Monday 21 February 2022

தமிழ் என்றால் என்ன? அது எதைச் சொல்கிறது?

இன்று உலக தாய்மொழி நாள். இந்த நல்ல நாளில் தமிழ் எதைச் சொல்கிறது? என்பதை கூறலாம் எனக் கருதுகிறேன். உலகு எங்கும் வாழும் தமிழர் பேசும்மொழிதமிழ் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்மொழி பேசுவதால் தமிழ் இனம் என்ற வரையறையும் தமிழருக்கு இருக்கிறது. தமிழ் மிகத் தொன்மையான இலக்கண இலக்கியங்களைக் கொண்ட தாய்மொழி என்பதும் உலகம் அறிந்ததே. உண்மையில் 'தமிழ்' என்னும் சொல் எதைச் சொல்கிறது?  என்பதை தமிழர்களாக இருக்கும் எம்மில் எத்தனை பேர் அறிவோம்?

தமிழ் என்றால் என்ன? என்று முகநூல் அன்பர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அக்கேள்வியில் கர்நாடகம், கேரளம் என்னும் சொற்களின் பொருள் விளக்க வரலாறு உண்டு. தமிழகம் என்பதற்கு என்ன வரலாறு உண்டு? கருநாடகம், கேரளம் என்பவற்றைப் பார்த்து தமிழ் + அகம் = தமிழகம் என எழுதிக்கொண்டனர். +மி+ழ் எனப்பிரித்து தமிழ் என்றாலென்ன என்னச் சொல்வார்களா? என்று கேள்விக் கணைகளையும் அவர் எழுப்பி இருந்தார். தமிழ் அறிஞர்களால் அதற்கான விளக்கத்தை சொல்ல முடியாது என்பது அவரது கருத்தாக இருந்தது.

அவரது கேள்விகள் என்மனதை நெருடியதால் அவற்றுக்கான பதிலைக் கொடுத்திருந்தேன். எம்மைப்போல் ஓரளவும் தமிழை அறியாது வெளிநாடுகளில் பிறந்து வாழும் இன்றைய இளைஞர்களுக்காகவும் இவ்வாக்கத்தை எழுதுகிறேன். அதனால் கர்நாடகம், கேரளம் என்பவற்றின் பெயரைப் பார்த்தாதமிழகம்எனும் பெயரை தமிழர் என்றெழுதினர்? என்பதை முதலில் பார்ப்போம்.

இந்தியாவின் 'மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின்' கீழ் 1956ல் உருவாக்கப்பட்டதே இந்திய மாநிலங்கள். 1956ல் மைசூர் மாநிலம் என அழைக்கப்பட்ட பகுதி 1973ல்கருநாடக மாநிலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பழந்தமிழர் கருமை நிறமான மண் உள்ள நாடு எனும் கருத்தில் அப்பகுதியை கருநாடு என்று அழைத்தனர். ஆதலால் அது கருநாடகாம்/கருநாடகா ஆகியது. மலைச் சரிவு என்ற கருத்தில் தமிழர் சேரநாட்டை 'சேரளம்' என அழைத்தனர். சேரளமே 1956ல்கேரள மாநிலம் [கொச்சி, திருவாங்கூர், மலபார் மூன்றையும் சேர்த்து] எனப் பெயர் பெற்றது. 

ஆனால் இரண்டாயிரத்து ஐந்நூறு வருடத்திற்கு மேலான  பழமையுடைய சங்கத்தமிழ் இலக்கியங்கள் தமிழகம் எனும் பெயரை நன்கு பொதித்து வைத்திருக்கின்றன. குதிரை மலையை [ஊராக் குதிரை] ஆண்டபிட்டங் கொற்றன்என்பவனை பாடும் இடத்து புறநானூற்றில்

ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்

நறைநார் தொடுத்த வேங்கையங் கண்ணி

வடிநவில் அம்பின் வில்லோர் பெரும

கைவள் ஈகைக் கடுமான் கொற்ற!

வையக வரப்பில் தமிழகம் கேட்பப்

பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப்

பாடுப என்ப பரிசிலர் நாளும் - (புறநானூறு: 168: 14 - 20)


ஈழத்தின் மாந்தைக்கும் புத்தளத்திற்கும் இடையே இருக்கும் குதிரைமலை. 


என்கின்றார் சங்ககாலப் புலவர் கந்தப்பிள்ளைச் சாத்தனார். குதிரை மலைத் தலைவனே! இந்த உலகப் பரப்பில் தமிழகம் முழுதும் கேட்கும்படி பொய்மை பேசாத செவ்விய நாவை வளைத்து உன்னைப் புகழ்ந்து பாடுவர் என்கிறார்.

புறநானூறு மட்டுமல்ல பதிற்றுப்பத்து, அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவையும் தமிழகம் என்ற பெயரை பதிவுசெய்து வைத்துள்ளன. சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில்

இமிழ் கடல் வரப்பில் தமிழகம் அறிய

- (சிலப்ப்திகாரம்: 3: 37)

எனக் கூறும் இளங்கோவடிகள் காட்சிக்காதையில்தமிழ்நாடுஎன்று சொல்லவும் தவறவில்லை.

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய

இதுநீ கருதினை யாயின் ஏற்பவர் 

முதுநீர் உலகில் முழுவதும் இல்லை

- (சிலப்பதிகாரம்: 25: 165 - 167)

ஈராயிர வருடங்களுக்கு முன்பே தமிழகம், தமிழ் நாட்டகம், தமிழ் நாடு, தமிழ் கூறும் நல்லுலகம், செந்தமிழ் நிலம், செந்தமிழ் சேர் பன்னிரு நிலம் எனப்பல பெயர்களில் தமிழர் வாழ்ந்த நிலபரப்பை சங்ககால இலக்கண இலக்கியங்கள் பொறித்து வைத்துள்ளன.  

இயற்சொல்தாமே

செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி

தம்பொருள் வழாமை இசைக்கும் சொல்லே

                                                                - (தொல். எச்சவியல்: 394)

என்று தொல்காப்பியர் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன்பே தமிழ்மொழியின் இயற்சொல்லின் இலக்கணத்தை செந்தமிழ் நிலத்து [செம்மொழியாம் தமிழ்நிலத்து] இலக்கணமாகக் கூறிச் சென்றுள்ளார். 

அத்துடன் தமிழுக்கு செம்மொழி என்ற தகுதியை 2004ம் ஆண்டு கொடுத்தார்கள்.  அதனைச் சொல்லி நாம் மகிழ்வதும் ஒருவைகையில் எமது தமிழ்மொழியாம் தாய்மொழியின் பெருமையை அறியாமையே. தமிழை இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே செந்தமிழாக - செம்மொழியாக தொல்காப்பியன் செந்தமிழ் நிலத்து எனக் கூறிச்சென்றதை மறந்தே அப்பெருமை பேசுகிறோம்எனவே தமிழ் என்றால் என்ன?  என்பதைச்சற்று ஆராய்ந்து பார்த்தல் நன்றுதமிழ் என்பதை பண்டைய தமிழ் பேரறிஞர்கள் எல்லோரும் இனிமைநீர்மைஅழகுஅமுது எனச் சொல்லிச் சென்றுள்ளனர். இவையாவும்  தமிழின் பண்பைச் சுட்டி நிற்கும் பண்புப் பெயர்களே. 


ஆதலால் தமிழுக்கு தமிழ் என்ற பெயர் எப்படிவந்தது?  தமிழிலுள்ள பெரும்பான்மையான சொற்கள் காரணப்பெயரால் ஆனவை. தமிழ் என்பதும் காரணப் பெயரே. தமிழ் என்ற பெயரே தமிழின் தொன்மையை உலகின் மூத்த முதன்மொழி தமிழ் என்னும்  தன்மையைக் காட்டி நிற்கிறது. எனது தமிழறிவால் ஆராய்ந்து அறிந்ததை இங்கு கூறவிழைகிறேன். மேலே சிலப்பதிகாரம்

இமிழ் கடல் வரம்பில்

இமிழ் கடல் வேலி

எனக்கூற புறநானூறும்

தெண்ணீர்ப் பரப்பின் இமிழ் திரைப் பெருங்கடல்

- (புறநானூறு: 204: 5)

என்கிறது. கடலலையின் ஓசையை, ஒலியை இமிழ் எனச் சங்ககாலத் தமிழர் அழைத்ததை இவை காட்டுகின்றன.

இம் + இழ் = இமிழ்

இம் என்றால் இனிமை. இழ் ஒலி என்ற கருத்தை தருகிறது. இனிமையான ஒலி என்பதையே இமிழ் என்றனர்.


தம்மில் தம்மக்கள் அறிவுடமை மாநிலத்து

மன்னுயிர்க்கு எல்லாம் இனிது”                    - (குறள் 68)

என்கிறாரே திருவள்ளுவர். இதில் தம் என்பது தமது என்ற கருத்தை தருகிறது. 

தம் + இழ் = தமிழ்

தமது[தம்] ஒலி[இழ்] என்பதே தமிழ் ஆயிற்று. அதாவது தாம் எழுப்பிய ஒலி என்பதையே தமிழ் எனும் சொல் குறிக்கிறது. பிறமொழியைப் பார்த்து உண்டாக்கிய மொழியாக தமிழ் தன்னைப் பதிவுசெய்யவில்லை. தம் ஒலி என்றே தமிழ் உரத்துச் சொல்கிறது. அப்படித் தமிழ் தன் பெயரை முழங்கியும் தாய்மொழியாம் தமிழின் காரணப் பெயரை அறியாதவர்காளாக தமிழர்களாகிய நாம் இருப்பது பெருவியப்பாகும்! பல மொழிகள் இல்லாத இடத்திலிருந்தே தம் ஒலியாம் தமிழ்மொழி பிறந்திருக்கும். தமிழ் என்னும் பெயரே மூத்தமொழி தமிழ் என்பதை எடுத்துக் காட்டுகிறது. உலகத் தாய்மொழி நாளாம் இன்று எமது  தாய்மொழியாம் தமிழ்மொழி தாய்மொழியாகப் பல மொழிகளை பெற்று உகந்ததில் தமிழராகிய நாமும் பெருமை கொள்வோம்.

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment