Sunday 7 May 2017

நாயனையார் நட்பு வேண்டும்


இந்த உலகில் வாழும் மனிதர் யாவரும் இனம், நிறம், மதம், பண்பாடுகளால் மாறுபடுகின்றனர். எனினும் நண்பைப் பேணும் தன்மையில் அந்த மாறுபாட்டினைக் காணமுடியாது. அத்துடன் இளமை, முதுமை என்ற வயதெல்லையோ ஆண், பெண் எனும் வேறுபாடோ நட்புக் கொள்வதற்குத் தடை போடுவதில்லை. இரத்த உறவைக் கைகழுவுவோர் கூட நட்பைக் கைவிடார். அந்த அளவுக்கு நண்பு மனித மனங்களைப் பிணைத்து வைக்கிறது. நட்பெனும் பிணைப்பில் கட்டுண்டோர் நாடுவிட்டு நாடு வெகுதூரத்தில் வாழினும் அவர்களது நட்பு என்றும் அழியாது.

இத்தகைய உயர்வான நட்பில் கூட நல்ல நட்பு, தீ நட்பு, கூடா நட்பு எனப் பலவகை உண்டு. நட்பில் உள்ள இவ்வேறுபாடுகளைத் திருவள்ளுவர் ஐந்து அதிகாரங்களில் [79 - 83] ஆராய்ந்து கூறியுள்ளார். அவை நட்பின் ஆழ அகலங்களை அறிந்து கொள்ள எமக்குத் துணை செய்கின்றன. தீய நட்புக்கும் கூடா நட்புக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? தீ நட்பு என்பது தீய குணமுள்ளோர், அறிவில்லாதோர், செல்வம் உள்ளபோது நட்பாகவும் அது இல்லாதபோது விலகிசெல்வோர் போன்றோருடன் கொள்ளும்  நட்பாகும். கூடாநட்பு அது நெஞ்சில் வஞ்சனையும் தம் தேவைக்காக உதட்டில் தேனுமாக நடிப்போரது நட்பாகும்.

பன்றிக் குட்டிகளுடன் சேர்ந்த கன்றும் சேற்றில் கிடந்து புரளும். அதுபோல் மனிதனும் சார்ந்ததன் வண்ணமே. எனவே எப்படிப்பட்டோரின் நட்பை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் தாம் கண்ட அநுபவத்தால் அறிந்து கூறியுள்ளனர்.

யானை வலிமை மிகுந்தது. உருவத்தில் பெரியது. ஆனால் நாய் வலிமை அற்றது. யானையுடன் ஒப்பிடும் பொழுது உருவத்தில் மிகவும் சிறியது. நாம் நட்புக் கொள்வதற்கு யானையா? நாயா? சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடமே உண்டு. யானை வன்மம் கொண்டது. அது தனக்கு உணவளித்துப் பாதுகாத்த பாகனையே அடித்து மிதித்துக் கொல்லும். நாய் நன்றியுள்ளது. வளர்த்தவன் எறிந்த வேல் அதன் உடலில் பாய்ந்திருந்தாலும் தன் வாலைக் குழைத்து அவனது காலடியில் கிடக்கும். எனவே நாய் போன்றோரின் நட்பை அணைத்துக் கொள்ளவேண்டுமாம்.

“யானை அனையார் நண்புஒரீஇ நாயனையார்
கேண்மை தழீஇக் கொளல்வேண்டும் யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்”                             
                                             - (நாலடியார்: 213)

எத்தகையோரின் நட்பைப் பேணிப் பாதுகாக்கவேண்டும் எப்படிப்பட்டோரின் நட்பைக் கழற்றி விடவேண்டும் என்பதை இந்த நாலடியார் பாடல் எடுத்துச் சொல்கிறது. 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment