Sunday 6 February 2022

ஔவையார் உண்ட கல்யாணச்சாப்பாடு


இன்பத்தமிழ் மொழியை சங்கம் வைத்து ஆய்வுசெய்த பெருமை பாண்டிய அரசர்களையே சேரும். அவர்கள் தமிழ்ப் புலவர்களைப் பரிசில் கொடுத்துப் போற்றினர். அத்தகைய பெருமை மிக்க பாண்டிய வழிவந்த அரசனின் திருமணம் மதுரையில் நடக்க இருந்தது. அவன் தமிழை நன்கு கற்றுத் தேர்ந்தவன். அவனது திருமணத்திற்கு வருமாறு புலவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தான்.  


அத்திருமணத்திற்கு வருவோருக்கு உணவு, உறையுள் கொடுத்து வரவேற்கவும் வீதிகளை அலங்கரிக்கவும் வேற்று நாட்டு ஒற்றர்களைக் கண்காணிக்கவும் எனப் பலவகை வேலையாட்களை புதிதாக எடுத்திருந்தனர். அவர்களில் பலருக்கு கல்யாணத்திற்கு வருவோர்பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை.


திருமண நாள் அன்று மதுரை மாநகரே பெரும் விழாக்கோலம் பூண்டிருந்தது. பல வாசல் வழியாக திருமணமண்டபத்திற்குள் பேரரசர் முதற்கொண்டு ஆண்டிகள் வரை தத்தமது இருக்கையில் அமர்ந்து அங்கு நடந்த திருமணத்தைப் பார்த்து மகிழ்ந்தனர். பெரும் புலவர்களும் வந்திருந்தனர். உணவு நேரம் வந்தது. எல்லாத் திசைகளிலும் ஆங்காங்கே உணவு உண்ணும் மண்டபங்கள் இருந்தன. உணவருந்த எல்லோரும் எழுந்தனர். முட்டி மோதிக் கொண்டனர். புதிதாகச் சேர்ந்த வேலையாட்கள் உணவு உண்ணும் மண்டபங்களுக்கு திருமணத்திற்கு வந்தவர்களைத் தகுதிப்படி அனுப்பினர்.


வேலையாட்களின் கண்களே திருமணத்திற்கு வந்தவர்களின் தகுதியை அளந்தன. பாண்டிய அரசர்கள் எழுந்து தலைவணங்கும் புலவர்களில் ஒருவரான ஔவையாரின் தகுதியையும் அக்கண்களே அளவெடுத்தன. ஔவையார் சோழநாட்டிலிருந்து வெய்யிலும் பசியும் உடலை வாட்டி எடுக்கவும் காற்று புழுதியை வாரிக்கொட்டவும் நடையாய் நடந்து மதுரையை அடைந்தார்.  பாண்டியன் வழுதிமேல் இருந்த அன்பால் திருமணத்திற்கு வந்திருந்தார். 


ஔவையாரையும் அவரது தமிழறிவையும் அறியாத வேலையாட்கள் அவரை ஒவ்வொரு உணவு மண்டபமாகக் கைகாட்டினர். ஏனெனில் அவரது உடையும் வெண்பட்டாக இருந்த தலைமயிரும் புழுதியும் வியர்வையும் சேர்ந்து நிறம் மாறி இருந்தன. பசியுடலை வாட்டி எடுக்க திருமணத்திற்கு வந்திருந்த சனங்களோடு சனங்களாக மோதுண்டார். தகுதி அற்றவர்களோடு இன்னொரு வாசல் வழியாக வெளியே தள்ளப்பட்டார்

அங்கே தள்ளப்பட்டு வந்த இன்னொரு புலவர் ஔவையாரைப் பார்த்து நீங்கள் கலியாண உணவு உண்டீர்களா?” எனக் கேட்டார். 

உண்டேன்! உண்டேன்! உண்டேன்!” என்று மூன்று முறை சொன்னார். 

உண்டீர்களா!” என்றார் வியப்பாக.

அதற்கு ஔவையார் ஒன்றே ஒன்று நான் உண்ணவில்லை என்றார்.

அது என்ன?” என்று கேட்டார் புலவர்.


வண்டமிழைத் தேர்ந்த வழுதி கல்யாணத்து

உண்டபெருக்கம் உரைக்கக்கேள் - அண்டி

நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியினாலே 

சுருக்குண்டேன் சோறுண்டிலேன்.”

- ஔவையார் தனிப்பாடல்

நெருக்குண்டேன், தள்ளுண்டேன், நீள்பசியினாலே சுருக்குண்டேன் இந்த மூன்றையும் உண்டனான் சோறுண்டிலேன்என்றார். காலங்காலமாக வளமான தமிழ் அறிவுக்கு வரவேற்பில்லைப் போலும்.

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment