தாயக மண்ணை நினைத்திடும் - போது
சேயென துள்ளம் சிவக்கின்றதே
காயுள் கனியும் சுவை போல - என்
கருத்துள் கனிந்த காவியமே
தீயுன் உடலைத் தழுவிடுங்கால் - தீரா
துயரென் உள்ளம் தழுவியதே
தோயும் நினைவுச் சிற்றலையில் - நெஞ்சு
தீட்டும் துயரம் பற்பல காண்
படிக்கும் காவியச் சொற்களிலே - நின்
பருவ இனிமை மின்னலிடும்
துடிக்கும் எந்தன் உளங்கூட - உன்
தூய காதலில் தாளமிடும்
கடிக்கும் சுவை மாங்கனியுமே - இளங்
காலக் களிப்பை நினைவூட்டும்
வடிக்கும் ஓவிய வரியெல்லாம் - உந்தன்
வடிவ அசைவின் எழில்காட்டும்
இருளைக் கண்டே அஞ்சுகிறேன் - நின்
எழிலே இருளில் மிஞ்சுவதால்
கரிய கடலைக் காணுகையில் - சுழல்
காவிய விழிகளை மீட்டுகிறாய்
கருத்த வானைப் பார்த்திட்டால் - என்
கனவுத் துடிப்பின் தாரகையாய்
விரிந்தே கண்ணைச் சிமிட்டியெங்கோ - எனை
வாவென் றழைத்தே மறைகின்றாய்
பூரண நிலவின் பொற்கதிரில் - மது
பொங்கும் இளமைப் பேருருவாய்
தாரணி மகிழப் பண்மீட்டும் - ஓடை
தாளங் கூட்டும் இசையொலியாய்
சீரணிக் கனவின் கருத்தெனவே - என்றன்
சிந்தனைக் கவியின் உயிர்த்துடிப்பாய்
பாரினில் வாழ்ந்த உனைமீண்டும் - நான்
பார்த்து இரசித்து மகிழ்வேனோ!
No comments:
Post a Comment