Monday 12 November 2018

குறள் அமுது - (138)


குறள்:
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை                            - 315

பொருள்: 
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தை தனது துன்பம் போல நினைத்துப் போற்றிக் காக்காதிருந்தால் அவனது அறிவினால் உண்டாகும் பயன் என்ன?

விளக்கம்:
இன்னா செய்யாமைஎனும் அதிகாரத்தில் வரும் ஐந்தாவது திருக்குறள் இது. மற்றைய உயிர்கட்குத் துன்பம் செய்யாது இருப்பதையே இன்னா செய்யாமை என்கிறார். எல்லோருக்கும் இருக்கும் பொதுவான அறிவைப்பற்றி இத்திருக்குறள் சொல்லவில்லை. அதற்கும் மேலே சென்று, மனிதப் பண்பின் தன்மையால் மெருகேற்றப்பட்ட அறிவுடையோரையே சாடுகிறார். மற்றைய உயிர்கள் படும் துன்பம் அல்லது வேதனையைபிறிதின்நோய்என்கிறார். 

அறிவினான் ஆதற்கு அறிவு வேண்டும். மனிதருக்கு உள்ளதாகக் கருதப்படும் பகுத்தறிவே மனிதரை அறிவினால் மேன்மையடையைச் செய்கிறது. ஆராய்ந்து அறியும் பகுத்தறிவு மனிதருக்கு மனிதர் வேறுபடும். அதுவே மனிதரில் சிலரை அறிஞராய் இனங்காணச் செய்கிறது. அப்படி அறிஞராய் மற்றோரால் இனங்காணப்பட்டு மதிக்கப்படுவோர் அல்லது தம்மைத் தாமே அறிஞர் என்று சொல்லிக் கொள்வோர் பிற உயிர்படுந் துன்பத்தை, தனக்கு வந்த துன்பமாகக் கருதவேண்டும்.

இதனையே இராமலிங்க வள்ளளார் மிக அழகாகவாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்எனப் பாடினார். பாருங்கள் பச்சைப் பயிர்கள் வாடியதைக் கண்டே அவர் மனம் துடித்திருக்கிறது. அத்தகைய துடிப்பு இருப்போராலேயே பிறவுயிர்கள் படும் வேதனையை அறிய முடியும். பயிர்கள் வாடும் பொழுது நீரூற்றிக் காப்பாற்றினால் அவை உயிர்வாழ்வதோடு பிறவுயிர்களையும் வாழ்விக்கும். பயிர்கள் வாடி காய்ந்து சருகாய் செத்து மடிந்த பின்பு அவற்றைக் காப்பாற்ற முடியுமா? 

உலகில் வாழும் புல், பூண்டு, புழு, பூச்சி, மரம், செடி, கொடி, பறவை, மிருகம், மனிதர் என  எந்த உயிரானாலும் அவைபடுந் துன்பத்தைத் தனது துன்பமாகக் கருதித் தக்க நேரத்தில் அவற்றைப் போற்றிப் பாதுகாப்பதே அறிவினால் ஆகும் பயனாகும். இல்லையேல் அந்த அறிவால் என்ன நன்மை உண்டாகும்? எனவே மற்றைய உயிர்களையும் எம்முயிர் போல் காத்து அறிவுடையோராய் வாழ்வோம்.

No comments:

Post a Comment