Saturday 28 March 2015

குறள் அமுது - (104)

குறள்:
“செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்”                     - (குறள்: 637)

பொருள்:
நூல்களை நன்கு கற்று, நாம் செய்யும் செயலை எப்படிச் செய்வதென்று அறிந்திருந்தாலும் அப்போது நடக்கின்ற உலக நிலைமையை அறிந்தே செய்யும் செயலைச் செய்ய வேண்டும்.

விளக்கம்:
இந்தத் திருக்குறள் அமைச்சு என்னும் அதிகாரத்தில் இருக்கிறது. ஓர் அமைச்சர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை இக்குறள் சொல்கிறது. அமைச்சருக்குச் சொன்னது எமக்கும் பொருந்தும். 

மனிதர் உலகை ஆராய்ந்து கண்டு அறிந்தவையும் அப்படி அறிந்து உருவாக்கிய பொருட்களும் செயற்கை ஆகும். மனிதர் தமது அறிவால் ஆராய்ந்து கண்டறிந்தவற்றை நூல்கள் - சொல்வதால் செயற்கை என்னும் சொல் இத்திருக்குறளில் நூல்களைச் சுட்டி நிற்கின்றது.

ஒரு நாட்டைன் அரசியற் தலைமையைவிட அமைச்சருக்கு ஆழ்ந்த அறிவு இருக்கவேண்டும். அமைச்சர் அறிவு உள்ளவராக இருந்தாற்றான் தலைவர் செய்யும் செயல்களால் வரும் நன்மை தீமைகளை எடுத்துச் சொல்ல முடியும். இரண்டு வகைகளால் நாமும் எமது அறிவை வளர்க்கலாம். அதற்கு நல்ல நூல்களையும் உலகையும் படிக்க வேண்டும். இக்குறளில் செயற்கை என்று நூல்களைப் படிப்பதைச் சொல்லும் திருவள்ளுவர் இயற்கை என்று உலக இயல்பைப் படிப்பதைச் சொல்கிறார். 

ஒவ்வொரு மனிதரிடமும் இயற்கையாகவே பகுத்தறிவு இருக்கின்றது. எனினும் திருவள்ளுவர் உலக இயல்பை - இயற்கையின் செயல்பாட்டை அறிந்தே ஒன்றைச் செய்ய வேண்டும் என்கின்றார். நாம் எவ்வளவுதான் ஆராய்ந்து கற்று, பலதுறைகளில் கரைகண்டிருந்தாலும் இயற்கையை மனிதனால் வெல்ல முடியாது.. எங்கோ மூவாயிரம் மைல்களுக்கு அப்பால் உண்டான சுனாமி வந்து எம்நாட்டை அழிக்கலாம். எமது பக்கத்து நாட்டில் பறவைக் காச்சலால் மனிதர்கள் இறக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு நமெக்கென்ன என்று இருந்துவிட முடியாது. பறவைக் காச்சல் எமது நாட்டிற்குள் பரவமுன் அதனை தடுக்கும் வழிகளைஅறிந்து செயற்படுத்த வேண்டும்.

எப்படியெல்லாம் ஆராய்ந்து கற்று இருந்தாலும் இயல்பாக - இயற்கையாய் உலகில் மாறுகின்ற பொருளாதாரம், போர், அரசியல் போன்ற உலக நடைமுறைகளை உடனுக்குடன் அறிந்தே செயல்படவேண்டும் எனக்கூறும் குறள்.

No comments:

Post a Comment