Monday 19 November 2018

திருவள்ளுவர் திருநாள் விழா எடுத்தோர்

              அநுராதபுரத்தில் நடந்த திருக்குறள் மாநாடு [திருவள்ளுவர் திருநாள்] மலர் 1955              

















  ஈழத்தில் வாழ்ந்த அறிஞர்கள் பலர் தமிழை வளர்ப்பதற்காகப பெரும் தொண்டாற்றியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் தமிழக அறிஞர்களுக்கு முன்னோடியாக விளங்கி இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக சி வை தாமோதரம்பிள்ளை, நாவலர் பெருமான் போன்றோரைச் சொல்லலாம். அவர்களைப்போல தமிழக அறிஞர்களுக்கு முன்னோடியாக விளங்கியவர் மாமனெல்லையில் வாழ்ந்த நமசிவாய முதலியார். அவர் மானிப்பாயில் பிறந்த போதும் கொழும்பு, கண்டி, மாமனெல்லை என வாழ்ந்ததால் அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் குடத்துள் விளக்காயின போலும்.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் உலகப் பொதுமறையாம் திருக்குறளைப் படித்து அதன்மேல் காதல் கொண்டோர் பலராவர். அந்தக் காதலால் ஒருசிலர் திருவள்ளுவரைப் புகழ்ந்துபாட சிலர் சிலை வைத்தனர். இன்றும் அது தொடர்கதையாகத் தொடர்கின்றது. ஆனால் தமிழரை, உலகை ஒன்று படுத்தவும்  பண்டைத் தமிழரின் பண்பாட்டை, நனிநாகரிகக் கொள்கையை உலகறியச் செய்யவும் திருக்குறளே சிறந்தது எனநமசிவாய முதலியார்எண்ணினார். 

அதனால் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் திருநாளான வைகாசி மாத அனுட நாளில்திருவள்ளுவர் விழாகொண்டாட முடிவெடுத்தார். ஏனெனில் 'திருமயிலையில் [மயிலாப்பூர்] உள்ள திருவள்ளுவர் திருக்கோயிலில் வைகாசி அனுடத்தை திருவள்ளுவர் நாளாகச் சிறப்பித்துக் கொண்டாடும்குறிப்பொன்று அவரது வீட்டிலிருந்த பழைய திருக்குறள் புத்தகத்தில் இருந்தது. அதனை ஆதாரமாகக் கொண்டுவைகாசி அனுட நாளைதிருவள்ளுவர் திருநாளாகக் கொண்டார். 

'திருவள்ளுவர் கழகம்' என்ற பெயரில் ஒரு கழகத்தை உருவாக்கி திருவள்ளுவர் விழாவை’ 1927ம் ஆண்டு வைகாசி மாதம் அனுட நாளில் 17ம் திகதி [17-05-1927] கண்டியில் கொண்டாடினார். அதற்கான விழா மலரும் வெளியிட்டிருந்தார். அவ்விழாகண்டிப் பெரகராவுக்குஅடுத்த நாள் நடைபெற்றது. அவ்விழாவுக்கு தமிழகத்திலிருந்து வடிவேலு செட்டியாரும் வந்திருந்தார். வடிவேலு செட்டியார் திருக்குறளின் பரிமேலழகர் உரைக்குத் தெளிவுரை எழுதியவர். அவர்களது முயற்சியால் தமிழ்நாட்டின் சில இடங்களிலும் அதே நாளில்திருவள்ளுவர் விழாகொண்டாடினர். நமசிவாய முதலியார் இறந்ததால் அவரது முயற்சி மெல்ல மறக்கப்பட்டது.  ஆனால் தென்காசி திருவள்ளுவர் கழகமும் திருகோணமலை திருவள்ளுவர் கழகமும்   புங்குடுதீவு வல்லன் திருவள்ளுவர் கழகமும் அதனை மறக்காது கொண்டாடியதாம். இக்கழகங்கள் 1927ல் தொடங்கப்பட்டவை. தென்காசி திருவள்ளுவர் கழகம் இன்றும் இயங்குகின்றது என நினைக்கிறேன். 

இலங்கையைச் சேர்ந்த நமசிவாயமுதலியாரே முதன் முதலில்[1927]ல் 'திருவள்ளுவர் விழாஎடுத்தவர் ஆவார். அதனால் எமக்கெல்லாம் முன்னோடியாய் வழிகாட்டியாய் திகழ்கிறார். இவரின் தந்தை மானிப்பாய் உலகநாதர் பரம்பரையைச் சேர்ந்தவர். தாயார் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரும் மறைமலை அடிகளும் தாய்வழி உறவு முறையினர். இவர் பஞ்சதந்திரம் போன்ற தமிழ், சமஸ்கிருத நூல்களை சிங்களத்தில் மொழி பெயர்த்தார். அதனால் 1901ல் மதுரைத் தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அச்சங்கத்தார் இவரை பலமுறை அழைத்து மதிப்பளித்தனர்.

இவரது காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த கா நமச்சிவாயமுதலியர் 1935ல் திருவள்ளுவர் திருநாள் கழகம்  ஒன்றை அமைத்து வைகாசி மாதம் 18ம் 19ம் திகதிகளில் [18, 19-05-1935] சென்னையில் திருவள்ளுவர் திருநாள் விழாவை நடாத்தினார். அதுவும் வைகாசி அனுடத்திலேயே கொண்டாடப்பட்டது. தமிழகத்து நமச்சிவாய முதலியாரின் முயற்சியால் கொண்டாடப்பட்டு வந்ததிருவள்ளுவர் திருநாள் விழாவும்கால ஓட்டத்தில் மெல்ல மங்கியது.

மீண்டும் இலங்கையில் திருவள்ளுவரைப் போற்றுதற்காகத் 'தமிழ் மறைக் கழகம் 1952ல் கொழும்பில் தொடங்கப்பட்டது. ‘தமிழ் மறைக்கழகம்வித்துவான் பண்டிதர் கா பொ இரத்தினம் அவர்களின் எண்ணத்தின் உருவம் அது. அவரும் பண்டிதர் மு ஆறுமுகனும் ஆண்டு தோறும் வைகாசி அனுட நாளில்திருக்குறள் மாநாடுஎன்ற பெயரில் திருவள்ளுவருக்கு விழா நடாத்தி வந்தனர். தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், பர்மா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ்  போன்ற இடத்தில் வாழ்ந்த தமிழரையும் ஒருங்கிணைத்து வைகாசி அனுட நாளை திருவள்ளுவர் திருநாளாக்க மிகப்பெரிய முயற்சி எடுத்து வெற்றியும் கண்டனர்.

தமிழ்மறைக் கழகத்தின்  முதலாவது 'திருக்குறள் மாநாடு' 28, 29, 30-05-1953ல் திருகோணமலை இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இரண்டாவதுதிருக்குறள் மாநாடு’ 16, 17, 18-05-1954ல் நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. மூன்றாவது திருக்குறள் மாநாடு 04, 05-06-1955ல் அனுராதபுர விவேகானந்தக் கல்லூரி மண்டபத்தில்  நடைபெற்றது. திருக்குறள் ஏட்டுச்சுவடியை கதிரேசன் கோயில் யானையின் அம்பாரியில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்த திருக்குறள் மாநாடு நடந்த பொழுது தமிழ்மறைக் கழக ஆட்சிமன்ற உறுப்பினராய் இருந்தோரே மேலே படத்தில் இருப்போர். அவர்களில் எத்தனை பேர் தீவுப்பகுதியைச் சேர்ந்தோர் என்பதை நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். 

அதில் இருப்பவர்களில் சுதந்திரன் ஆசிரியர் எஸ் டி சிவநாயகம், ஆசிரியர் சி சோதிநாதன் (எனக்கு ஏடு தொடக்கிய குரு), பண்டிதர் கா பொ இரத்தினம் (பேரனார்), பண்டிதர் மு ஆறுமுகன் (தந்தை), சி. நடராசா (பேரனார்), வித்துவான் சபாபதி, கு வி செல்லத்துரை (உறவினர்) போன்றோர் நான் குழந்தையாக இருந்த காலத்தில் இருந்தே என் மேல் அன்பைச் சொரிந்தோராவர். அவர்களது அன்பும் ஆசியும் நான் 'திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி' என்ற நூலை எழுதக் காரணம் எனலாம்.

அநுராதபுரத்தில் நடந்த மாநாட்டைப் பற்றி பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் இறந்த பொழுது, பண்டிதை சத்தியதேவி துரைசிங்கம் அவர்கள் (நீர்வேலி), "பண்டிதர் ஆறுமுகன் அவர்கள் எல்லோரையும் இன்முகத்துடன் வரவேற்றுத் தமது இல்லத்தில் உணவும் தங்குமிடமும் கொடுத்து உதவிய காட்சி இன்றும் மனக்கண் முன் நிழலாடுகின்றது. அவருடைய அருமை மனைவியாரும் அவருடன் சேர்ந்து அனைவரையும் உபசரித்தமை எல்லோருடைய மனத்தையும் கவர்ந்திருந்தது" என எழுதியிருந்தார். அதற்குப் பின்னர் அநுராதபுரத்தில் அத்தகைய ஒரு தமிழ்மாநாடு நடக்கவேயில்லை. இனி நடக்குமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 
    
                                                    1955

1955ம் ஆண்டு தமிழ் மறைக் கழகம் வெளியிட்ட 'திருவள்ளுவர் திருநாள் மலர்' முதற்பக்கத்தில் பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் எழுதியதை இப்படம் காட்டுகிறது. அவர் அதை எழுதி 65 ஆண்டுகள் ஆகியும் நம்மில் எத்தனை பேர் தமிழினத்தை ஒன்றுபடுத்தும் நாளாகிய வைகாசி அனுடத்தை ஒவ்வொருவர் வீட்டிலும் ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம்? இதற்காக பலநாட்டு தமிழறிஞர்களும் 1927ல் இருந்து பாடுபட்டு பாதுகாத்த நாளை குழி தோண்டி புதைத்துத்துள்ளோம்

வள்ளுவர் திருநாளை கருணாநிதிக்காக தை மாதத்திற்கு இழுத்துச் சென்றிருக்கிறோம். செல்லரித்துக் கிடந்த சங்க இலக்கியநூல் ஏடுகளை அச்சிட்டு தமிழ் அன்னைக்கு செழுமை சேர்த்தவர் உ வே சுவாமிநாதையர். அவரும் அவர் போன்ற பலரும் திருவள்ளுவர் வைகாசி அனுடத்தில் பிறந்து, மாசி உத்திரத்தில் முத்தியடைந்தார் என்று எடுத்துச் சொல்லியும் எம் காதுகள் கேட்காது இருப்பது ஏனோ! 1927ம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் திருவள்ளுவர் விழா வைகாசி அனுடத்தில் [கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக] கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. பழைய மெய்கண்டான் நாட்காட்டியிலும் [Calendar] வைகாசி அனுடமே திருவள்ளுவர் நாளாக குறிக்கப்பட்டிருந்ததை உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். எப்படி தை மாதத்திற்கு அந்நாள் மாறியது?

'திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டு' விழாவும் 'தமிழ்மறைக் கழகத்தின் பதினாறாவது' மாநாடும் கிளிநொச்சியில் 1969ல் வைகாசி அனுடத்திலேயே நடாத்தப்பட்டது. அம்மாநாட்டையும் பண்டிதர் கா பொ இரத்தினம் அவர்களும் பண்டிதர் மு ஆறுமுகன் அவர்களும் ஒன்று சேர்ந்தே மிகச்சிறப்பாக நடாத்தினர். அப்போது பண்டிதர் கா பொ இரத்தினம் அவர்கள் கிளிநொச்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். திருவள்ளுவர்  ஈராயிர ஆண்டு மலரில் பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் "வாழ்வில் துன்பந் தொடும் போதெல்லாம் அறிஞர்கள் வள்ளுவதேவரைச் சரணடைகின்றனர். அவர் திருவாய் மலர்ந்த ஆயிரத்து முன்னூற்று முப்பது அருந்தேன் குறள் மலரிலும் அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கின்றது. எமது குழந்தைகளும் சீரிய வாழ்வு வாழ வேண்டுமானால் வள்ளுவர் தந்த வான்மறையைப் போற்றி அதன்படி ஒழுகி எல்லா உயர்வுகளையும் அடைவார்களாக!" என எழுதியிருந்தார். 

தமிழ் மறைக்கழகம் தொடங்கிய நாளில் இருந்து நாடெங்கும் திருக்குறள் போட்டிகள் நடாத்தி பரிசுகள் வழங்கிய பெருமையும் இக்கழகத்திற்கு உண்டு. அதற்காகத் திருக்குறளைப் படித்தோர் பலராவர் "வான்மறை தந்த வள்ளுவன் வழி வாழ்ந்தால் தமிழர் வாழ்வாங்கு வாழலாம்" என எண்ணியே நம்முன்னோர் 1927ல் இருந்து திருவள்ளுர் விழா கொண்டாடினர். இன்று எத்தனை பேர் திருவள்ளுவரை நினைக்கிறோம்?

சிலப்பதிகாரத்திற்கு மட்டுமல்ல திருவள்ளுவருக்கு விழா எடுத்த பெருமையும் புங்குடுதீவாருக்கு உண்டு. புங்குடுதீவு வல்லனில் 1927ல் தொடங்கியதிருவள்ளுவர் கழகம்அங்கு இப்பொழுதும் இருக்கிறதா? அறிந்தவர்கள் எவராவது சொல்லுங்களேன்.
இனிதே,
தமிழரசி.

7 comments:

  1. அருமையான கட்டுரை. அரிய படம், தகவல்கள். தென்காசி திருவள்ளுவர் கழகம் 1927 இல் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2011 முதல் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன்.. உங்கள் கட்டுரையை உரிய நடவடிக்கை எடுக்க குறிப்புகளுடன் www.voiceofvalluvar.org காலை இல் பயன்படுத்திக் கொள்கிறேன். அனுமதி தர வேண்டும். voiceofvalluvar1330@gmail.com

    ReplyDelete
    Replies
    1. திருவள்ளுவர்திருநாட் கழகம், மயிலை திருவள்ளுவர் திருக்கோவிலில் இவ்விழாக்களை வழிபாடுடன் கொண்டாடி வருகிறது. கருணாநிதி செய்த வரலாற்றுப் பிழையை சரி செய்ய நீதிமன்றத்தை நாடியுள்ளது.

      Delete
    2. மிக்க மகிழ்ச்சி.

      Delete
    3. திருவள்ளுவர் நாளை வைகாசி என்று தேர்வு செய்தது ஆய்வு செய்யாத பிழை பல சில ஆண்டுக்கு முன்பு மையப்பூர் வனக்காடு பார்ப்பனர் குடியேறிய பிறகு தங்களுடையது என்று நிறுவ முயற்ச்சித்த வேலையில் தோல்வி கண்டனர் திருக்குறள் மாநாடு நடைபெற்றது என்ற தகவல் மிக்க மகிழ்ச்சி

      Delete
    4. திருவள்ளுவர் திருநாள் விழாமலரை download செய்து அறிஞர்கள் திருவள்ளுவர் நாள் பற்றி ஆய்வுசெய்தார்களா என்பதைப் பாருங்கள். மகிழ்ச்சி.

      Delete
  2. ஈழத்தில் பிறந்ததாக ஒரு கதையும் உண்டு

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதை நான் அறியவில்லை.

      Delete