Saturday 3 November 2018

எவர்களால் உலகம் வாழ்கிறது?



உலகம் என்பது என்ன? அதற்கான விளக்கமாக 
நிலம் தீ நீர் வளி விசும்பு ஓடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”         
                                                            - (தொல்:பொருள்:635) 
எனக்கூறும் தொல்காப்பியர், உலகம் என்பது நிலம், தீ, நீர், காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்களால் உண்டான கலவை என்கிறார். அப்படியானால் பொதுவாக நாம் கூறும் உலகம் என்பது என்ன? இந்தப் பூமிப்பந்தா? அல்லது அதில் வாழும் உயிர்களா? அன்றேல் அதில் வாழும் மனிதர்களா? பூமி ஒரு சடப்பொருள். அது இயற்கையாக அழிந்தால் அல்லாமல் மனிதரைப் போல் மற்றைய உயிர்களால் அதனை அழித்துவிட முடியாது. 

அதனால் நம்முன்னோர் உலகம் என்பதை மனிதரைக் கொண்டே கணித்தார்கள். அதிலும் உலக வழக்கத்தை, நடைமுறையை எத்தகைய மனிதரை வைத்துக் கணித்தார்கள் என்பதை
வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான”              
                                                              - (தொல்:பொருள்:638)
என்று அடிக்கோடிட்டுச் சொல்கிறார் தொல்காப்பிர். உலகவழக்கு என்பது உயர்ர்ந்தோர் மேலேயே தங்கியிருக்கின்றதாம். அதன் நிகழ்வுகள் அவர்களால் நடைபெறுகின்றனவாம். இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த தமிழருக்கு இருந்த அறிவுத் தெளிவு அப்படிச் சொல்ல வைத்தது. 

வள்ளுவரும்
பண்புடையார்ப் பட்டுண்டு உலகு அஃதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்”                         - (குறள்: 996)
என்றார். 

பண்பு என்றால் என்ன? மனிதத்தன்மைய அறிந்து ஒழுகல், உலக உயிர் நேயத்தைப் போற்றி பிறவுயிர் படும் துன்பத்தையும் தந்துன்பமாக உணர்ந்து போற்றுதல் பண்பாகும். அத்தகைய பண்பு மனிதரிடம் இல்லாவிட்டால் இவ்வுலகம் மண்ணுக்குள் மண்ணாகப் புகுந்து அழிந்துவிடும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார் வள்ளுவர். 

ஒன்றைச் சொல்வதற்கும் எழுதுவதற்கும் கூட எத்தகையோரைப் பார்த்து சொல்ல வேண்டும் எழுத வேண்டும் என்று தமிழ் இலக்கண நூலான நன்னூல் சொல்கிறது.
"எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே"          
                                                               - (நன்னூல்: 388)
அப்படிச் சொல்வதும் மரபே’ எனதுச்சுட்டி, பண்டைய மரபுவழியாக வருகிறது என்கிறார் நன்னூலார். அவர் கூறும் உயர்ந்தோர் யார்? 

எவர்களால் உலகம் வாழ்கிறது? என்பதைப் பேசும் இடத்தில் கடலுள் மாய்ந்த இள்ம்பெருவழுதி என்னும் அரசன்
உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்கு என முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே”   
                                                               - (புறாநானுறு: 182)
எனக் கூறுகிறான். அதாவது இந்திரருடைய அமிழ்தம் கிடைத்தாலும் இனிமையானது எனத் தாமே உண்ணார், சினம் கொள்ளார், பிறர் பயப்படுவதைப் பார்த்து தாமும் பயந்து சோம்பி இரார். புகழுக்காக உயிரையும் கொடுப்பர். பழிவருமானால் உலகம் முழும் கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளார். மனக்கவலை [அயர்வு] இல்லார். இப்படி மாட்சிமை உடையோராய் வாழ்வோர் உயர்ந்தோர் ஆவர். அவர்கள் தமக்கென எதுவும் செய்யாது பிறர்க்கென உண்மையாய் வாழ்வதால் இவ்வுலகம் வாழ்கிறதாம். 

இத்தகைய உயர்ந்த பண்பில் வாழ்ந்த நம் முன்னோர் எங்கே? நாம் எங்கே? எமது வருங்கால இளம் தலைமுறையினருக்கு எவற்றை விட்டுச் செல்லப் போகிறோம்? எத்தகையோரை மிகஉயர்ந்தோராய் மதிக்கவேண்டும் எனக் கற்றுக் கொடுக்கிறோம்? கொஞ்சம் சிந்தனை செய்து பார்ப்போமா? தற்போது இலங்கையில் என்ன நடைபெறுகிறது? உலகம் முழுவதையும் கொடுத்தாலும் வாங்க மாட்டோம் என்றா எமது அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்? 

அரசியல், சினிமா, கலை, விளையாட்டு, தொழிற்றுறை போன்றவற்றால் பணத்தைப் பெருக்கிய பணமுதலைகளையே உயர்ந்தோராய் மதிக்கிறோம். அவர்களைக் காணவும் அவர்களோடு selfie எடுக்கவும் எவ்வளவு பணத்தை அள்ளி இறைக்கிறோம். அவர்களை அழைத்து மேடை ஏற்றி அழகு பார்க்கிறோம். இவர்களில் எத்தனை பேரை உயர்ந்தோர் வரிசையில் வைத்துப் போற்ற முடியும்? என்பதை நாமே சிந்தனை செய்ய வேண்டும். உலக உயிர்நேயம் உள்ளவர்களால் உலகம் வாழ்கிறது என்பதை மறவாது இருப்போம்.

இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment