உலக உயிர்கள் வாழ உணவு தேவை. அந்த உணவுக்காக பிற உயிர்களைக் கொல்லக்கூடாது என்பது நம் முன்னோர்கள் கண்ட அறம். அதனை நாம் மீறலாமா?
"கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்"
என்பது வான்மறை தந்த வள்ளுவன் வாக்கு. அப்படியிருக்க நாம் தொழும் தெய்வமே பன்றிக்குட்டியை எரித்தார் என்றால் நீங்கள் நம்புவீர்களா! தெய்வம் எரித்தால் அது அறமாகுமா?
சிவன், தாய்ப்பன்றி ஒன்று இறந்த பொழுது அப்பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுத்தார். இக்கதை திருவிளையாடற் புராணத்தில் ‘பன்றிக் குட்டிகளுக்கு முலை கொடுத்தபடலத்தில்’ இருக்கிறது. அப்படிப்பட்ட சிவன் பன்றிக்குட்டியை எரிக்கலாமா?எதற்காக பன்றிக்குட்டியை எரித்தீர்? எனக் காளமேகப் புலவர் கேட்கிறார்.
"கண்ண னிடுங்கறியும் காட்டுச்சிறுத் ரொண்டரன்பிற்
பண்ணுசிறு வன்கறியும் பற்றாதோ - தண்ணோடு
மட்டியையுஞ் சோலை மருதீச ரேபன்றிக்
குட்டியையேன் தீய்த்தீர் குறித்து?"
- காளமேகம் தனிப்பாடல்
தண்மையான தேன்[மட்டு] நிறைந்திருக்கும் சோலையை உடைய மருதூரின் ஈசனே! கண்ணப்பநாயனார் இட்ட இறைச்சியும் திருச்செங்காட்டங்குடி[காட்டு] எனும் ஊரில் வாழ்ந்த சிறுத்தொண்டநாயனார் சமைத்துக் கொடுத்த பிள்ளைக்கறியும் [சிறுவன்கறியும்] உமக்குக் காணாதோ[பற்றாதோ]! என்ன காரணத்திற்காக பன்றிக் குட்டியை எரித்தாய் [தீய்த்தீர்]? இதுவே காளமேகப் புலவரின் கேள்வி.
எனது சிறுவயதில் இப்பாடலை படித்த பொழுது ‘சிவனுக்கு இறைச்சிக் கறியில் பேராசையோ’ என நினைத்தேன். ‘சிவன் வேடுவனாகத் திரிந்த போது பன்றிக்குட்டியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டாரா? என்று என் தாயைக் கேட்டேன்.
‘எங்க பார்த்தீங்க?’ என்றார்.
‘காளமேகப் புலவர் பாடல்’ என்றேன்.
பாடலைப் பார்க்காமலேயே ‘மகள்! அது காட்டுப் பன்றிக்குட்டி இல்லை. அது தேவலோகப் பன்றிக்குட்டி’ என்றார்.
"தேவலோகத்தில் காராம்பசு இருக்கிறது, அங்கு பன்றி இருக்கா?" என்றேன்.
‘வைகுண்டத்தில் வாழ்கிறது’ என்று என்னைக் கொஞ்சியபடி,
‘வைகுண்டத்தில் வாழும் திருமால் எடுத்த பத்து அவதாரத்தில் ஒன்று பன்றி அவதாரம் [வராக அவதாரம்]. திருமாலின் பிள்ளை மன்மதன். மன்மதனே அந்தப் பன்றிக்குட்டி. மன்மதனைச் சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்து எரித்த கதையை பாடியிருக்கிறார். பன்றியைக் கொன்றால் அதன் தோலை உரிக்க முடியாது. அதனால் பன்றியின் தோலில் உள்ள மயிரை நெருப்பில் பொசிக்கி எடுப்பார்கள். மன்மதனை நெற்றிக் கண்ணால் தீய்த்தது, பன்றியின் தோலை தீய்ப்பதற்கு சிலேடையாக வருகிறது’ என்றார்.
வசைபாடக் காளமேகம் என்ற பெயருக்கு ஏற்ப கண்ணப்பன் கொடுத்த இறைச்சியும் சிறுத்தொண்டரின் பிள்ளைக்கறியும் உண்ட ருசியில் ‘பன்றிக்குட்டியையும் எரித்தீரோ’ என்ற ஐயப்பாடு “பற்றாதோ” என்ற கேள்வியில் தொக்கிநிற்கிறது.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment