பார்க்கும் இடம் எங்கும் ஆவாரஞ்செடி மஞ்சள் பூசி முகம் மினுக்கி பூத்துக் குலுங்கி நின்றது. அந்த இடத்திற்கு காளமேகப் புலவர் வந்தார். புலவரைக் கண்ட அந்த ஆவாரம் தோட்டத்து சொந்தக்காரன் ‘பொன்னாவரை இலை காய் பூ’ இவற்றை வைத்து ஒரு வெண்பா பாடும்படி கேட்டான். காளமேகப்புலவரும் உடனே ஏட்டையும் எழுத்தாணியையும் எடுத்து
“உடுத்ததுவு மேய்த்ததுவு மும்பர்கோன் றன்னால்
எடுத்ததுவும் பள்ளிக் கியையப் - படுத்ததுவும்
அந்நா ளெறிந்ததுவு மன்பி னிரந்ததுவும்
பொன்னா வரையிலைகாய் பூ”
- (காளமேகம் தனிப்படல்: 31)
என எழுதிக் கொடுத்தார். வெண்பாவை வாசித்தவனுக்கு எதுவும் விளங்கவில்ல. அவர் மீண்டும் பாடலை பிரித்து எழுதிக் கொடுத்தார். ‘இப்போது படித்துப்பார் புரியும்’ என்றார்.
“உடுத்ததுவும் மேய்த்ததுவும் உம்பர்கோன் தன்னால்
எடுத்ததுவும் பள்ளிக்கு இயையப் - படுத்ததுவும்
அந்நாள் எறிந்ததுவும் அன்பின் இரந்ததுவும்
பொன் ஆ வரை இலை காய் பூ”
படித்துப் பார்த்தான் புரியவில்லை. ‘என்னங்க புலவரே! நான் சொன்ன சொற்களுக்கும் உடுத்ததுவுக்கும் மேய்த்ததுவுக்கும் என்ன தொடர்பு? யார் உடுத்தா? யார் மேய்த்தா? நீங்க எழுதிய வெண்பாவின் கருத்தை சொல்லுங்க’ என்றபடி தன் தலையைச் சொறிந்தான்.
உடுத்தது - பொன்
மேய்த்தது - ஆ [பசு]
உம்பர்கோன் தன்னால் எடுத்தது - வரை [மலை]
பள்ளிக்கு இயையப் படுத்தது - இலை
அந்நாள் எறிந்தது - காய்
அன்பின் இரந்தது - பூ
திருமால், பொன்னாலான பீதாம்பரம் என்னும் பட்டை உடுத்தவன். கிருஷ்ண அவதாரத்தில் ஆ - பசுக்களை மேய்த்தவன். தேவர்களின் அரசனான இந்திரன் மழையைப் பொழிவித்த போது உயிர்களைக் காக்க வரையை - கோவர்த்தனமலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்தவன். பிரளயத்தின் போது ஆல் இலையில் பள்ளி கொண்டவன். கன்றை சிறு தடிபோல[குணில்] எறிந்து விளாங்காய் பறித்தவன். வாமன அவதாரத்தில் தானே விரும்பிச் சென்று மாபலியிடம் பூவுலகை இரந்து பெற்றவன்.
காளமேகம் சொன்னதைக் கேட்டதும் ‘இவ்வளவும் திருமாலானவர் செய்தாரா! நான் வளர்க்கும் இந்த ஆவாரஞ்செடி பற்றி தெரிந்து கொள்ள நினைத்தேன். ஆவாரஞ் செடியுக்குள்ள திருமாலையே வைத்துவிட்டீங்க’ என்றான்.
ஆவாரஞ் செடி என்று பொன்னாவரையைச் சொல்வர்.
இனிதே,
தமிழரசி.
தமிழரசி.
No comments:
Post a Comment