குறள்:
“மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்” - 158
பொருள்:
மனச்செருக்கால் நீதி இல்லாத பெருங்கேடு செய்தாரை நீங்கள், உங்களது தகுதியால் வென்றுவிட வேண்டும்.
விளக்கம்:
இத்திருக்குறள் பொறை உடைமை என்னும் அதிகாரத்தில் எட்டாவது குறளாக இருக்கிறது. எதனையும் பொறுத்துக் கொள்ளல் பொறையுடைமையாகும். செருக்கின் மிகுதியால் நீதியில்லாதவற்றைச் செய்வோரை என்ன செய்யலாம் என்பதையே இக்குறள் சொல்கிறது. மனிதர்களுக்கு செருக்கு பலவழிகளில் வந்து சேர்கிறது. அதனை ஒருவித அறியாமை என்றும் சொல்லலாம்.
அது திடீரெனக் கிடைக்கும் பணப்பெருக்கம், பெரும் பதவி, கல்வி, அரசியல் செல்வாகு, ஆள், அடிமையால் வந்த வலிமை, சிறந்த நடிகன், கலைஞன், அறிஞன் எனும் எண்ணத்தால் வரும்பெருமிதம் போன்றவற்றால் உண்டாகிறது. பெரும்பாலும் சூழ்ந்திருப்போர் போடும் கூலக் கும்புடு அவர்களிடம் ஆணவத்தை வளர்க்கிறது. இவை மட்டுமல்ல ஒருசிலருக்கு இருக்கும் கயமை, பொறாமை, போன்ற குணங்களும் செருக்கடைய வைக்கின்றன.
மிகக்கூடுதலாக ஒருவரிடம் என்ன இருக்கிறதோ அதானல், அந்த மிகுதியால் வருவது இறுமாப்பு எனும் செருக்கு. அதன் காரணமாக தாம் யாருக்கும் எதனையும் செய்யலாம் என்ற எண்ணம் உண்டாகும். அச்செருக்கு நீதியில்லாத செயல்களைச் செய்ய வைக்கும். கொடுமை, கொள்ளை, கொலை போன்ற செயல்களை மிக்கவை என்கிறார். அப்படிச் செய்தோரையும் எமது பொறுமை என்ற தகுதியால் வெற்றி கொள்ளவேண்டுமாம்.
எம்மைவிட வலியோரை பொறுமையைக் கைக்கொண்டு அறிவால் வெற்றிகொள்ள வேண்டும்.
மனித வாழ்வியலுக்கு பொறையுடையாகிய பொறுமை மட்டும் இருந்தால் போதாது. அதனை ஆசாரக்கோவையில்
“நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லொடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியொடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து” - [ஆசாரக்கோவை]
எனக் கயத்தூர் பெருவாயின் முள்ளியார் மிக அழகாகச் சொல்கிறார்.
தமக்குப் பிறர் செய்த நன்மையை மறவாதிருத்தல், பொறுமை, இனிமையாகப் பேசுதல், எந்த உயிர்க்கும் துன்பஞ்செய்யாதிருத்தல், கல்வியையும், ஒப்புரவையும் மிக ஆழமாக அறிந்து வைத்திருத்தல், அவற்றால் அறிவு, நல்ல இயல்புடையாரோடு நட்பாக இருத்தலும் ஆகிய எட்டும் நல்லொழுக்கத்திற்கு வித்தாகுமாம். ஆதலால் பொறுமை பின்னால் வரும் பல துன்பங்களில் இருந்து எமைக்காக்கும்.
No comments:
Post a Comment