சங்ககாலப் பெண்கள் உடலில் கீறிய தொய்யில்
[Photo from: Crafty Nitti ]
கடந்த சில வருடங்களாக ஈழத்து நாட்டுப்பாடல்களை ‘ஆசைக் கவிதைகள்’ என்ற பெயரில் எனது வலைத்தளத்தில் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இப்போது நம் தமிழ் மூதாதையர் எழுதிய கவிதை வகைகளுள் ஒன்றான ‘சித்திரக் கவிதைகளை’ எழுதி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.
இயல் இசை நாடகம் எனும் முத்தமிழின் இயற்றமிழ் தந்ததே கவிதைகளாகும். பாடப்படுவது பாட்டு, செய்யப்படுவது செய்யுள். கவிதை = கவி + தை. கவி என்றால் புலவன், தை என்றால் கட்டுதல். கவி என்று அழைக்கப்படும் புலவன் கட்டியதே கவிதை. சங்ககாலத்தில் கவி என்ற சொல்லால் புலவர்கள் அழைக்கப்படவில்லை.
சங்ககாலத்துக்குப் பின்பு கவி புனைவோரை நான்கு வகையாகப் பிரித்து வைத்துள்ளனர்.
1. ஆசு கவி - எதைப்பற்றியும் கொடுத்த உடனேயே கவிதை எழுதுவோன்.
2. மதுர கவி - படிப்போர் உள்ளம் மதுரம் [அமிழ்தம்] போல் இனிக்க கவிதை எழுதுவோன்.
3. சித்திரக் கவி - சித்திரத்துக்குள் கவிதை எழுதுவோன்.
4. வித்தாரக் கவி - மிக விரிவாக முத்தமிழையும் சேர்த்து கவிதை எழுதுவோன்.
தொல்காப்பியர் கூறும் இருபது வண்ண வகைகளில் சித்திரவண்ணம் என்று ஒருவகை இருக்கிறது. அந்த சித்திர வண்ணச் செய்யுள்களை பண்டைத்தமிழர் சித்திரத்துள் எழுதினார்களா என்பது தெரியவில்லை. ஆனால் திருஞானசம்பந்தர் தேவாரத்தில் சித்திர கவிதை வகைகளில் ஒன்றான மாலை மாற்றைக் காணமுடிகின்றது.
தமிழ் செய்யுளின் அணியிலக்கணத்தைக் கூறும் தண்டியலங்காரம், முத்துவீரியம் ஆகிய இலக்கண நூல்கள் சித்திரக் கவிதை பற்றிய விளக்கத்தை தருகின்றன. தண்டியலங்காரம் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் எழுதியது என்பர்.
பண்டைய பெண்கள் தமது தோள்களிலும் மார்பிலும் நெற்றியிலும் முதுகிலும் எழுதிய தொய்யிலில் [இன்று நாம் போடும் மருதாணி - Henna] தம் காதலர்களுக்கு சித்திரக் கவிதை எழுதி இருக்கிறார்கள். 9ம் நூற்றாண்டின் முடிவில் வாழ்ந்த திருத்தக்கத்தேவர் எழுதிய சீவகசிந்தாமணி அதனைச் சொல்கிறது. மற்றவர்களுக்குத் தெரியாமல் காதல் கவிதையை சித்திரக் கவிதையாக எழுதினர் போலும். அத்துடன் முற்றத்தில் இடும் கோலங்களான நாக பந்தம், ரதபந்தம், முரச பந்தம் மாலை மாற்று, போன்றவற்றுள்ளும் சித்திரக் கவிதையில் காதலர்களுக்கு செய்தி சொல்லியிருக்கிறார்கள். அதனால் தமிழரின் சித்திரக் கவிதை மரபு அழிந்து போகாது பெண்களே காப்பாற்றினார்கள் என்றும் சொல்லலாம்.
தண்டியலங்காரம்
“கோமூத்திரியே கூட சதுர்த்தம்
மாலைமாற்றே எழுத்து வருத்தனம்
நாகபந்தம் வினா உத்தரமே
காதைகரப்பே கரந்துறைச் செய்யுள்
சக்கரம் சுழிகுளம் சருப்பதோ பத்திரம்
அக்கரச்சுதகமும் அவற்றின் பால” - [தண்டியலங்காரம்: 98]
என்று சித்திரக்கவி பற்றிச் சொல்கிறது. அதாவது கோமூத்திரி, கூடசதுக்கம், மாலைமாற்று, எழுத்து வருத்தனம், நாகபந்தம், வினாவுத்தரம், காதைகரப்பு, கரந்துறை செய்யுள், சக்கரபந்தம், சுழிகுளம், சருப்பதோபத்திரம், அக்கரச்சுதகமும் சித்திரக்கவிதை வகையைச் சேர்ந்தது என்கின்றது.
முத்துவீரியம்
“ ஏக பாதம் எழுகூற் றிருக்கை
காதை கரப்பு கரந்துறைச் செய்யுள்
கூட சதுக்கம் கோமூத் திரிமுதல்
தெரிந்து பாடுவோன் சித்திரக் கவியே”
என்று கூறுகின்றது.
தண்டியலங்காரம், முத்துவீரியம் இரண்டிலும் ‘கோமூத்திரி’ என்று ஒருவகை சித்திரக் கவிதை சொல்லப்பட்டுள்ளது. என்ன! கோமூத்தரியா? அது என்ன என்பதை அடுத்த சித்திரக் கவிதைத் தொடரில் சொல்கிறேன்.
அடுத்த சித்திரக் கவிதை தொடரிலிருந்து எனது சித்திரக் கவிதையைத் தருவதோடு அதனை எப்படி எழுதுவது என்ற விளக்கத்தையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தருகிறேன்.
இனிதே,
தமிழரசி.
சித்திரக் கவி ‘சட்கோண பந்தனம்’ வாசிப்பது எப்படி எனத் தெரிந்து கொள்ள விழைகிறேன். ஒரு கவி என் தந்தையைப் பற்றி வரைந்து எழுதிய சித்திரக் கவி ‘சட்கோண பந்தனம்’ - வெண்பா என்னிடம் இருக்கிறது.
ReplyDeleteவ.க.கன்னியப்பன்