Wednesday, 24 May 2017

குறள் அமுது - (135)


குறள்:
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்                                     - 420

பொருள்:
செவியில் சுவையை உணராது வாயில் சுவையை உணரும் மனிதர் இறந்தாலும் வாழ்ந்தாலும் என்ன?

விளக்கம்:
இத்திருக்குறள் கேள்வி எனும் அதிகாரத்தின் பத்தாவது குறளாகும். நாம் பிறரிடம் கேட்கும் கேள்விகளைப் பற்றி வள்ளுவர் கூறவில்லை. காதால் கேட்டு அறியும் கேள்வி ஞானத்தையே வள்ளுவர் கேள்வி என்கிறார். 

அவர் இத்திருக்குறளில் மனிதர் சுவைத்து உணரும் இருவேறுவகை சுவைகளைப்பற்றிச் சொல்கிறார். ஒன்று செவிச்சுவை. மற்றது வாய்ச்சுவை. வாய் இனிப்பு, புளிப்பு, உறைப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய அறுசுவையையும் சுவைக்கும்.  செவியால் அப்படிச் சுவைக்க முடியுமா என்றொரு கேள்வி இங்கு எழுகின்றது. மகிழ்வான சொல்லைக் கேட்டு  மகிழ்வதும் கெட்ட சொற்களைக் கேட்கும் போது அருவெறுப்பதும் அதட்டினால் கோபப்படுவதும் திட்டினால் அழுவதும் மானம் இழக்க நேரிடும்போது எரிமலையாய் வெடிப்பதும் எப்படி நிகழ்கின்றன? நாம் கேட்பவனவற்றை செவி சுவைக்க நம் மனநிலை வேறுபடுகின்றது.

வாயின் சுவையை நாக்கு எப்படி சுவைக்கிறதோ அப்படி காதின் சுவையை மனம் சுவைக்கிறது. செவிச்சுவை எமக்கு அறிவை வளர்க்கிறது. வாயின் சுவை உடலை வளர்க்கிறது. மனித வாழ்வுக்கு இவ்விருசுவையும் தேவையே. 

ஆனால் திருவள்ளுவரோ இக்குறளில் சுவையை செவியால் உணராது வாயால் உணர்வோரை ‘மாக்கள்’ என அழைத்து செவிச்சுவைக்கு முதன்மை கொடுத்துள்ளார். அது ஏன்? தாய் தந்தையரோ, நண்பர்களோ, ஆசிரியர்களோ, பிறரோ, எமக்குத் தெரியாதவற்றைச் சொல்வதைக் கேட்கக் கேட்க - செவியால் சுவைக்கச் சுவைக்க எமது அறிவு வளரும். அறிவு வளர வளர சரி பிழை தெரிந்து வாழ்க்கையை நன்கு சுவைத்து வளமாக்கலாம். அதுபோல் அன்பாக அவர்கள் தருவதை உண்ண உண்ண - வாயால் சுவைக்க சுவைக்க  உடல் பெருக்கும். உடல் பெருக்கப் பெருக்க பலவகை நோய்கள் வந்து  ஆட்கொள்ளும். இருந்த இடத்திலேயே இருக்க வேண்டிய நிலை வரலாம்.

அதனால் வாய்சுவைக்கு முதன்மை கொடுப்போரை மாக்கள் என்றார். பகுத்தறிவில்லா மனிதர்களையும் விலங்குகளையும் மாக்கள் என்பர். விலங்குகள் போல உணவை மட்டும் சுவைத்து உண்டு வாழ்வதால் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் வேறுபாடு இருக்காது என்ற கருத்திலேயே மாக்கள் என்று அழைத்துள்ளார். மனிதனாய்ப் பிறந்து விலங்கைப்போல் உண்டு வாழ்வோர் இறப்பினும் வாழினும் என்னாகும்? எதுவித வேறுபாடும் இருக்காது.

விலங்குகிலிருந்து மனிதநிலைக்கு உயரவேண்டுமானால் சுவையைச் செவியால் உணருங்கள் என்கிறார்.

No comments:

Post a Comment