Thursday 18 May 2017

முள்ளி வாய்க்கால் எங்குமே!


முள்ளி வாய்க்கால் எங்குமே
          மோனநிலை கலையுதே
அள்ளி வீசும் காற்றுமே
          அனலையள்ளி வீசுதே

வெந்த நெஞ்சம் யாவுமே
          வேதனையில் மாளுதே
பந்த பாசம் யாவுமே
          பாறிமெல்லப் போனதே

கிள்ளிப் போட்ட குண்டுமே
          கொத்துக்குண்டாய் ஆனதே
கொள்ளித் தீயாய்ச் சிதறியே
          கொழுந்துவிட்டு எரிந்ததே

வெள்ளி முளைக்கும்  நேரமே
          விண்ணதிரப் பாய்ந்துமே
பள்ளி கொண்ட பாலரை
          பதைபதைக்க கொன்றதே

துள்ளி வந்த எரியுமே
          துடிதுடிக்க மாய்த்ததே
தள்ளி நின்ற பனையுமே
          தன்கதையைச் செப்புதே

செத்த உடல் மீதமே
          செய்திபல சொல்லுதே
கத்து கடல் ஓதமே
          தத்திநின்று கதறுதே

முள்ளி வாய்க்கால் எங்குமே
          முழங்குதே வாய்மையே
அள்ளி வீசும் காற்றுமே
          அன்பைக்கொஞ்சம் காட்டுமா!
                                        
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
முள்ளிவாய்க்காலுக்கு 2015ல் சென்ற பொழுது எழுதியது.

1 comment:

  1. உலகில் மே-18 ஆம் நாள்

    ஈழத் தமிழர் உறவுகள்

    முள்ளிவாய்க்காலில்

    செந்நீர் (குருதி) வெள்ளத்தில் மூழ்கிய போதும்

    உலகமே இரங்காத நாள்! - ஆயினும்

    ஈழத் தமிழரின் உண்மை நிலையை

    உலகம் எங்கும்

    ஆழப் பதித்த நாள்!

    ReplyDelete