Friday 9 November 2018

இன்றும் புங்குடுதீவில் நிற்கும் புங்கைமரங்கள்



இரண்டாயிரத்து ஐஞ்ஞூறு ஆண்டுகளுக்கு முன்பே புங்குடுதீவின் புகழை உலகுக்கு பரப்பிய பெருமை இந்தப் புங்கை மரங்களையே சேரும்.  ஆனால் இன்றோ தீவார்களாகிய நாம் புங்கமரம் எப்படி இருக்கும் என்று அறியாதவர்களாக இருக்கிறோம். தற்போது இலங்கையும் மருந்துக்கு வேண்டிய புங்கம் எண்ணெயை சீனாவில் இருந்து பெற்றுக்கொள்கிறது. நாமும் அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி எனும் முதுமொழிக்கு இணங்க வாழ்கிறோம்.

இன்றைய புங்குடுதீவு, ‘உழவுஎன்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் 
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்"                                  - 1039
எனச் சொன்னது போல எம்மோடு ஊடலில் இருக்கின்றது. நிலச் சொந்தக்காரன் நிலத்தை போய்ப்பார்க்காது இருந்தால் நிலம் அவனது மனைவியை விட வெறுப்போடு அவனுடன் ஊடிவிடுமாம். இப்போது புங்குடுதீவுக்குப் போகும் போது எல்லாம் திருவள்ளுவரின் இந்தக்குறள் என் நெஞ்சில் அசை போடப்படுகின்றது. 

ஊடலில் இருக்கும் மனைவிக்கு விருப்பமானவற்றை வாங்கிக் கொடுத்து ஊடலைத் தவிர்ப்பது போல நம்மூர் செல்வந்தர்கள் கூடி கோயில்கள், வளைவு, அரங்கு  என்றெல்லாம் தேர் இழுக்கிறார்கள். ஆனால் புங்குடுதீவு என்னும் செல்லப் பெண்ணோ ஊடலை நிறுத்துவதாகத் தெரியவில்லை. அவள் விரும்புவது இயற்கையை. பசுஞ்செடி, கொடி, புல், பூண்டு, மரம், மயில், குயில், கோழி, கிளி, மைனா, குருவி, தேனி, வண்ணாத்திப்பூச்சி, செம்பகம், முயல், மான், ஆடு, மாடு எனத் தான் தாலாட்டி வளர்த்த இயற்கையை நினைத்து ஏங்கிக் துவண்டு கிடக்கிறாள். அவளுக்காக நீங்கள் கட்டும் எந்தக் கோயில்களோ கட்டிடங்களோ தொழிற்சாலைகளோ அவளின் ஊடலைப் போக்காது. புங்குடுதீவு எனும் எம் தாயவளின் நிலையில் இருந்து சிந்தியுங்கள். நானும் தாய் தானே!

ஆனால் நம் இளம் பிள்ளைகள் அறிவுத் தெளிவும் தேடுதலும் உள்ளவர்களாக இருக்கிறார்கள். புங்குடுதீவின் பழம் பெருமையை பொருளாதாரத்தை பசுமையை எப்படிக் கட்டி எழுப்பலாம் என்னும் ஆசையும் ஆர்வமும் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் விடாமுயற்சியுடன் தேடிய தேடலுக்குக் கிடைத்த வெற்றியே புங்குடுதீவில் நிற்கும் புங்கை மரங்கள். புங்குடுதீவின் பழமையை அறியும் ஆவலில் ஊர் முழுவதும் தேடி வல்லனில் புங்கை மரத்தை கண்டுபிடித்து அதனை video எடுத்து எனக்கு அனுப்பி வைத்த இளைஞர்களான தனுயனுக்கும் கிறிஸ்டிக்கும் எனது அன்பான வாழ்த்தைத் தெரிவிக்கிறேன். அவர்களின் தேடலும் தொண்டும் புங்கை போல் மணம் பரப்பட்டும்.

அவர்களின் எண்ணம் போல் புங்குடுதீவில் மீண்டும் புங்கை மரங்களை வளர்க்க வேண்டும். ஒரு பரப்பு நிலத்தில் 14, 15 புங்கை மரங்கள் வளர்க்கலாம். ஆறு மாதத்திற்கு மட்டும் தண்ணீர் விட வேண்டும். ஒவ்வொரு நாளும் விடவேண்டிய தேவையில்லை. தெரு ஓரங்களில், கோயில் வீதி ஓரங்களில் பாடசாலைகளில், வைத்தியசாலைகளில் எல்லாம் புங்கை மரத்தை நடலாம். நல்ல ஒட்சிசனும் குளிர்மையும் கிடைப்பதால் நோய் நொடி இன்றி வாழலாம்.
  • புங்கங் கன்றுகளை ஆடு மாடு கடிக்காது. 
  • நடும் புங்கங் கன்றுகளுக்கு கூடு அடைக்கத் தேவை இல்லை.
  • புங்கை மரங்களின் வேர்களில் வேர் முடிச்சுகள் இருப்பதால் காற்றில் உள்ள நைட்ரஜனை எடுத்து மண்ணை வளமாக்கும். 
  • மிகக்கூடிய அளவு ஒட்சிடனை வெளிவிடும் மரங்களில் புங்கையும் ஒன்று. அதனால் காற்றில் உள்ள காபனீரொட்சைட்டை அதிக அளவு உள்வாங்கிக் கொள்ளும். எனவே சுற்றுச் சூழலில் உள்ள காற்றை தூய்மையாக்கும். 
  • புங்கைமர இலைகள் குளிமையானதால் நிழலைக் கொடுத்து நிலத்தடி நீரைப் பாதுகாக்கும். நம்மூர்க் கிணறுகளில் நன்னீரும் ஊறும்.
  • வேர்கள் மணல் அரிப்பைத் தடுப்பதால் காற்றடிக்கும் காலங்களில் மண்ணை வாரி இறைக்காது.
  • பூக்கள் தேன் நிறைந்ததாய் இருப்பதால் தேனீ வளர்த்து தேனும் எடுக்கலாம்.
  • விதையில் இருந்து எண்ணெய் எடுத்து biofuel ஆகப் பாவிக்கலாம்.
  • எண்ணெய்யைப் பிரித்தெடுக்கும் போது வரும் புண்ணாக்கை நிலத்துக்கு உரமாகப் பாவிக்கலாம்.
  • மரத்திலிருந்து கட்டில், கதிரை, மேசை போன்ற வீட்டுத் தளவாடட்டுங்கள் செய்யலாம். புங்கை மரப்பலகையை பூச்சிகள் அரிக்காது.
புங்கை மரத்தைவிட கொஞ்சம் சிறந்தது புன்னை மரம். புன்னை மரமும் புங்குடுதீவில் நிற்கிறது. புன்னை மரத்தையும் ஆடு மாடு உண்ணாதுஅதன் எண்ணெய்யில் முச்சக்கரவண்டியும் ஓடும்.  புன்னை மரம் கடலினுள்ளும் வளரும். அது கடல் அரிப்பைத் தடுக்கும். அதன் கிளைகளில் ஏறி கடலில் குதித்து நீந்தலாம். ஆமைகள் மீன்கள் எல்லாம் அதன் நிழலில் விளையாடி மகிழும். 

இந்த இரு மரங்களும் மற்றவர்களிடம் கையேந்தாமல் நாம் நம்மூரின் பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ள உதவும். நாமே நமக்கு முதலாளிகளாக தலை நிமிர்ந்து சுகமாக வாழலாம். புங்குடுதீவுத் தாயவளும் பசுமை போர்த்திச் செல்வத்தில் திளைப்பாள். நாமும் நம் தாயவளின் குளிர் முகத்தைக் கண்டு மகிழலாம்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment