Thursday 1 November 2018

வண்டூதிய சங்கு


தமிழின் சுவைகளில் சிறந்த சுவை கவிதைச் சுவை. அதனாலேயே தமிழைச் சுவைத்தோரை சுவைஞர் என்ற பெயரில் திருநாவுக்கரசு நாயனார் அழைத்தார் போலும். கவிதையின் சுவை கவிதைக்குக் கவிதை மாறுபடும். சொல், பொருள், சந்தம், உவமை அணிகள் போன்றவற்றால் வரும் இனிமை கவிதைக்குச் சுவையைத் தருகிறது. சிறந்தனவற்றை எடுத்துக்கூறும் கவிதைகளே என்றும் நின்று நிலைபெறுகின்றன.

நன்னூல் ஆசிரியரான பவணந்தி முனிவரும்
சொல்லால் பொருட்கிடனாக உணர்வின் 
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்   
                                                                         - (நன்னூல்: 268)
என்றார்.

உலக இயற்கையை அதுதரும் இன்பத்தை மிக நுட்பமாகப் பார்த்து வியப்போரும் சுவைதரும் கவிதைகளைப் புனைந்திருக்கின்றனர். ஒருவரின் ஆழ்மனத் தேடலின் உணர்வின் வெளிப்பாடே கவிதையாய் மலர்கின்றது. அத்தகைய கவிதை மலர்களை புகழேந்திப் புலவரும் நளவெண்பாவில் நிறையவே தந்திருக்கிறார்.  

பாண்டிய நாடு மல்லிகைக்குப் புகழ்பெற்ற நாடு. இன்றும் மதுரை மல்லிகையின் (மதுரை மல்லி என்பர்) மணத்திற்கு ஏதும் ஈடாகாது. நல்ல மதுரை மல்லிகைப் பூவை தலையில் சூடி இரண்டு மூன்று நாட்கள் சென்றாலும் கூந்தலில் அதன் நறுமணம் கமழ்ந்து கொண்டே இருக்கும். புகழேந்திப் புலவர் பாண்டிய அரசனின் அரசவையில் தலைமைப் புலவனாய் இருந்தவர். அவர் மல்லிகை, முல்லை பூக்களின் நறுமணத்தைப் பெரிதும் விரும்பினார். சோழ நாட்டில் சிறைப்பட்டிருந்த போதும் கூட சிறைக்குள்ளும் பூந்தொட்டியில் மல்லிகையை வளர்த்தவர்.

மேற்கே செக்கர் வானம் பட்டுக்கம்பளம் விரித்துக் கொண்டிருந்தது. இயற்கை எனும் சூரியன் மெல்லச் சாயும் அந்திப் பொழுதும் வந்தது. புகழேந்திப் புலவர் அதனைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார். மல்லிகைப் பூவின் நறுமணம் அவரை இழுத்தது. மெல்லத் திரும்பி முல்லைப் பந்தரின் அருகே இருந்த மல்லிகைச் செடியைப் பார்த்தார். அச்செடியில் தேன் பருக வந்த வண்டு வட்டமடித்து மல்லிகையில் அமர்ந்து ரீங்காரம் செய்வதைக் கண்டார்.

புகழேந்திப் புலவரின் கவி உள்ளத்தின் நெஞ்சிலே - ‘பகல் முழுவதும் பல வண்ண மலர்களில் தேனருந்திய வண்டு அல்லவா அது! மல்லிகை, முல்லை வெண்மலர்கள் விரிந்து மணம் கமழ, அந்தி மாலைப் பொழுது அரச கம்பீரத்துடன் மெல்ல நடந்து செல்கிறதேஎன்ற உணர்வலைகள் அலை மோதின. அவற்றின் வெளிப்பாடாய் பிறந்ததே இந்த வெண்பா.

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கரும்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப - முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது                                
                                                       - (நளவெண்பா: 106)

மல்லிகைப் பூவை வெண்ணிறச் சங்காய் தேன் வண்டு ஊதி முழங்க, வெண்கரும்பு வில்லை உடைய மன்மதன் (வெண் நிறத்தை தமிழில் வால் என்பர். வால் + கரும்பு = வான்கரும்பு எனப்புணரும்.  கரும்பின்  மேல் வெண்சாம்பல் இருப்பதால் வான்கரும்பு என்பர்)அம்புகளை தெரிந்தெடுத்துக் கொண்டு மெய்காப்பாளனாக பக்கத்தே வர, மென்மையான முல்லை மாலை தோளில் அசைய, சிறுபொழுதாகிய  மாலைக் கால (புன்மாலை) அந்திப்பொழுது மெல்ல நடந்து செல்கிறதேஎன்கிறார்.

புகழேந்திப் புலவரின் இப்பாடலைக் கேட்ட ஓட்டக்கூத்தர்பாடல் நன்றெனினும் கருத்துப் பிழை உண்டுஎன்றார். 

பக்கத்தே இருந்த புலவர்கள்என்ன கருத்துப் பிழையைக் கண்டீர்என்றனர்.

அதற்கு ஒட்டக்கூத்தர்வண்டு பூவின் விரிந்த பக்கத்தில் ஊதும். சங்கின் அடியில் ஊதியே முழங்க முடியும். வண்டால் பூவின் அடியில் ஊத முடியுமா?” என்றாராம்.

அதற்கு புகழேந்திப் புலவர்பகல் முழுவதும் பறந்து பறந்து எத்தனை மலர்களில் மது அருந்தி மதுமயக்கத்தில் இருந்த வண்டு. அதற்கு மல்லிகைச் சங்கின் அடியும் நுனியும் தெரியுமா?” என்றாராம். 

இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த குழோத்துங்க சோழனும் புகழேந்திப் புலவரைப் புகழ்ந்து பொற்கிழி கொடுத்தான் என்பர்.

புகழேந்திப் புலவர் பாடிய இவ்வெண்பாப் பாடல் 'தூதுவந்த நளனைக் கண்ட தமயந்தி அவனை நினைந்து வருந்தும்' மாலை நேரத்தைக் காட்டவே நளவெண்பாவில் வருகிறது. 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment