Wednesday, 10 May 2017

குறள் அமுது - (134)


குறள்:
நாச்செற்று விக்குமேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்                               - 335

பொருள்:
நாக்கு அடங்கி விக்கல் எழுவதற்கு [இறப்பதற்கு] முன் நல்ல செயல்களை விரைவாகச் செய்யவேண்டும்.

விளக்கம்:
இத்திருக்குறள் நிலையாமை என்னும் அதிகாரத்தில் ஐந்தாவது குறளாக இருக்கிறது. மனித வாழ்க்கையின் நிலை இல்லாத தன்மையைப் பற்றி இவ்வதிகாரத்தில் திருவள்ளுவர் எடுத்துச் சொல்கிறார். கல்விச்செல்வமோ பொருட்செல்வமோ எது இருந்தாலும் பின்னர் கொடுப்போம் என்று காலம் கடத்தாமல் இல்லாதோருக்கு அள்ளிக் கொடுக்க வேண்டும். வாழ்க்கை நிலையற்றதாதலால் நன்மைகளை விரைந்து செய்தல் நன்று.

சங்க காலத்தில் அரசாண்ட புகழ்மிக்க சோழ மன்னர்களில் நலங்கிள்ளியும் ஒருவன். அவன் போர் புரிவதிலும் அதனால் கிடைக்கும் வெற்றியில் மகிழ்வதிலும் ஈடுபாடு உள்ளவனாக இருந்தான். பாடல் இயற்றும் ஆற்றல் மிக்க புலவனாகவும் விளங்கிய அவனுக்கு, உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற சங்கப்புலவர், நிலையாமையைச் சுட்டிக்காட்டி, அறச்செயல்களில் ஈடுபடச்சொன்ன புறநானூற்றுப் பாடலில் ஒன்று:

"தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும் 
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும் 
அறியா தோரையும் அறியக் காட்டித் 
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து 
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் 
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி 
அருள வல்லை ஆகுமதி''

"நலங்கிள்ளியே! வளர்ந்தது ஒன்று குறையும்; குறைந்தது ஒன்று பின் வளரும்; பிறந்த ஒன்று இறக்கும்; இறந்த ஒன்று பின் பிறக்கும். கல்வியறிவு அற்றவர்களும் அந்த உண்மையை அறியச்செய்ய வானில் நிலவு தோன்றியும் மறைந்தும், வளர்ந்தும் தேய்ந்தும் நிலையாமையைப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது. எனவே, வறுமையால் வருத்தமுற்று வந்தோர்க்கு, பசியால் உட்குழிந்த அடிவயிற்றைப் பார்த்துப் பொருளை வாரி வழங்கி அருள்புரி என்கிறது.

சேர்த்த பொருளை 'வறுமையில் வாடுவோருக்குக் கொடு!' என  அரசனுக்குச் சொல்லும் புலவர் உலகின் நிலையற்ற தன்மையை எடுத்துச் சொல்தோடு நின்றுவிடவில்லை. உயிர்கள் மட்டுமல்ல இவ்வுலகமும் நிலையற்றது. ஆதலால் இவ்வுலகில் பொருளை குவித்து வைக்காமல் பிறருக்கு வழங்கி நன்மை புரிக என்று அறிவு புகட்டுகிறார்.

பிறந்த உயிர்கள் யாவும் இந்தெந்த வயதில் இறக்கும் என்ற உறுதிப்பாடு இல்லை. ஆறிலும் சாவு வரலாம். நூறிலும் வரலாம். ஆதலால் நற்செயல்களை செய்யக்கூடிய நேரங்களில் முதலிலேயே செய்தல் வேண்டும் என்பதனையே இத்திருக்குறள் வலியுறுத்துகிறது.

No comments:

Post a Comment