அவற்றையும் மறந்தீர்களா!

சிந்துபாத்ஆயிரத்தொரு இரவுஎன்ற நாடோடிக் கதையின் கதாநாயகன். அவன் சேரன் தீவை (இலங்கையை) சுற்றிச்செல்லும் போது தீவுப்பகுதியில் சங்கு அகிலை (Sanfu Aloes) வாங்கினான் என்றும் குமரி அகிலை (கன்னியாகுமரி அகில்) விட சங்கு அகில் நல்ல மணம் உடையது எனவும் அக்கதை சொல்கிறதே. நாடோடிக் கதையிற்கூட உங்கள் ஊரில் விளைந்த அகிலின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்திருக்கிறது? தீவகப் பகுதியில் அதிலும் புங்குடுதீவில் கள்ளியாறும் கள்ளிக்காடும் இருப்பதோடு திகழியில் கிடைத்த ரோம, சீன வணிக எச்சங்களும் புங்குடுத்தீவில் விளைந்த அகில் எனச் சொல்வதற்கு மேலும்  வலுச்சேர்க்கிறதே! ரோமரும் சீனரும் மருந்துக்காகவே கள்ளி அகிலை நாடினர். 

வீராமலையில் உற்பத்தியாகிய ஆறு, பெரிய கிராய், ஆம்பற்குளம் போன்ற குளங்களை நிரப்பி என்னினத்தின் கள்ளிக்காட்டின் ஊடாக ஓடியதால்கள்ளி ஆறுஎனப்பெயர் பெற்றதே. உலகெங்கும் இருந்த பண்டைய அரசுகள் கள்ளி ஆற்றங்கரையில் சங்கும் பவளமும் முத்தும் அகிலும் வாங்கிச் சென்றனவே.

1292 ADல் John of Montecorvino இலங்கையின் வடக்குப் பகுதியின் ஊடாக வரும் மரக்கலங்களில்[vessels] வருடத்துக்கு 60 மரக்கலங்களாவது கள்ளியாற்றின் ஊடாக[Agalloch channel] வரும்போது உடையும் என்றான். அப்படி உடைந்த மரக்கலங்கள் நயினாதீவில் திருத்தப்பட்டது. அதனாலேயே முதலாம் பராக்கிரமபாகு நயினாதீவுக் கல்வெட்டில்வாணிய மரக்கலங் கெட்டதுண்டாகில் செமபாகம் பண்டாரத்துக்குக் (எடுத்துக்) கொண்டு செமபாகம் உடையவனுக்கு விடக்கடவதாகஎன எழுதினான், தெரியுமா?

அகரு மரம் [இன்று உலகெங்கும் அகில் என்ற பெயரில் விற்கப்படுகிறது]


இவற்றையெல்லாம் நீங்கள் மறந்ததால் கள்ளியின் உண்மையான அகிலுக்கு என்ன நடந்துள்ளது அறிவீரோ? கள்ளியின் அகிலைப் புறந்தள்ளிவிட்டுஅகரு மரம்அதன் இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது. ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூச் சக்கரை இது தமிழர் பழமொழி அல்லவா! இதுபோல்அகிற்பிளவு இல்லா உலகிற்கு அகருமரம் மருந்தாகிறது.’ சிறு துண்டுகளாகக் கிடைக்கும் அகருக்கட்டை ஒரு கிலோ 5, 6 இலட்சம் இந்திய ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நன்கு முற்றிய சிறந்த மணமுள்ள அகருக்கட்டை ஒரு கிலோ 30 இலட்சத்திற்குக் கூடவும் விற்கப்படுகிறது. கள்ளியின் அகிலின் விலை எங்கே போகும் நினைத்துப் பாருங்கள். இதுவும் ஓர் இன அழிப்பே. என்னினம் அழிந்து கொண்டிருப்பதற்கு உங்கள் விழிப்புணர்வு இன்மையே காரணமாகும்.

எனினும் கள்ளியின் அகில் அன்றைய உலக மொழிகளில் எல்லாம் அதன் பெயரின் தாக்கத்தை விட்டுச் சென்றுள்ளது. பண்டைத் தமிழினம் முள்ளின் வீடு என்ற கருத்தில் அக்கு[முள்] + இல் = அகில் எனப் பெயர் வைத்தது.

தமிழ் (Tamil) - அகில் (ahil)

எபிரேயம் (Hebrew) - அகலிம் (ahalim)

கிரேக்கம் (Greek) - அகாலிகொன் (agallochon)

இலத்தீன் (Latin) - அகலோக் (agalloch)

மலாயம் (Malay) - அகலோ (agallo)

ஆங்கிலம் (English) - அலோ (aloe wood)

தெலுங்கு - அகில்/அகரு

மலையாளம் - அகில்

வடமொழி (Sanskrit) - அகரு (agaru)

இதிலே பாருங்கள் வடமொழி தவிர்ந்த பிறமொழிகள் அகில் என்ற பெயரின்  தன்மையை  தம் தம் மொழியில் இன்றும் வைத்திருக்கின்றன. வடமொழி கள்ளியின் அகிலை அகரு எனச்சொல்லவில்லை. வடமொழி சொல்லும்அகருமிக உயர்ந்து வளரும் ஒரு மரம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வளர்கிறது. இம்மர வைரத்துள் இருக்கும் பசை காய்ந்ததும் சம்பிராணி போல் மணக்கும். அந்த மணம் முற்றிய மரத்திலும் இருக்கும். அந்நாளில் ஊதுபத்திகளில் அகர்பத்தி செய்யப்பயன்பட்ட குச்சிகளைத் தந்தஅகருமரமே இன்று அகிலாக உலகில் உலாவருகிறது.

அதனை அகில் எனக்கூறி மெல்ல மெல்ல விற்று இன்று உலகம் தழுவி விற்கப்படுகிறது. அதனால் செல்வத்தில் சில நாடுகள் திளைக்கின்றன. அகில் மணத்திற்கும் அகரு மணத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வேறுபாடு உண்டு. மருத்துவத் தன்மையும் அப்படிப்பட்டதே. கள்ளி அகில் தீர்த்த நோய்களை அகரு நீக்குமா?   இவற்றை உலகிற்கு எடுத்துச்சொல்ல வேண்டிய பொறுப்பு தமிழினத்திற்கு உண்டு. அவர்கள் காசுக்காக எம்மினத்தை அழித்தனர் என்றால் நீங்கள் எதற்காக எம்மை வேரோடு வெட்டிச் சாய்க்கிறீர்கள்?

புங்குடுதீவின் இறுப்பிட்டி முதல் நடுவுத்துருத்திவரை கடந்த பத்துவருடத்தில் எத்தனை எத்தனை கள்ளியை கொன்றீர்கள்? திகழி, பெரியகிராய், சிறியகிராய், ஆம்பற்குளம் பகுதியில் நெற்பயிர் செய்கைக்காகக் கொன்றதெத்தனையோ? கோயில்கள் கட்டக் கொன்றதெத்தனையோ? விளையாட்டு அரங்குக்காக அழித்தது எத்தனையோ? கள்ளிக்காடு, கள்ளியாறு எங்கும் எம்மை வாழவிடாது அழிக்க உமக்கு எப்படி மனம் வந்ததோ? எம்மினம் உண்டாக்கித் தந்த மண்ணில் தவழ்ந்த நீங்கள் கண்மூடிக் கொண்டா எம்மைக் கொல்கிறீர்கள்?

leaflet Design by Elangkeeran

மீண்டும் கெஞ்சிக் கேட்கிறேன் கள்ளி என்னைக் கொல்லாதீர்!’ என்னைக் கொஞ்சம் வாழவிடுங்கள். நான் வாழ்ந்தால் என் இனம் வாழும். நீங்களும் உங்கள் தலைமுறையும் நோய் இன்றி வாழ்வாங்கு வாழ்வீர்கள். நீங்கள் வெட்டி, வீழ்த்தி, எரித்த பின்னும் என்னினம் கொஞ்சம் அங்கு நிற்கிறது. அவற்றைக் காப்பாற்ற வேண்டிய கடமை எல்லோருக்கும் உண்டு. தீவுப்பகுதி பிரதேச சபையினரும் இதனை முன்னெடுத்துச் செய்தல் நன்று. அவர்களால் அங்கிருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். தீவகத்தில் எஞ்சி நிற்கும் என் இனத்தைத் தேடிப்பார்த்து அவற்றில் laminate செய்யப்பட்ட தீவகத்து மக்களே! கள்ளி என்னைக் கொல்லாதீர்! உங்கள் கைகளில் காசைக் கொட்டித்தருவேன் என்ற மந்திரத்தை கட்டிவிடுங்கள். அம்மந்திரம் என்னையும் என் இனத்தையும் காப்பாற்றும்

A5 அளவில் அடித்தால் போதும். அதற்குப்  பெருஞ்செலவு ஆகாது. உங்கள் வருங்காலச் சந்ததி Virus நோய்களின் தாக்கம் இன்றி வாழும். கள்ளியுள் இருக்கும் அகில் virusக்கு மருந்தாகும். ஆதலால் கள்ளி என்னைக் காக்க இதனைச் செய்வீர்கள் என முழுமனதுடன் நம்புகிறேன். என்னைப் பற்றிய விழிப்புணர்வை உலகெங்கும் எடுத்துச் செல்லவேண்டியது தமிழர் கடனாகும். கள்ளியுள் இருந்த வைரத்தை அகில் என அழைத்து, உலகையும் என் பெயரால் அகிலம் என அழைக்கும் தமிழர்களே! கள்ளி என்னைக் கொல்லாதீர்.

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment