Monday, 6 April 2015

தெய்வ அருளும் வரும் தரும்

- எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன் - 


“எத்தனை தான் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத் தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவை போல்
மெய்த் துயர் வீட்டாவிடினும் வித்துவக் கோட்டமா என்
சித்தமிக உன்பாலே வைப்பன் அடியேனே”

இது நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம். பெரியாழ்வார் முதலாய ஆழ்வார்கள் செய்த பக்திப்பாடல்களின் திரட்டில் ஒன்று, குலசேகர ஆழ்வார் பாடியது.

வான் [முகில்] - ஆகுபெயர். வான் - மழை - வானிலிருந்து வழங்கப்படுவது. வான்மழை, எத்தனை தான் மறந்தாலும் - எவ்வளவு காலம் பெய்யாது வைத்து மறந்து போயினும் பயிர்களோ மொய்த்து [பைங்கூழ்களோ மைத்து] மாமுகில் வரும் - வரும் - பெய்யும் -பெய்யும் - வாழ்வோம் - வாழ்வோம்  என்று எப்போதும் வானத்தைப் பார்த்து நிற்பினுமாம். பைங்கூழ்கள் - பசியபயிர்கள். 

ஆண்டவனுடைய அருள் கிட்டாவிடினும் கிட்டும் - கிட்டும் - கிடைக்கும் - கிடைக்கும் என உயிர்கள், பயிர்கள் மழைபார்த்திருப்பது போல் இறைவனையே நினைத்துப் பார்த்துப் பார்த்து இருப்பினுமாம்.

“எத்தனை தான் வான் மறந்த காலத்தும்” என்ற தொடர் எவ்வளவு ஆற்றல் வாய்ந்தது. வான்மழை நீண்ட காலத்திற்கு மறந்து போனாலும் வானால் - வான்மழையால் கிடைக்கும் பயனப்பெறும் பைங்கூழ்கள் சலிப்பதில்லையாம். “பார்த்திருக்கும்” பெய்யும் பெய்யும், துளிவிழும் துளிவிழும் என்று பார்த்திருப்பினுமாம். அவற்றின் நம்பிக்கை வீண்போவதில்லை. வான் ஒருநாள் அவற்றை வாழ்விக்க இரைந்து கொண்டு, விரைந்து கொண்டு ஓடிவந்து  விடுமாம்.

தெய்வ அருளும் அப்படியே வரும் தரும். பயமேன்! வான்மழையாம் தெய்வ அருளுக்குக் காத்துக்கிடந்து, அவ்வருளைப் பெற்ற அருளாளர்கள் எத்தனையோ கோடியுளர். 

இராமாயனத்தில் கம்பன் பல நூற்றுக்கணக்கான இடங்களில் சிவபெருமானை எடுத்து ஆண்டிருக்கின்றான். தனது வலிமை என நினைத்து கைலையங்கிரியை  இராவணன் தூக்கவில்லையாம். எனது அப்பன் எனக்கு எவ்வளவு இலேசாக இருப்பார் என எண்ணி, எடுக்க, அந்தமலை அண்டமுகட்டில் முட்டும் அளவுக்கு உயர்ந்ததாம். தன் கைகளால் அந்த அளவுக்கு உயர்த்தினானாம். மெத்த இலேசாக உயர்த்தினான் என்கின்றார் கம்பர். அதற்குக் காரணம் சிவன். அவனது மந்திர சக்தியினால் அவன் நினைத்த அனைத்தையும் செய்ய உதவியாய் இருந்திருக்கிறார். சிவன் அருளாலேயே அவன் மலை எடுத்தான்.

அகத்தியர் இராவணனிலும் பக்தியில் உபாசனையில் கூடியவர் ஆதலால் அவரை இராவணனால் வெல்ல இயலவில்லை. இவ்வாறே வாலியாரும் சிவ உபாசனையில் இராவணனிலும் முன்னுக்கு இருந்தபடியால் வாலியாரையும் இராவணனால் வெல்ல முடியவில்லை. அவனது சகலவெற்றிக்கும் பெருமைக்கும் சிவ வழிபாடே காரணமாய் இருந்தது.

இராவணனைக் கொன்று அயோத்தி செல்ல நேர்ந்த போது ‘வீரகத்தி’ தோஷம் இராமனைத் தொடர்ந்தது. அதனை எவ்வாறு நீக்கலாம் என இராமேஸ்வர அந்தணர்களுடன் ஆலோசனை செய்த போது ‘ஒரு சிவன் கோவில் கட்டி, சிவலிங்கப் பிரதிட்டை செய்து ‘வீரகத்தியை’ அடக்கம் செய்ய வேண்டும்” என்றார்கள். அவர்கள் சொன்ன படியே இராமன், இராமேஸ்வரத்தில் சிவன் கோவில் கட்டி, வீரகத்தியையும் ஒரு கிணற்றில் அடக்கம் செய்தான். ஒரு சிறு கிணற்றின் வாய்ப்புறம் இன்றும் அடைத்து மூடப்பட்டுள்ளது. இராமனும் சிவபக்கனாக இருக்கலாம். ஆதலால் தான் இராவணனைக் கொன்றான். இது இராமாயணம் சொல்லும் கதை.


No comments:

Post a Comment