Monday 2 March 2015

குறள் அமுது - (102)


குறள்:
“காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு”          - (குறள்: 122)

பொருள்:
பொருளைப் போல அடக்கத்தைக் காக்கவேண்டும். உயிருக்கு, அதைவிட மிகப்பெரிய சொத்து எதுவுமே இல்லை. 

விளக்கம்:
இத்திருக்குறள் அடக்கம் உடைமை என்னும் அதிகாரத்தில் உள்ளது. கோபத்தை, ஐம்புல ஆசைகளை அடக்கி அவற்றுக்கு நாம் அடிமைப்படாது - அடக்கம் உடையோராய் அடங்கி இருந்தால் அடக்கம் எமக்கு உடைமையாகும். எது எமக்கு உரிமையாய் இருக்கிறதோ எதுவே எமது உடைமை.

எமது வாழ்க்கையின் பெரும்பகுதி உணவு, உடை, வீடு, நகை எனப் பொருட்களைத் தேடி எமக்கென்று பாதுகாத்து வைப்பதிலேயே கழிந்து போகின்றது. எம்மிடம் உள்ள பொருட்களை பல வழிகளில் பாதுகாக்கிறோம். நம் உடலை மழை, வெய்யில், பனி, காற்று போன்றவற்றில் இருந்து பாதுகாக்க வீட்டினுள் வாழ்கிறோம். நம் வீட்டை கள்வனிடம் இருந்து காப்பாற்ற பூட்டால் பூட்டி வைத்தும்,  பாதுகாப்புக் கமெரா[camera] பொருத்தியும் போதாதென்று திருடர்க்கான எச்சரிக்கை மணியும்[Burglar alarm] போடுகிறோம். உணர்வும் உயிரும் இல்லாத வீட்டை எப்படியெல்லாம் போற்றிப் பாதுகாக்கிறோம் பார்த்தீர்களா? கள்வனிடம் இருந்து வீட்டைப் பாதுகாக்க இவ்வளவு செய்கிறோமே! உணர்வும் உயிரும் உள்ள எம்மைப் பாதுகாக்க என்ன செய்கிறோம்?

எந்த நேரமும் தொலைக்காட்சியைப் பார்த்துப் பார்த்து கண்ணைக் கெடுக்கின்றோம். மனதை அடக்காது காதல் வசப்பட்டு காதலில் உருகி எம்மையே தொலைக்கின்றோம். பொருள் பொருள் என்று ஓடி ஓடி உழைத்து, அந்த வீடு, இந்தக் கார் என வாங்கி ஏதும் மிச்சம் இன்றித் தடுமாறுகிறோம். நாவை அடக்காது விதவிதமான உணவுகளை உண்டு நோயாளி ஆகின்றோம். 

இப்படிப்பட்ட ஆசைகளே துன்பத்துக்குக் காரணம் என்று கூறி ஐம்புல ஆசைகளைத் துறக்கச் சொன்னவர் புத்தர். ஆனால் எல்லோராலும் ஆசைகளைத் துறக்க முடியாது, அது மனித இயல்பு என்பதைக் கண்ட வள்ளுவர் ஆசைகளை அடக்கச் சொல்கிறார். ஆசைகளைத் துறப்பதைவிட அடக்குவது மிகமிக எளிதல்லவா? பொருளைப் எப்படிப் பூட்டிப் பாதுகாகின்றோமோ அது போல ஆசைகளை அடக்கி கொஞ்சம் பூட்டிவைத்தால் அதைவிடப் பெரிய  உயர்வு எமது உயிருக்கு வேறில்லை என்கிறது இக்குறள்.

No comments:

Post a Comment